♥நான் சமீபகாலமாக ஹைஹீல்ஸ் செருப்பு அணிகிறேன். இதைத் தொடர்ந்து அணிந்தால் குதிகால் வலி வரும் என்று எச்சரிக்கிறாள் என் தோழி. இது உண்மையா?
#உங்கள்_தோழி_சொல்வது_உண்மைதான்.
♥ஹைஹீல்ஸ் செருப்புகளை அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான சாத்தியம், மற்றவர்களைவிடப் பல மடங்கு அதிகம். இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், குதிகால் வலி எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
#எது_குதிகால்வலி?
♥நம் பாதத்தில் ‘பிளான்டார் அப்போநீரோசிஸ்’ (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து குதிகால் எலும்பிலிருந்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது.
♥ இதனால் குதிகால் வலி உண்டாகிறது. இந்தத் தொந்தரவுக்கு ‘பிளான்டார் ஃபேசியைட்டிஸ்’ (Plantar Fasciitis) என்பது மருத்துவப் பெயர்.
குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க ‘பர்சா’ (Bursa) எனும் திரவப் பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல் ஸ்பர்’ (Calcaneal Spur) என்று பெயர்.
இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.
#சரியான_செருப்புகள்_அவசியம்!
♥கரடு முரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்கு, குதிகால் வலி வருவதற்கான சாத்தியம் அதிகம். காரணம், வாகனங்களில் ‘ஷாக் அப்சார்பர்’ வேலை செய்வதுபோல நம் காலணிகளும் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப்பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப் பலனை எதிர்பார்க்க முடியாது.
♥அடுத்து, ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணியும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்துவருகிறது. ஆனால், இதில்தான் ஆபத்தும் உள்ளது. குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள், பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் அணிந்துகொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து, வீக்கத்துடன் குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.
♥இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து வலிக்கத் தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.
#தடுக்க_என்னவழி?
♥குதிகால் வலி ஏற்பட்டவர்கள் தெருவில் மட்டுமல்ல; வீட்டுக்குள்ளும் வெறுங்காலோடு நடக்கக் கூடாது. எப்போதும் மிருதுவான ஹவாய் செருப்புகளை அணிந்தே நடக்க வேண்டும். 'எம்.சி.ஆர்.' (Micro Cellular Rubber) செருப்புகளை அணிந்து நடப்பது இன்னும் நல்லது.
♥பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டியது முக்கியம். அழுத்தமான ஷூக்களையும் அணியக் கூடாது. லூசான ஷூக்களையும் அணியக் கூடாது. இந்த இரண்டிலும் தீமை உள்ளது. முக்கியமாக, குதிகால் தசைநாணுக்கு அதிக உராய்வைக் கொடுத்து வலி ஆரம்பிக்க இவை துணை போகும். ஆகவே, காலணிகள் அணிவதிலும் எச்சரிக்கை தேவை!
0 Comments
Thank you