♥ காதுக்குள் பூச்சி புகுந்தால் என்ன செய்வது?! - வீட்டு வைத்தியம்!
♥சில சமயம் எதிர்பாராத விதமாகக் காதுக்குள் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிடும். அந்த சமயத்தில் பொதுவாகப் பதற்றமும் கவலையும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். இது போல குழந்தைகளுக்கு நேர்ந்தால் இன்னும் குழப்பமும், சிக்கலும் அதிகமாகக் காணப்படும். இந்த மாதிரி சூழலில் குழந்தைகளின் காதுக்குள் பூச்சியோ அல்லது எறும்போ நுழைந்தால் என்ன செய்வது? இதற்கான வீட்டு வைத்தியம் பற்றித் தெளிவாகத் தெறிந்து கொள்ளலாமா?!
♥காதுக்குள் எப்படி பூச்சி புகும்?
அவ்வளவு சீக்கிரம் யார் காதிலும் பூச்சி நுழையாது. ஆனால் திடீரென்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத கணம் பூச்சி காதினுள் நுழைந்து விடும். பூச்சி காதினுள் நுழைந்த உடனே இம்சை தொடங்கிவிட்டது என்று அர்த்தம். பெரியவர்களுக்கு இந்த நிலை என்றால் குழந்தைகள் பாவம் என்ன செய்ய முடியும். வீட்டில் செடி கொடிகள் இருந்தால் நிச்சயமாக பூச்சிகள் அதிகமாக சுற்றும்.
♥இந்த மாதிரி சூழலில் வாழ்பவர்க்கு பூச்சி காதில் புக வாய்ப்புள்ளது. அல்லது வெளியே எங்கேயாவது மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது இந்த மாதிரி நேரலாம். இல்லை எங்குமே போகாமல் வீட்டிலேயே அமைதியாக அறையில் உட்கார்ந்து இருக்கும் போது கூட இப்படி நடக்க வாய்ப்புண்டு!
♥வேடிக்கையாகச் சொல்வதனால் பூச்சிக்கு மனித காதினுள் நுழைந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற அறிவு இல்லை. அதான் மனித காதினுள் நுழைய ஏதுவாய் ஓட்டை உள்ளதே! சென்று பார்க்கலாம்! என்று பூச்சி ஏமாந்து பறந்து உள் சென்று விடுகிறது. பின் அதற்கும் திண்டாட்டம் தான், சம்பந்தப்பட்டவருக்கும் வேதனையின் உச்சம்தான்.
♥பெரும்பாலும் வெளியே சென்றிருக்கும் நேரத்திலாே அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலாே இந்த அசந்தர்ப்பம் நிகழ்ந்து விடுகிறது. ஒருவேளை இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது காதுக்குள் பூச்சி நுழைந்தால் அது சிலருக்கு தெரிவதே இல்லை. பின்னர் ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு காதினுள் பூச்சி நுழைந்துவிட்டதைத் தெரிந்து கொள்கின்றனர்.
♥அதிலும் குழந்தைகளைப் பொருத்தவரை பெற்றோர்கள் தான் பொறுப்பாக கவனித்து கண்டுபிடிக்க வேண்டும்.
♥காதினுள் செல்கின்ற பூச்சி என்னவாகும்?
♥காதில் உள்ளே இறந்து விட அதிக வாய்ப்பு உள்ளது.
சில சமயம் உள்ளே சென்ற பூச்சி இறக்காமல் ,அங்கும் இங்கும் சுற்றித் திரியும்.
சில சமயம் உயிருடன் இருக்கும் பூச்சி கடிக்கவும் செய்யும்.
பூச்சிகள் ஒரு விதமான இரைச்சலை எழுப்பச் செய்யலாம். இதனால் மிகவும் அசௌகரியமான சூழல் ஏற்படும்.சரியாக காது கேட்காது.
♥காதினுள் பூச்சி நுழைந்துவிட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும்?
♥காதினுள் வலி ஏற்படும்.
காதினுள் ஒருவிதமான அசௌகரிய உணர்வு ஏற்படும்.
செவி அறையைச் சுற்றி உள்ள கிரானியல் நரம்புகளை இந்தப் பூச்சி தொந்தரவு செய்யும்.
காதின் உள்ளே பூச்சி அங்குமிங்கும் நகர்வதை உணரமுடியும்.
சில பூச்சிகள் கடிக்காது.சில புச்சிகள் கடிக்கும் தன்மை கொண்டன. கடிக்கும் தன்மை கொண்ட பூச்சி காதினுள் நுழைந்திருந்தால், அது கடிக்கும் போது வலி கடுமையாக ஏற்படும்.
காதில் ஏதோ நிறைந்து இருக்கிற மாதிரி உணர்வு ஏற்படும்.
வீக்கம்.
காதில் சீல் வடிதல்.
சரியாகக் காது கேட்காது.
♥குழந்தைகளின் காதில் புகுந்த பூச்சியினை எப்படிப் பாதுகாப்பாக வெளியேற்றுவது? – வீட்டு வைத்தியம்
இந்த சமயத்தில் பெற்றோர்கள் மிகவும் நிதானமாக பிரச்சினையை கையாள வேண்டும். அதற்கு சில வழிகளை கீழே காணலாம்.
♥இது மாதிரியான சூழலில் குழந்தைகள் அழத் தொடங்குவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்குப் பொறுமையாகச் சமாதானம் சொல்ல வேண்டும். இல்லாவிடில் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பிறகு எந்தப் பக்கம் காதினுள் பூச்சி நுழைந்துள்ளதோ அந்தப் பக்க தலையைச் சாய்த்து உலுக்க சொல்ல வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் பூச்சி வெளியே வர வாய்ப்பு உள்ளது.
♥பூச்சி உயிரோடு இருக்கும் பட்சத்தில் மிகவும் சிறிய அளவு தேங்காய் எண்ணெய்யைக் காதில் ஊற்றவும். இவ்வாறு செய்வதால் பூச்சி இறந்துவிடும்.
ஒரு வேளை பூச்சி ஏற்கனவே இறந்திருந்தால் மிதமான சுடு கொண்டு தண்ணீரைக் காதில் ஊற்ற வேண்டும். இதனால் பூச்சி வெளியேறிவிடும்.
ஆகப் பூச்சி தொல்லை அகன்று விட்டது என்று அர்த்தம்.
♥இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே குழந்தையின் காதில் புகுந்த பூச்சியை எடுத்து விடலாம். ஆனால் இதையெல்லாம் வீட்டில் செய்ய பயப்படுவர் என்றால் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. அவர் மிக எளிதாக பூச்சியை அகற்றி விடுவார்.
♥குழந்தையின் காதில் பூச்சி நுழைந்தால் என்ன செய்யக்கூடாது?
குழந்தையின் காதில் பூச்சி நுழைந்துவிட்டால் எந்த காரணத்தைக் கொண்டும் கீழே குறிப்பிட்ட செயல்களைச் செய்யவே கூடாது என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
♥மெல்லிய கம்பிகளைக் காதினுள் நுழைக்கவே கூடாது.
காது குடையும் இயர் பட்ஸ்களைப் பயன்படுத்தவே கூடாது.
தலை மற்றும் காது பகுதிகளைத் தாக்குவதோ, அடிப்பதோ கூடவே கூடாது.
இது எல்லாம் செய்யும் பொழுது பூச்சி செவி அறையைத் தாண்டி சென்று விடும். இதனால் நிறைய பாதிப்புகள் ஏற்படும். உச்சக்கட்டமாகச் செவித்திறன் கெட்டுவிடும் அபாயம் கூட உள்ளது.
♥எந்த குழந்தைகளுக்கு வீட்டிலேயே பூச்சி எடுக்கும் முயற்சியை மேற்கொள்ள கூடாது?
காதுகளில் இதற்கு முன் அதிகளவு தொற்று தாக்கியுள்ள குழந்தைகள்.
செவித் திறன் பாதிப்புள்ள குழந்தைகள்.
பிறவியிலேயே டிம்பனோஸ்டோமி டியூப்ஸ்,செவி அறை போன்ற காது பகுதிகளில் பாதிப்பு உள்ள குழந்தைகள்.
சரியான அளவுக்கு பயிற்சியோ அல்லது செயல்திறனோ இல்லாத நபர்களை நம்பி உங்கள் குழந்தையின் காதுகளின் புகுந்த பூச்சியை எடுக்க அனுமதி தரவே வேண்டாம்.
♥இது மாதிரியான குழந்தைகளுக்கு வீட்டிலேயே பூச்சி எடுக்கும் முயற்சியை (வீட்டு வைத்தியம்) மேற்கொள்ளக் கூடாது. இவர்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது உகந்தது.
♥எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
குழந்தைகளின் காதில் புகுந்த பூச்சியை எடுக்க வீட்டில் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காத போது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வெகுநேரம் பூச்சி காதிலேயே இருக்க நேர்ந்தால் வலியும் வீக்கமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் காதில் தொற்று ஏற்பட்டு சீல் வடியத் தொடங்கும். உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்.
♥உங்களால் பூச்சியின் ஒரு சில பகுதியை மட்டுமே வெளியே எடுக்க முடிந்திருந்தால், மற்றதை அகற்ற மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டாலும் மருத்துவரை நாட வேண்டும்.
காது பகுதியில் துர்நாற்றம் வீசினாலும் எச்சரிக்கை தேவை.
இது போன்ற அபாயங்களைத் தடுக்க உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்
என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
♥இந்த நேரத்தில் மருத்துவர் என்ன செய்வார் என்று பார்க்கலாமா?
காது மருத்துவர் தன்னிடம் உள்ள ‘ஓடோஸ்கோப்'(odoscope) என்னும் கருவியின் துணையோடு காதுகளை சோதனை செய்வார்.
மருத்துவர் தன் சோதனை முடிவில் பூச்சி உயிருடன் இருக்கிறது என்பதை கண்டறிந்தால், மினரல் அல்லது ஆலிவ் எண்ணெய்யைக் குழந்தையின் காதில் பீய்ச்சி அடிப்பார். இவ்வாறு செய்வதால் பூச்சி இறந்துவிடும்.
பிறகு நல்ல தண்ணீரைக் காதில் பாய்ச்சி பூச்சியை வெளியே எடுத்து விடுவார்.
ஒரு சமயம் தண்ணீரினூடே பூச்சி வெளியே வராமல் போகும். அப்போது இடுக்கி(forceps) போன்ற கருவியைப் பயன்படுத்தி பூச்சியை வெளியே எடுக்க முயல்வார்.
♥சில குழந்தைகள் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அந்த மாதிரி நேரத்தில் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்கள் அமைதி அடையும் சூழலில் மருத்துவர் பூச்சியை அகற்றி விடுகின்றார்.
♥பெரும்பாலும் மயக்க மருந்து கொடுக்கும் தேவை ஏற்படாது.
காதுகளில் இருக்கும் பூச்சியை அகற்ற இடுக்கி,கொக்கி மாதிரியான கருவி, உறியும் கருவி(suction), இயர் ஸ்ரன்ஞ்ச் முதலிய பொருட்களைக் கொண்டு மருத்துவர் எளிதாக எடுத்து விடுவார். மயக்க மருந்து அனேகமாக அவசியப்படாது.
♥பூச்சியை அகற்றியவுடன் காதில் வலி மற்றும் சில அறிகுறிகள் தென்படலாம்.
இதனால் ஏற்பட்ட தொற்று மற்றும் வீக்கம் குறைய சில நாட்கள் தேவைப்படும்.
இந்த பிரச்சினையில் இருந்து பூரணமாகக் குணமடைய மருத்துவர் கூறும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
குழந்தைகளின் காதுகளில் பூச்சி புகாமல் பாதுகாப்பது எப்படி?
காதுகளில் பூச்சி எப்போதுமே புகாமல் பாதுகாப்பது சற்று கடினமானதுதான். இருப்பினும் கீழே வழங்கியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பயன்படுத்தி பலன் அடையலாம் .அவை என்ன? என்று அறிந்து கொள்ளலாம்.
♥சற்று மரம் சூழ்ந்த இடங்களுக்குச் செல்லும் பொழுது பூச்சி ரிப்பலன்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது அல்லது வண்டியில் பயணிக்கும் காது கவசங்களை அணிந்து கொள்ளலாம்.
வீட்டில் பூச்சிகள் அண்டாது வகையில் அடிக்கடி சுத்தப்படுத்தி வைக்கலாம்.
பூச்சி தவிர்த்து வேறு ஏதாவது
♥குழந்தையின் காதில் புகுந்தால் என்ன செய்ய வேண்டும்?
பூச்சியைத் தவிர்த்து காதில் வேறு ஏதாவது பொருள் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகம் இருக்கும் பட்சத்தில் நிச்சயமாகத் தண்ணீரைக் காதினுள் ஊற்றக் கூடாது.உதாரணமாக எதாவது உணவுப் பொருளைக் குழந்தை காதின் உள்ளே போட்டு இருந்தால், குழந்தை இந்த விஷயத்தைச் சொல்ல மறைக்கும்.குழந்தை காதைப் பிடித்துக்கொண்டு அழுவதை வைத்து நீங்கள் பூச்சி என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. உடனே குழந்தையிடம் உரிய முறையில் விசாரிக்க வேண்டும்.
♥அப்படிச் செய்யாமல் அவசரப்பட்டு தண்ணீரை ஊற்றினால் குழந்தையின் காதில் உணவுப் பொருள் எதாவது புகுந்து இருந்தால் அது உப்ப நேரலாம். இது இன்னும் பிரச்சினைகளிலும் சிக்கல்களிலும் முடிந்துவிடும்.குழந்தை பூச்சி இல்லை என்ற தகவலைத் தந்த உடன், உடனே மருத்துவரை அணுகுவதே நல்ல தீர்வாக இருக்கும்.
♥6 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையாக பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். சில சமயம் அவர்கள் விளையாட்டுத்தனமாக பென்சில் துகள்கள், சாக் பீஸ், அரிசி, கொட்டை போன்ற பலவிதமான பொருட்களை காதில் போட்டுக் கொள்வார்கள். இது மாதிரியான பிரச்சனையோடு தினமும் சில குழந்தைகளாவது மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆக குழந்தைகள் விசயத்தில் போதிய கண்காணிப்பும் எச்சரிக்கையும் மிகவும் அவசியம்.
0 Comments
Thank you