HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வினை

வினை!
♥வரிசையாக அடுக்கி வைத்த, பெட்டிகளைப் போன்ற, குடிசைகளுக்கு நடுவே, கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்றது, அந்த ஓட்டு வீடு. அந்த, "ஓட்டு அரண்மனை' முனியம்மாவின், சாம்ராஜ்ஜியம். கண்விழித்திருக்கும் நேரமெல்லாம், அவளது ஓங்கிய குரல், கர்ண கடூரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும். "இவள் தூங்க மாட்டாளா அல்லது எங்காவது செல்ல மாட்டாளா...' என்று, அந்த வீட்டின் சுவர்கள் கூட, அழுவதுண்டு.
♥இன்றும் அப்படித்தான், யாரையோ தீவிரமாக வசை பாடிக் கொண்டே, பழைய சோற்றை அள்ளித் தட்டில் வைத்து, கடித்துக் கொள்ள வெங்காயத்துடன், மகன் கோபாலிடம் நீட்டினாள் முனியம்மா. ஐந்து நிமிடங்களில், தட்டைக் காலி செய்து விட்டான் கோபால்.
"எலே கோவாலு...'
ஸ்கூல் பையை மாட்டிக் கொண்டு, கிளம்பத் தயாராக நின்ற கோபால், திரும்பிப் பார்த்தான்.
"இன்னா வோணும்?'
"இன்னிக்கு, அரை நாளு லீவு கேட்டுக்கின்னு ஓடியா... படத்துக்கு போவணும்...'
"இன்னா சொல்லி லீவு கேக்கறது?'
"ஆயா செத்திருச்சு. ஊருக்கு போவணும்ன்னு சொல்லு...'
"இத்தைச் சொல்லி, போன மாசந்தானே லீவு போட்டேன்!'
♥"அது... அப்பனைப் பெத்த ஆயா. இது, ஆத்தாளை பெத்த ஆயான்னு சொல்லு. இல்லே, வவுத்து நோவுன்னு எதையானும் சொல்லித் தொலையேண்டா, கூறுகெட்ட குப்பை. இதெல்லாமா ஒனக்கு நான் சொல்லித் தரணும்?'
"வவுத்து நோவுன்னே சொல்லிக்கறேன் ஆத்தா...'
"சீக்கிரமா வந்துர்றா...' முனியம்மாவின் குரல், அவனை எட்டும் நேரத்தில், அவன், நாலு வீடு தாண்டியிருந்தான்.
மதியம், சினிமா தியேட்டர் நிரம்பி வழிந்தது. எப்படியோ, யார் கூச்சலையும் பொருட்படுத் தாமல், அடாவடித்தனமாக முன்னால் நுழைந்து, டிக்கெட்டுகளை வாங்கி விட்டாள் முனியம்மா...
♥"காலைலே பத்து மணிலேயிருந்து, இங்கே வந்து காத்துக்கிட்டிருக்கான் என் புள்ளே. இங்கே வெய்யிலா இருக்குதுன்னு, அப்படி நெழல்லே குந்திகிட்டிந்தான்... சொல்லித் தொலையேண்டா இதுங்களுக்கு...' என்று, ஒரு உலுக்கு உலுக்கினாள் கோபாலை.
"ஆமாம் ஆமாம்' என்று, ஓணான் மாதிரி, தலையை மேலும், கீழும் ஆட்டினான் கோபால்.
"பேசவந்துட்டாளுங்க, வாயை மூடிக்கிட்டு கெடங்கடி...' என்று, மகனை இழுத்துக் கொண்டு, வசதியான இருக்கையை பிடிப்பதற் காக, தடதடவென்று ஓடினாள்.
இந்தப் படத்தை, முனியம்மா இரண்டாம் முறையாக பார்க்கிறாள். படம் பார்க்கும் போதும், முனியம்மாவின் வாய் மூடவில்லை. வரப்போகும் காட்சிகளைப் பற்றி, வாய் ஓயாமல், மகனிடம் அறிவித்துக் கொண்டே இருந்தாள்.
♥"புருஷனை கைக்குள்ளே போட்டுக்கின்னு, கொளுந்தனை வீட்டை விட்டு வெரட்டறா பாரு, இந்த சிறுக்கி. அவன் சும்மா இருப்பானா... சாமியார் வேஷம் போட்டுக்கின்னு வருவான். பூசை போடணும், அத்தைக் கொண்டா, இத்தைக் கொண்டான்னு சொல்லி, இவளை, எப்படியெல்லாம் ஏமாத்தி, ஆட்டி வைப்பான் பாரு...'
அம்மாவின் பேச்சும், படத்தின் வசனங்களும், ஒரே நேரத்தில், கோபாலின் மண்டைக்குள் புகுந்து, அவன் மூளையில், ஏதேதோ அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. முனியம்மா பேசுவதைக் கேட்டு, பலருக்கு எரிச்சல். முன் சீட்டில் அமர்ந்திருந்தவள், திரும்பி பார்த்து முணுமுணுத்தாள்.
"தே... கொஞ்சம் சும்மா இரு...'
அரையிருட்டில், அவளை உற்று நோக்கினாள் முனியம்மா.
♥"யாரு... மீனாட்சியாடி நீ? புருஷனுக்கு தெரியாம, இங்கே வந்துக்கீறே... ஒரு வார்த்தை, அவங்கிட்டே சொல்லிப் போட்டேன்னா, துணி துவைக்கிற மாதிரி, உன்னை துவைச்சுப் புடுவான்!'
மீனாட்சியின் பக்கத்திலிருந்தவள், அவள் காதில் கிசுகிசுத்தாள்...
"இந்த கிராதகியோட பேசாதே...'
தொடர்ந்து, முனியம்மாவின், ஓயாத கமென்டரியுடன், படம் முடிவடைந்தது.
முனியம்மாவும், கோபாலும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில், ஒவ்வொருவர் வீட்டுத் தோட்டத்தையும், அவர்கள் கண்கள், மேய்ந்து கொண்டு வந்தன. ஒரு வீட்டின் தோட்டத்தில், மாமரமும், முருங்கை மரமும் காய்த்துக் குலுங்கின. வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்து வீடுகளும், உள்ளே தாழிடப்பட்டிருந்தன.
♥"எலே கோவாலு வூட்ல யாரும் இல்லடா...'
வீட்டிற்கு வெளியே, காடாக வளர்ந்திருந்த செடிகளிலிருந்து, ஒரு நீண்ட, உறுதியான தண்டை, முனியம்மா, "படக்' கென உடைத்தாள். இன்னொரு சிறிய துண்டை, அதன் நுனியில், கொக்கி போல் இணைத்தாள். கீழே கிடந்த ஒரு துருபிடித்த கம்பியை எடுத்து, வளைத்து கட்டி, ஒரு துறட்டுக்கோலை, நொடியில் தயார் செய்து விட்டாள்.
"நான் இசுக்கிறேன்... நீ பறிடா...'
முதலில், ஏழெட்டு முருங்கைக் காய்கள், பின் மாங்காய் அறுவடை.
எதிர் வீட்டு மாடி ஜன்னல் திறந்தது. அதன் வழியே, ஒரு தலை தெரிந்தது.
"யாரது காய் அறுக்கறது?'
"ஆத்தா... அவங்க பாத்துட்டாங்க...' கோபால் முகத்தில் பயம்.
♥"ஏண்டா பயந்து சாவுறே?' என்றவள், நிமிர்ந்து பார்த்து, "உன் வூட்டு சொத்தா கொள்ளை போவுது? கம்முன்னு கெட. இல்லாட்டி, ராவோட ராவா, உன் வூட்டு கண்ணாடி ஜன்னல் எகிறிப்பூடும்...' என்று சொல்லிக் கொண்டே, நடந்தாள்.
அந்த வீட்டில், வாடகைக்கு குடியிருந்த அந்தப் பெண்மணி, பயந்து, ஜன்னலை உடனே மூடிக் கொண்டாள்.
முனியம்மா முகத்தில் வெற்றிச் சிரிப்பு. கோபால், தன் தாயைப் பார்த்த பார்வையில், பிரமிப்பு.
"அக்கம் பக்கத்துலே ஈ, காக்கா இல்லே. இந்த ஒத்தைப் பொம்பளையை சமாளிக்கறதா கஷ்டம்... இதுக்கெல்லாம் பயந்து சாவக்கூடாதுடா...'
♥"ஒரு மாசம், ஊறுகாய்க்கு ஆவும் இல்லே ஆத்தா?' ஏதோ, தன் வீட்டுத் தோட்டத்தில், தானே பயிர் செய்து, பறித்தது போல், மாங்காய் பையை, தன் நெஞ்சோடு பெருமையாக அணைத்துக் கொண்டு, நடந்தான் கோபால்.
முனியம்மா, மார்க்கெட்டில் மொத்தமாக காய்கறிகள், பழங்கள் வாங்கி வந்து, கூறு கட்டி விற்பவள். சரியான நாட்டுக் கட்டை. ஒரு மூட்டை காய்கறிகளை, அநாயசமாக, ஒரு கையால், பஸ்சிலிருந்து இறக்கி வைப்பாள். ஆண்கள் கூட அதிசயிக்கும் பலசாலி. பெண்மை உடம்பில் இருந்தாலும், குரலிலும், பேச்சிலும் ஆண்மையின் மதர்ப்பு தெறிக்கும். "நாலு ஆம்பிளைங்களை அழிச்சு, ஒரு பொம்பளை' என்று, அவள் வட்டாரத்து பெண்கள் பேசிக் கொள்வர்.
♥அவளுடைய புருஷன், மாயாண்டி கட்டட வேலை செய்பவன். வாங்கும் சம்பளத்தை, பீடி, சாராயத்தில் கோட்டை விடுவான். இப்போதெல்லாம், அவனால் முன் போல், வேலை செய்ய முடிவதில்லை. உடல் உளுத்துப் போய் கொண்டே வந்தது. வாய் ஓயாத இருமல் வேறு. வருமானம் குறைந்து, வைத்தியச் செலவும் கூடிக் கொண்டே வந்தது. போதையில், உளறிக் கொண்டே வீட்டுக்கு வருவான். இருப்பதை கரைத்துக் குடித்துவிட்டு, ஒரு பக்கம் உருண்டு கிடப்பான். காலையில், அவன் கண் விழிக்கும்போது, முனியம்மா மார்க்கெட்டுக்குச் சென்றிருப்பாள்.
♥இரவில் தப்பித் தவறி, என்றாவது முனியம்மாவிடம், மாயாண்டி குழைந்து கொண்டு வந்தால், முனியம்மா பாம்பு போல் சீறுவாள். "இதப் பாரு நீ இருக்கிற பவிசுக்கு, போட்டதைத் தின்னுப்புட்டு, மொடங்கிக் கெடந்தியோ பொளச்சே... அதுக்கு மிஞ்சி, புருசன்னு ஒறவு கொண்டாடிக்கின்னு கிட்டே வந்தியோ, தூக்கி வெளியிலே கடாசிடுவேன்...' சொல்வதைச் செய்யக் கூடியவள் அவள் என்பதால், இதற்கு மேல், ஒதுங்கும் இடத்தையும் இழக்க தைரியமில்லாமல், அவன் சுருண்டு விடுவான்.
♥பட்டி தொட்டியெல்லாம், குடும்ப நல திட்டம் பற்றிய அறிவுரைகள், அலறிக் கொண்டிருக்கும் போதும், அவற்றைக் கடைப்பிடிக்க முடியாமல், எத்தனையோ பெண்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கோபால் பிறந்த பின், குடிகாரப் புருஷனை ஒதுக்கி வைத்தே, முனியம்மா, குடும்ப நல திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினாள். அவள் உடல் பலமும், வாய் பலமும்தான், அவள் சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேர்கள். எக்காரணம் கொண்டும், அதற்கு பங்கம் வந்துவிடாமல், காப்பாற்றிக் கொண்டாள் அவள்.
♥ஒரு நாள், வழக்கமாக கடைபோடும் இடத்தில், சரக்கை இறக்கி விட்டு அமர்ந்தாள் முனியம்மா. புடவைத் தலைப்பால் முகத்தையும், பின், தான் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தியையும் அழுந்தத் துடைத்தாள். அந்த வட்டாரத்திலேயே, கல் பதித்த தங்கக் கம்மல், மூக்குத்தியை அணிந்திருந்தவள், அவள் ஒருத்திதான். இவை, அவள் சிறுகச் சிறுக பணம் சேர்த்து, வாங்கிக் கொண்டவை. "தங்கத் தோட்டுக்காரி' என்று, அவள் பேச்சுக்குப் பேச்சு, தன் பெருமையை, தானே பறை சாற்றிக் கொள்வாள்.
♥பார்வையை சுற்றுமுற்றும் சுழற்றினாள். வழக்கமாக, அந்தத் தெருவில், அவளைத் தவிர, வேறு யாரும் கடை போட மாட்டார்கள். அவள் பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டு, அரைபடும் தைரியம், யாருக்கும் கிடையாது. தேவானை, அந்தப் பேட்டைக்குப் புதியவள். அருகில் கடை பரத்தி, காய்கறிகளை, கூறு கட்ட ஆரம்பித்திருந்தாள்.
"எவடி அவ... என் சோத்துலே, மண்ணைப் போட வந்தவ... என்னா தெனாவட்டு இருந்தா, இங்கே கடை போடுவ?'
"இல்லேக்கா நான்...' முடிக்கவில்லை தேவானை.
♥"வாடீ என் சக்களத்தி... ஒனக்கு நான் அக்காவாடீ? இந்த இளிப்பெல்லாம் இங்கே வச்சுக்காதே... என் வவுறு எரிஞ்சுதோ, நீ நாசமா பூடுவே...' என்று, மண்ணை வாரித் தூற்றினாள். தொடர்ந்து, அவள் பிரயோகித்த வார்த்தைகள், உலகின் எந்த அகராதியிலும், இல்லாதவை.
சூடு, சுரணை உள்ளவர்களின், எலும்புகளைக் கூட ஊடுருவிச் சென்று, கூசச் செய்யும் வல்லமை படைத்தவை. தேவானை முகம் வெளுத்து, அவசர அவசரமாக மூட்டையைக் கட்டினாள். அவள் தெரு முனையைத் தாண்டும் வரை, முனியம்மாவின் குரல், அவளைத் துரத்தித் தாக்கியது. வேடிக்கைப் பார்த்த சிலர், முனியம்மாவின் நெருப்புப் பார்வையில் அரண்டு போய், முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.
♥அன்று மதியம், முனியம்மா குடிசை வாசலில் அமர்ந்து, அரிசியில் நெல் மணிகளை பொறுக்கிக் கொண்டிருந்தாள். "கக் கக்' என்று, சத்தம் கேட்டது. அவள் வீசி எறிந்த, நெல் மணிகளுக்காக ஓடி வந்தது, அஞ்சலை வீட்டுக் கோழி. நெல்லைக் கொத்திய கோழியை, யோசனையுடன் பார்த்தாள் முனியம்மா. அஞ்சலையின் வீட்டு வாசல் மூடியிருந்தது. தெரு வெறிச்சோடியிருந்தது. ஒரே நிமிடத்தில், கோழியின் கழுத்தைப் பிடித்து, உள்ளே எடுத்துச் சென்றவள், அரிவாளை எடுத்து, அதிகம் அலற விடாமல், அதன் கதையை, ஒரே வீச்சில் முடித்தாள்.
♥அன்று மாலை, கோழியைத் தேடிக் கொண்டே வந்தாள் அஞ்சலை. பள்ளியிலிருந்து வந்து விட்டான் கோபால்.
"என் கோழியைப் பார்த்தீங்களா?'
"பகல்லே கூட வாயைப் பொளந்துகிட்டு தூங்குவே. கோழியைத் திரியவுட்டுட்டு, ஏண்டீ... இங்கே வந்து கேக்குறே? ஒன் கோழி எனக்கு எதுக்கு டீ? தங்கத் தோட்டுக்காரிடீ நான். நான் ஒன்னையெல்லாம் மதிச்சு, பதில் சொல்றேன் பாரு... நீ இதுவும் கேப்பே இன்னமும் கேப்பே...'
"எங்கனாச்சும் பார்த்தீங்களான்னுதான் கேட் டேன்; கோவிச்சுக்காதீங்க...'
ஏமாற்றத்துடன் திரும்பினாள், அஞ்சலை.
உள்ளே நறுக்கி வைத்திருந்த கோழியை, ஆச்சரியத்துடன் பார்த்த கோபாலுக்கு, தன் பிரதாபத்தை விளக்கிச் சிரித்தாள் முனியம்மா. அவனும் சேர்ந்து, விழுந்து விழுந்து சிரித்தான்.
♥இரவு, சோற்றில் மணக்க மணக்க, கோழிக் குழம்பை ஊற்றி, இருவரும் நக்கி நக்கி சாப்பிட்டனர்.
"நைனாவுக்கு கொளம்பு இல்லியா ஆத்தா?' கேட்டான் கோபால்.
"இதப்பாரு... நீ வளர்ற புள்ளே, நான் ஒழைக்கற கட்டே. நாம சாப்பிடுவோம். ஒங்கப்பன் ஊத்திக்கின்னு, ஆடிக்கின்னு வரும். நாக்குலே சொரணையா கீது அதுக்கு? அத்த வுடு. நீ சாப்பிடு ராசா...' என்ற முனியம்மா, குழம்புப் பாத்திரத்தை, அவன் தட்டில் கவிழ்த்து காலி செய்தாள்.
அன்று பிள்ளையார் கோவில் வாசலில், நிறைய சிதறு தேங்காய் உடைத்தனர்.
♥அம்மாவும், பிள்ளையும் வேறு யாருக்கும் இடம் கொடுக்காமல், பாய்ந்து பாய்ந்து பொறுக்கினர். கோவிலுக்கு வந்த ஒரு பெரியவர், தன் சட்டைப் பையிலிருந்து, கைக்குட்டையை எடுத்த போது, கீழே விழுந்த, 50 ரூபாய் தாளை, கோபாலைத் தவிர, வேறு யாரும் கவனிக்கவில்லை. கீழே விழுந்து வணங்கும் சாக்கில், அதை எடுத்த கோபால், தாயிடம் கொடுத்தபோது, அவள் மகிழ்ந்து போனாள்.
"தேறிட்டடா மவனே...' என்று கூறி, திருஷ்டி கழித்தாள்.
"ஆத்தா... அதிசயமா கோவிலாண்ட வந்ததுக்கு, சாமி, தேங்காயும் குடுத்து, துட்டும் குடுக்குது...' என்று சொல்லி, பிள்ளையாரைப் பார்த்து சிரித்தான் கோபால்.
♥சிறுவன் கோபால், தற்போது வாலிபனாக வளர்ந்து விட்டான். ஐந்தாம் வகுப்புடன், படிப்பை மூட்டை கட்டி விட்டான். சிலம்பம், தண்டால், பஸ்கி தவிர, வேறு சில சண்டைகளையும் கற்றுக் கொடுக்கும், வேலப்பரிடம் சிஷ்யனாக சேர்ந்தான். அவருக்காகவும், அவர் குடும்பத்துக்காகவும் நிறைய எடுபிடி வேலைகள் செய்தான். அவருக்கு, "லேவா தேவி' தொழிலும் உண்டு. அவருக்காக, கடன்களைத் திரும்ப வசூலித்துக் கொடுத்தான். பதிலுக்கு, அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டான்.
தற்போதெல்லாம், அவன் காசு, பணத்துக்காகத் தாயிடம் கையேந்துவதில்லை.
♥உள்ளூர் பிரமுகர்களிடம், அடியாளாக வேலை பார்க்கத் துவங்கினான். அடிதடிக்கு எங்கெல்லாம் ஆள் தேவைப்பட்டதோ, அங்கெல்லாம் முதல் ஆளாக நின்றான். பயந்தவர்களை மிரட்டி உருட்டியே, தன் சாப்பாடு, டீ, நாஸ்தா, பீடி, சிகரெட் என, எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டான். மொத்தத்தில், "பேட்டை வாத்தியார்' அந்தஸ்துக்கு, உயர்ந்து விட்டான்.
♥உடற்பயிற்சிகளினால், உரமேறிய திரண்ட தோள்களுடன், வளர்ந்து நின்ற மகனை, இப்@பாதெல்லாம் பெருமையாகப் பார்க்கிறாள் முனியம்மா. "எலே, வாடா, போடா' எல்லாம் போய்விட்டது. "வாய்யா' என்று, வாஞ்சையுடன் அழைக்கிறாள். ஒரு, "ஹீரோ'வைப் பார்ப்பது போல், அவனைப் பார்க்கிறாள். "நீ என்ன செய்யறே எவ்வளவு சம்பாதிக்கறே...' எதுவும் கேட்பதில்லை; அவனும் எதுவும் சொல்வதில்லை.
♥மகன் வளர வளர, மாயாண்டி தேய்ந்து கொண்டே வந்தான். குடியும், பீடியும் அவன் குடலையும், நுரையீரலையும் தின்று விட்டன. ஒரு நாள், வாய் ஓயாமல் இருமி, தூக்கத்திலேயே அடங்கிப் போய் விட்டான். உயிரோடு இருந்த வரை, அவனைக் குப்பை போல் ஒதுக்கி வைத்திருந்த முனியம்மா, அவனை வெகு விமரிசையாக வழியனுப்பி வைத்தாள். ஊரே மூக்கு மேல் விரல் வைத்து, "உதவாக்கரை புருஷனுக்கு, இத்தினி அமர்க்களமா...' என்று அதிசயித்தது.
கொஞ்ச நாட்களாக முனியம்மா, தன் பிள்ளைக்கு, மும்முரமாக வரன் தேட ஆரம்பித்திருந்தாள்.
♥தோழி மணிமேகலையின் பெண் வள்ளியை, முனியம்மாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. "சாதுப் பொண்ணு. நம்ம ஊட்டுக்கு தோதா இருக்கும். கோவாலுக்கு ஏத்த சோடி தான்...'
கோபாலின் திருமணம் அமர்க்களமாக நடந்தது. முனியம்மாவின் கணிப்பு பொய்க்கவில்லை. இப்போதும், அந்த வீட்டில் முனியம்மாவின் குரல் தான் ஓங்கி ஒலித்தது. அவள் என்ன புலம்பினாலும், வள்ளி, அவளை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டாள். ஊருக்கே சிம்ம சொப்பனமாக, விளங்கிய முனியம்மா, தன் மருமகளுக்கு, அருமையான மாமியாராக விளங்கினாள். அவளுக்குத் தலை வாரி விட்டாள். எண்ணெய் தேய்த்து விட்டாள்.
♥அவள், "முழுகாமல்' இருந்தபோது, வாய்க்கு ருசியாய், வகை வகையாய், வாங்கிக் கொடுத்தாள். பூச்சூட்டி, வளையடுக்கி, பிறந்தகத்துக்கு அனுப்பி வைத்தாள்.
அன்று எண்ணெய் தேய்த்து, தலை முழுகிவிட்டு வந்த முனியம்மா, ஒரு டப்பாவுக்குள் தான் கழற்றி வைத்து விட்டுப் போன மூக்குத்தி, கம்மல்களைக் காணாமல் திடுக்கிட்டாள். ஒரு இடம் விடாமல் தேடினாள். வீட்டின் கதவு, சார்த்தியபடியே தான் இருந்தது. தூரத்தில் விளையாடிய குழந்தைகளைக் கேட்டாள்.
""யாருனாச்சும், என் ஊட்டுப் பக்கம் வந்தாங்களா?''
♥""நாங்க யாரையும் பார்க்கலே ஆயா.''
சிறிது நேரம் கழித்து வந்த கோபாலிடம் சொல்லி அழுதாள். அவனும், அக்கம் பக்கத்தில், சிலரை மிரட்டிக் கேட்டான். ஊஹூம், ஒன்றும் பலனில்லை. போனது போனது தான்.
பேரன் பிறந்து விட்டான். முனியம்மாவுக்குத் தரையில் கால் பாவவில்லை. சிறுவாட்டுத் தொகையைக் கொண்டு, பேரனுக்கு வெள்ளியில், ஒரு அரை ஞாண் கொடி வாங்கினாள். கோபாலிடம் சொன்னாள், ""நாளைக்குப் பேரனைப் பார்க்க போவணும், ஒரு புதுச் சட்டை வாங்கியா.''
இரவு வீடு திரும்பிய கோபால், அவளிடம் ஒரு பையைக் கொடுத்தான். ""பாரு ஆத்தா.''
வள்ளிக்குப் புதுப் புடவை, பேரனுக்குப் புதுச் சட்டை, பழங்கள் தவிர, இரண்டு அட்டைப் பெட்டிகள். பிரித்துக் காண்பித்தான். மங்கிய விளக்கு வெளிச்சத்தில், முக்கால் பவுனில், ஒரு மெல்லிய சங்கிலியும், ஒரு குட்டி மோதிரமும் தகதகத்தன. வியப்புடன் மகனை ஏறிட்டாள்.
♥""ஏது, இம்மாம் பணம்.''
""நான் சம்பாதிச்சதும்மா. என் பொஞ்சாதி என்னை மதிக்க வேணாம்... வக்கத்த ஆம்பளைக்கு, வெளக்கு மாத்துக்கு இருக்கற மருவாதி தானே இருக்கும்? எங்கப்பனைப் பார்க்கலியா நான், அத்த வுடு... எப்படி இருக்கு சொல்லு.''
""நல்லா இருக்குடா!'' என்று சொன்ன முனியம்மாவின் விரல்கள், நடுங்கின; குரல் குழறியது. மகன் தன்னை மறைமுகமாகத் தாக்க ஆரம்பித்திருப்பது போல் தோன்றியது.
♥தூங்கி விட்டான் கோபால். முனியம்மாவுக்குத் தூக்கம் வரவில்லை. "இவ்வளவு பணம் எப்படி புரட்டினான்?' இக்கேள்வி, பெரும் புதிராக அவள் மனத்தைக் குடைந்தது. புதிருக்குக் கிடைத்த விடையோ, அவள் நெஞ்சை பிளந்தது. தன் நகைகள் உருமாறி, பேரனுக்குப் போய்ச் சேருவதைப் பற்றி, அவள் வருந்தவில்லை. பெற்ற மகனாலேயே, முகத்தில் கரி பூசப்பட்டு, முட்டாளாக்கப்பட்ட அவலத்தை தான் பொறுக்க முடியவில்லை.
"தீட்டின மரத்தைப் பதம் பாத்துட்டானே பாவிப் பய!'
அவள் குணங்களின் விசுவரூபம் தான், அவள் மகன். அதன், "தரிசனத்தை' அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் பலமெல்லாம் இழப்பதைப் போல் உணர்ந்தாள். எதிர்காலம் பெரிய கேள்விக்குறியானது.
யாருக்குமே அஞ்சாத அந்த, "நாட்டுக் கட்டை'யின் நெஞ்சிலிருந்து, முதன் முதலாக, ஒரு விம்மல் வெடித்துக் கிளம்பியது.
***
♥கவுரி கிருபாநிதி
வயது : 60, கல்வித் தகுதி: பள்ளி இறுதிப்படிப்பு. இதில், முதல் மதிப்பெண் பெற்று, தங்கப்பதக்கம் பெற்றவர். இது தவிர, தொழிற்கல்வி முடித்து, அரசு துறையில், பனிரெண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இவரது, பதினாறாவது வயதில் எழுதிய முதல் சிறுகதை, "கல்கி' வார இதழில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இவர் எழுதிய சிறுகதைகள், பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளி வந்துள்ளன.

Post a Comment

0 Comments