♥உண் முதல் உண்ணி வரை தமிழின் சிறப்பு.
♥ஊன், ஊண்: இந்த இரு சொற்களுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம், ஆனால், இவற்றின் பொருள் முற்றிலும் மாறுபட்டது.
'ஊன்' என்றால், மாமிசம், இறைச்சி என்று பொருள். 'ஊண்' என்றால், உணவு என்று பொருள்.
மாமிசமும் ஓர் உணவுதான்; அதற்காக ஊனை, ஊண் என்று எழுதக்கூடாது.
ஒருவர் பசியோடு இருக்கிறார். அவர் முன்னே தட்டில் உணவை வைத்து, 'உண்' என்கிறோம், அதாவது, 'சாப்பிடு' என்கிறோம்.
♥அந்த 'உண்' என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான், உணவு வந்தது. ஊண் என்பதும், அதிலிருந்து வந்ததுதான்.
'ஊண் மிக விரும்பு' என்பார் பாரதியார். அதாவது, வேளாவேளைக்கு உணவை விரும்பி உண்ண வேண்டும்; பட்டினி கிடந்தாலோ, சரியாகச் சாப்பிடாவிட்டாலோ, குப்பை உணவுகளை உண்டாலோ சுறுசுறுப்பாக இயங்க இயலாது.
♥பாரதியார் 'மிக ஊண் விரும்பு' என்று சொல்லவில்லை. அதாவது, உணவை அளவுக்கதிகமாகவும் உண்டுவிடக்கூடாது. அளவறிந்து உண்ண வேண்டும்.
'உண்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்த இன்னோர் அழகிய சொல், 'உண்டி'. இதன் பொருளும் உணவுதான்.
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்று பழமொழி உண்டு. அதாவது, பசியோடு உள்ள நேரத்தில், நமக்கு உணவு தந்தவர்களை மறக்கக்கூடாது. அவர்கள் நமக்கு உயிரையே தந்தவர்களாகப் போற்றவேண்டும்.
♥இந்த 'உண்டி'யிலிருந்து 'சிற்றுண்டி' என்ற சொல் வந்தது: சிறு + உண்டி => சிற்றுண்டி. மிகுதியாகச் சாப்பிடாமல், கொஞ்சம்போல் கொறிக்கும் உணவு.
இதற்கு எதிர்ப்பதம், பேருண்டி: பெரு + உண்டி: ஒரே நேரத்தில் ஐம்பது வகை உணவுகளைத் தட்டில் நிரப்பிக்கொண்டு உண்ணும் விருந்து.
♥ஒரு குறிப்பிட்ட உணவை உண்கிறவர்களை, 'உண்ணி' என்பார்கள். இதன் அடிப்படையில் மிருகங்களை மூன்று வகையாகப் பிரிப்பார்கள்:
தாவர உண்ணி => தாவரங்களை உண்டு உயிர் வாழ்பவை
விலங்குண்ணி => விலங்கு உண்ணி: பிற விலங்குகளை உண்பவை
அனைத்துண்ணி => அனைத்து உண்ணி: தாவரங்கள், விலங்குகள் ஆகிய இரண்டையும் உண்பவை.
- என். சொக்கன்
0 Comments
Thank you