♥ஆதர்சம் - என்.ஆர். தாசன்
♥ ராஜாராமிற்கு கல்யாண வீட்டிற்குப் போய் வந்த உணர்வைக் காட்டிலும் ஒரு விபத்தைப் பார்த்து வந்த உணர்வு தான் மேலோங்கி நின்றது. கலியாண வீட்டிற்குப் போய் வந்தால் மனதிற்கு எப்பொழுதும் எவ்வளவு சந்தோஷமும், சந்துஷ்டியும் இருக்கும்! சந்தனமும், பன்னீரும், பூக்களும் தனித் தனியாகவும், கலைவையாகவும் மணம் பரப்பி உள்ளே உறங்கிக் கிடைக்கும் நினைவுகளை எல்லாம் உசுப்பி விடும்.
♥ஒரு கேலிப் பேச்சு, அமுத்தலான சிரிப்பு; ரெட்டை அர்த்தமான வசனம் - அவனை உள்ளுக்குள் தோண்டித் தோண்டிப் பார்க்க வைக்கும். மர்மக் கதைப் புத்தகத்தின் பக்கங்களை புரட்டுகிற அவசரமும், சர சரவென ஓடித் தேய்கிற காட்சிகளைக் கண்ணுக்குள் பிடித்துப் போடத் துடிக்கும் ஒரு ரயில் பிரயாணியின் பதட்டமும் அந்த நினைப்பிற்கு இருக்கும்.
♥கீறல்களும், வெடிப்புகளும், கரி இழுப்புக்களும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையினூடே பரிசுத்தமான, பரிபூரணமான ஒரு காட்சியை அம்புக் குறியிட்டுக் காட்டும். ஒரு மாவிலை, தென்னை ஓலை இப்படி அப்படி லேசாக அசைந்தால் அவனுக்கு இறக்கைகள் கிடைத்தது மாதிரி எங்கெல்லாமோ பறந்து வருவான். குடும்பக் கஷ்டமோ, மனைவியுடனான அர்த்தமற்ற மனஸ்தாபமோ, ஆபீஸ் தொல்லையோ மனதில் ஏற்படுத்தும் கனம் கலியாணத்திற்குப் போய் விட்டுத் திரும்பும் போது மறைந்து போகும்.
♥கலங்காமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும், சண்டையும் மனஸ்தாபமும் வன்மமும் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்தவனுக்குத் தேவையற்றதென்றும், சண்டையிட்டவர்களிடமெல்லாம் வலியச் சென்று கண்ணீர் கசிய சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்றும் ஆன்மீக விழிப்போடும், வெளிச்சத்தோடும் வருவது இன்று ஏன் கை கூடாமல் போய் விட்டது? விபத்தைக் கண்டது போல் துக்கமும், அதிர்ச்சியும் அனுதாபமுமே தோன்றின.
♥அவன் இன்று 'காஷ்யுவல் லீவ் எடுத்திருக்கக் கூடாதோ? வழக்கம் போல ஆபீஸில் உள்ளவர்களுக்குத் திருமணம் என்றால் ஒரு மணி நேரம் ' பெர்மிஷன்' எடுத்துக் கொள்வான். அப்படிப் பெர்மிஷன் எடுத்திருந்தால் இப்பொழுது அவன் ஆபீஸ் வேலையின் பரபரப்பில் இவற்றையெல்லாம் மறந்திருக்கக் கூடும்.
அந்த மாப்பிள்ளைப் பையனை நினைக்க நினைக்க அவன் மீது இரக்கமாய் இருந்தது. அவளைப்பற்றி அவன் எவ்வளவு நம்பிக்கையுடன் இருப்பான்! அவள் பொத்திப் பொத்திக் காப்பாற்றி வந்துள்ள அந்தரங்க ரகசியங்கள் எல்லாம் தனக்குத் தான் முதல் முதலாக வெளிப்படுத்தப்பட இருப்பதாக அவன் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கலாம்.
♥அவள் மறைத்துப் பாதுகாத்து வந்த பருவப் பொக்கிஷங்களைத் தனது விரல்களே முதலில் ஸ்பரிசிக்கிற பாக்கியம் பெற்றுள்ளதாக அவன் நெஞ்சு விம்மிப் பூரிக்கலாம். அவன் எவ்வளவு அடக்க ஒடுக்கமானவன் என்பது அவன் மணப்பந்தலில் உட்கார்ந்திருந்த தினுஷிலிருந்தே புரிந்து கொள்ள முடிந்தது. யவ்வனத்துக்கான தவறுக்கலியே செய்தறியாததால் ஏற்பட்ட தெளிவையும், பரிசுத்தத்தையும் அவன் முகம் பளிச்சென்று வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. நண்பர்களின் கிண்டலும், கேலியும் அப்போதப்போது அந்தச் சாந்தமான முகத்தில் சத்தமில்லாத கண்ணியமான சிரிப்பைப் பூவாக மலர்த்திக் கொண்டிருந்தது. அந்தக் கேலிப் பேச்சிற்கெல்லாம் தான் எந்தப் பதிலும் சொல்ல உரிமையற்றவன் போல அவன் இருந்தான்.
♥எல்லாவற்றையும் மனப்பூர்வமாக வாங்கித் தன் பையில் போட்டுக் கொள்ள வேண்டியது. இன்று அவன் ஏற்றுக் கொண்டிருந்த பாத்திரத்துக்கு இயைந்த செயலாக அவனுக்கு இருந்தது, மணப்பந்தலில் உட்கார்ந்தபடியே வருகிறவர்களை எல்லாம் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டிருந்தான். தாலி காட்டுகிற போது கூட தனது கை அவளது கழுத்திலும், தோள் பட்டையிலும், முதுகிலும் படாமல் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் நடந்து கொண்டானே!
இப்படிப் பட்டவனுக்கு? ...
'அடப்பாவி....சகதியை அள்ளி முகத்துல பூசிக்கிட்டையாடா...' என்று எத்தனையோ முறை கத்த வேண்டும் போலிருந்தது. மணப்பந்தலில் பித்தளைத் தாம்பாளங்களில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் சிலவற்றில் பல் பதிவும், சிலவற்றில் எச்சில் ஈரமும், சிலவற்றில் நகக் கிள்ளலும் இருப்பது போல் ராஜாராமின் பார்வையில் பட்டது.
'பட வேண்டியது இவன் பார்வையில் படவில்லையே...?
♥அவன் பார்வையைத் துல்லியமாகக் கணக்கிட எண்ணி, அவனது முழுத்தோற்றமும் கிடைக்கிற இடமாகப் பார்த்து நகர்ந்து போய் உட்கார்ந்தான். ராஜாராம். அந்தப் பார்வையில் பெருமித உணர்ச்சியே ததும்புவதாக அவனுக்குத் தோன்றியது. பக்கத்து வீடுகளில் விசாரித்திருக்க மாட்டார்களா? வீட்டுப் பெரியவர்கள் தான் செய்யவில்லை. இவனாவது இவளைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள முயன்றிருக்க கூடாதா? இவள் வேலை பார்க்கும் ஆபீசில் வந்து விசாரித்தால் ஒவ்வொருத்தனும் அவளை பற்றிச் சொல்லுவதற்கு கட்டுக்கட்டாக, ஃபைல் ஃபைலாக விஷயங்கள் வைத்திருப்பான்!
♥விசாரிக்க வந்திருந்தால்...
அப்படி விசாரிக்க வந்தவனையே 'சட்' டென்று நிமிர்ந்து நோக்கிக் கண்சிமிட்டாமல் பார்ப்பார்கள். அவளைத் தேடி வரும் பலருள் இவனும் கூட ஒருவனாக இருக்குமோ என்ற சந்தேகம் வரும். வந்த நோக்கத்தை விளக்கியதும் அட்டகாசமாகச் சிரிப்பார்கள்.
சரி, அவர்கள் இருக்கட்டும். இந்தப் புஷ்பாவிற்கு மட்டும் கலியாண ஆசை அப்படி திடீரென்று ஏன் தோன்றியது?
புஷ்பாவை நேற்று இன்றா தெரியும்? அந்தத் தெரிதலுக்கு பத்து வயதிற்கு மேலாகி இருக்காதா? வேலை பார்த்த ஆபீஸுக்கு 'டென்- ஏ- ஒன்- கான்டிடேட்டாக வந்து சேர்ந்ததிலிருந்து அவன் அறிவான். டைப்பிஸ்டாகச் சேர்ந்த அவள் பிறகு தான் ஸ்டெனோகிராஃபர் ஆனாள்.அப்படி புஷ்பாவிடம் குறிப்பிட்டுச் சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை.
♥ சராசரி தோற்றம் கொண்டவன் தான். கட்டை குட்டையாக இருப்பாள். கறுப்பென்றும், மாநிறம் என்றும் சொல்ல முடியாத மங்கல் நிறம். முகத்தில் சடை சடைத்துக் கிடைக்கும் பருக்களும், அவை உண்டாக்கிய தழும்புகளும் முகத்தை மட்டும் அதிகம் கறுப்பாக்கிக் காட்டும். அந்த முகமும் குவிந்து குதிரையை நினைவூட்டும். ஆனால் வயதிற்கான 'வளர்ச்சிகள்' இருந்தன. கடைசியில் ஒரு ஆணின் பிரத்யட்ச பார்வையின் கணக்கிற்கு உள்ளடங்குபவை - இவை தான்' என்பதை நிரூபணம் செய்வதற்கு அவளிடமே சம்பவங்கள் எண்ணக் கூடிய அளவிற்கு இருந்தனவே.
♥ஆபீஸிலிருந்த இளவட்டங்கள் எல்லாம் வெறும் பேச்சுடன் நின்று விட்ட போது முதல் முதலாக அவளை வளைத்துப் போடும் சாமர்த்தியம் அந்தக் கிழட்டு வழுக்கைத் தலைவரான அசிஸ்டெண்ட் செக்ரட்டரிக்குத்தான் வாய்த்தது. அவர் ரிட்டையராவதற்கே இன்னும் ஒரு வருஷத்திற்கு குறைவாகத் தான் இருக்கும். அவரது அறைக்கு முன் வைக்கப்பட்டிருந்த மெலிதான பச்சை நிற ஸ்க்ரீன் ஸ்டாண்ட் வழியே ராஜாராம் பார்த்திருக்கிறான். 'டிக்டேஷன்' கொடுக்கும் போது இடை இடையில் யோசிப்பதாக பாவனை காட்டிக் கொண்டு தனது இடது கை உள்ளங்கையில் அவளது வலது கையை எடுத்து வைத்துக் கொண்டு தனது மற்றொரு கையால் செல்லமாகப் பொத்திப் பொத்தித் தட்டிக் கொடுப்பார். மொச மொசவென ரோமம் அடர்ந்து உருண்டு ' கிண்'ணென்று முன் கையிலிருந்து சதை பூச்சை புஜம் வரை வருடிக் கொண்டிருப்பார்.
♥யாருக்கேனும் தன்னைப் பற்றி சந்தேகம் துளிர்க்கக் கூடாது என்பதற்காக சில அசிஸ்டெண்டுகள், சூப்பிரெண்டுகளுக்கு முன்பு கூட அவளைத் தொட்டு தன் 'கற்புத்தனத்தை' ருசுப்படுத்திக் கொள்ள முயல்வார். தான் கொடுத்த டிக்டேஷன்களை தவறாக எடுத்து, டைப்பிடித்து வைக்கும் போது இந்த அருமையான சந்தர்ப்பங்கள் அவருக்கு கிட்டும். தலையில் குட்டப் போவது போல் கையை உயர்த்திக் செல்லமாகக் கன்னத்தைக் கிள்ளுவார். அந்த விரல்கள் பலமற்றுப் பூவைப் போல இருக்கும். ஆனல் கண்களிலும், உதடுகளிலும் கொத்தித் தின்னத் துடிக்கும் வேகமும் வெறியும் கொண்ட கொடிய பறவைகளைப் பார்க்க முடியும்.
♥இந்த துவக்க விழாவிற்குப் பின் இளவட்டங்கள் விழித்துக் கொண்டார்கள்.
எஸ்டாபிளிஷ்மென்ட்' செக்க்ஷனில் இருந்த ஜுனியர் அசிஸ்டன்ட் ராஜாகோபால் புஷ்பாவை அந்தரங்க சுத்தியுடன் காதலித்தான். கடிதம் எழுதிக் கொடுப்பான்.; பீச்சிற்கு கூட்டிப் போவான்; சினிமாவிற்கு அழைத்துப் போவான். அத்துடன் சரி; அதற்கு மேல் ஒரு அங்குலம் மேலெடுத்து வைக்க மாட்டான்.
'இப்படியே கூட்டிக்கிட்டே திரிய்யா...ஏதோ ரெண்டு நா சுத்திக்கிட்டிருந்தோம். சட்டு புட்டுன்னு வேலையே முடிச்சோம்னு இல்லாமே..." என்று ஆபீசில் அவன் நண்பன் கேலி பேசினால், 'சீச்சீ ' என்று ராஜகோபால் முகத்தைச் சுளித்து அசூயையை வெளிக்காட்டுவான்.
"அசிங்கம் அசிங்கமா பேசாதையா" என்று ரொம்பவும் தயவுடன் வேண்டிக் கொள்வான்..
"
♥அடப்பாவி மனுஷா .. சுத்த யூஸ்லஸ் மேனா இருக்கையே, காதலிக்கிறது, கலியாணம் பண்ணிக்கிறது எல்லாம் கடைசியில அந்த அசிங்கம் பண்றதுக்குத் தான்யா..." என்று நண்பன் சொல்வதை நம்ப முடியாமல் திகைத்து நிற்பான்.
எஸ்டாபிளிஷ்மென்ட் செக்க்ஷனில் இருந்த சூப்பிரெண்டுக்கும் அவள் மீது கண் இருந்தது.
ஒரு பொம்பளே கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கானு தெரிஞ்சாலே ஒவ்வொருத்தனுக்கும் சபலம் வரவே செய்யுது. ஆத்துல போற தண்ணியே அம்மா குடிச்சா என்ன, ஆத்தா குடிச்சா என்னங்கற மனோபாவமோ? என்று ராஜாராமிற்கு நினைத்துப் பார்க்கத் தோன்றும். இந்த சூப்பிரண்ட், ராஜகோபால் மாதிரி இல்லை; காரியக்காரன். கடிதம் எழுதுவது, சினிமாவுக்கு கூட்டிப் போவது இத்யாதி எல்லாம் ஒரு ஹைஸ்கூல் மாணவனின் காரியங்கள் என்பது அவனது தீர்க்கமான முடிவு.ஃபைல்களை அஸ்திரங்களாகப் பிரயோகிக்கும் வித்தை அவனுக்கு கைவந்த ஒன்று. முதலில் ராஜகோபாலன் மீது குறி வைத்தான். அவன் எழுதி போடும் ஃபைல்களில் எல்லாம் விழுந்து குதறினான்.
♥ஒரு நாள் இரண்டு நாட்கள் தாமதங்களைக் கூட 'நோட்'களில் கருப்பு மையில் லட்டு மாதிரி அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துக் போய், முகாந்திரம் கேட்க வைத்தான். நாட்சாடிஸ் ஃபாக்டரி' 'வார்ன்ட்' என்றெல்லாம் அதிகாரிகள் பச்சை மையிலும், சிவப்பு மையிலும் குதறிப் போடச் செய்திருக்கிறான். அந்த நிர்பந்தம் ராஜகோபாலுக்கும், புஷ்பாவுக்கு இடையில் கத்தரிக் கோலாக இருக்க வேண்டும் என்பது தான் அவன் குறி.
ஆபீஸில் இருக்கும் அத்தனை போரையும் ஏதோ ஒரு வழியில் சுருக்கிட்டு இழுக்கிற சூட்சுமக் கயிறு எஸ்டாபிளிஷ்மென்ட் செக்க்ஷனில் இருக்கும் போது புஷ்பா மட்டும் தப்பி விட முடியுமா? ஒருநாள் தாமதமாக வர மாட்டாளா? முன் அனுமதி பெறாமல் காஷ்யூவல் லீவ் கொடுத்து விட முடியாமல் ஆப்சென்ட்டாக இருக்க மாட்டாளா? அத்தனைக்கும் மெமோக்கள் தரப்பட்டன. அவள் டெம்பரரியாக இருந்ததால், 'ஏன் ஊஸ்ட் செய்யக்கூடாது' என்று கூடக் கேட்கப்பட்டது. அசிஸ்டன்ட் செக்ரட்டரி அப்படி இப்படி என்று அவளுக்குப் பாதுகாப்புத் தர முயன்றார். இவனது பிடிவாதம் அவரைப் பணிய வைத்தது.
ஒரு நிர்பந்தத்திற்கான தர்க்க பூர்வமான விளைவு சம்பவித்தது. புஷ்பா அவனைச் சுற்றிச் சுற்றி வந்தாள். அவன் அவளை வீட்டிற்கே கூட்டிச் சென்றான். இரவு தங்கலுக்கு வசதியான ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றான். அவன் இதிலெல்லாம் ரொம்பவும் தாராளம். ஸ்கூட்டரில் அவனுடன் பின்னால் உட்கார்ந்து ஒரு ஹோட்டலில் இறங்கியதை பார்த்த அன்று தான் ராஜகோபாலுக்கு விழிப்புத் தட்டியது.
"
♥வேலே பாக்குற பொம்பளைகள்ல நூத்துக்கு ஒருத்தியாவது யோக்கியமா இருப்பாளான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு...என்று அதன் பிறகு ராஜகோபாலன் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் பேசிப் பேசித் தன் விரக்தியைக் காட்டிக் கொண்டான்.
புஷ்பா பிறகு சர்வீஸ் கமிஷன் பரீட்சையில் தேர்வு பெற்று சென்னை ஆபீஸ் ஒன்றில் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட போதும், அவளது நடவடிக்கைகளை அறியும் வாய்ப்பு ராஜாராமிற்கு கிட்டியுள்ளது. அவன் குடியிருந்த தெருவில் தான் அவளும் வாடகைக்கு இருந்தாள்.
அப்படிப் பட்டவளுக்கு இன்று ரகசியமாக இல்லாமல் பகிரங்கமாக பத்திரிகை அடித்து, ஐயர் வைத்து, அம்மி மிதித்து, அவளை பற்றித் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் கூடி....மாப்பிள்ளைப் பையன் மீது இரக்கம் இரக்கமாக வந்தது. அவனைத் தோளோடு சேர்த்துக் கட்டிக் கொண்டு, முதுகில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்து கசியும் கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் அடைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
மனம் புழுங்கிக் காய்ந்தது, வெக்கை தாங்க முடியாததாக இருந்தது. தடித்த இருள் மேலே அடுக்கிக் கொண்டு தன் முழு பலத்தையும் கொண்டு அழுத்தியது.
ராஜாராம் பல்கலைக் கடித்துக் கொண்டு உடம்பை நெளித்து முறுக்கினான்.
திடீரென அவனுள் கட்டு மெழுகுவர்த்திகள் பற்றிக் கொண்டு எரிவது போல் இருந்தன. வெளிச்சம் நாயைத் துரத்துவது போல் இருளை விரட்டியது.
♥இப்பொழுது புஷ்பா மாறுபட்ட தோற்றத்தில் இருப்பதாக ராஜாராமின் பார்வையில் பட்டது.
அவளுக்கே தன் பழைய வாழ்வு ஏன் கசந்து வெறுத்துப் போயிருக்கக் கூடாது? பழங்கணக்குகளை அடித்து ஒதுக்கி விட்டு புதுக்கணக்கு துவங்கும் மனமாற்றம் அவளுக்கே ஏன் ஏற்பட்டிருக்கக் கூடாது?
தன் மீதே காறித்துப்பிக் கொண்டு , கண்ணீர் மல்க ஆத்மக் கசிவுடன், அந்தரங்க சுத்தியுடன் வரும் எந்த மாற்றத்தையும் வரவேற்கத் தயங்குவது கொடுமையல்லவா? மாற்றம் நேர்கிற நிமிஷமே,
மதிக்கப்பட வேண்டிய நிமிஷமல்லவா?
அவனை மட்டும் ஏன் ஏமாளியாக நினைக்க வேண்டும்? பழைய கணக்குகள் காலாவதியானவை என்றும், ஜீவநர்த்தனம் புரியும் இந்த வாழ்வுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்றும் கேட்கிற ஆதர்ஷ மனிதனான அவன் ஏன் இருக்கக் கூடாது?
நேரம் நகர்ந்தது.
♥ராஜாராம் கண்களை இறுக்க மூடிக் கொண்டான். தீபக் கொழுந்தாய் மனம் ஒன்றிக் குவிந்தது.
இதுவரை அவளை பத்தி அவனுக்கு ஒன்னும் தெரியாதது போல இனியும் தெரியாமே இருக்கணும்....தெரிஞ்சாலும் பழைய கணக்கு' ன்னு ஒதுக்கி விட்டுப் போற ஆதர்ஷ மனுஷனா இருக்கனும்...."
இதைத் திரும்பத் திரும்ப நினைத்த போது அது பிரார்த்தனை போல உள்ளுக்குள் சப்தித்தது.
அவனுக்கு இப்பொழுது கோவிலுக்குப் போக வேண்டும் போல் இருந்தது.
காலையிலோ, மாலையிலோ கோவிலுக்குப் போவதை அவன் நியமமாகக் கொண்டவனல்ல.
எப்போதாவது விசேஷக் காரணம் இருக்கும் போது தான் மனம் அப்படி ஆசைப்படும்.
இன்று விசேஷமான காரணம் இருப்பதாக அவனுக்கு உறுதிப் பட்டிருக்கிறது.
0 Comments
Thank you