♥#வெள்ளாந்தி_அப்பா
♥இன்றைக்கு சனிக்கிழமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள்... காரணம் அப்பா வரப்போகிறார்...
மகிழ்ச்சியில் நேரத்துடன் எழுந்து எனது 6 வயது மகளுடன் ரெடியாகிவிட்டேன்.. கணவர் நேசன் ரெடியாகிட்டு இருந்தார்... அப்பாவ பாக்கப்போற மகிழ்ச்சியில்
அப்படியே என் கடந்தகால நினைவுகள் கண் முன்பாக வந்தது...
♥"""மஞ்சு மஞ்சு.. அப்பா உங்கிட்ட வேலைக்கு போகவேணாம் என்று சொல்ல சொன்னாரு... காலைல நீ தூக்கம் அதான் என்கிட்ட சொன்னாரு... என்றாள் அம்மா...
♥"என்னம்மா சொல்ற..நீ ... இப்பதான் விண்ணப்பமே தயார் செய்றேன்.. எதுக்கு அப்பா இப்படி சொல்றார்...
♥""உனக்கு வரன் சரியாவந்துருக்காம்... அதான் அப்படி சொல்றாரு.... நீயாச்சு உன் அப்பா ஆச்சு என்றாள் அம்மா...
♥"""திருமணமா எதுக்கும்மா இப்ப என்ன அவசரம் எனக்கு ... நீயாச்சும் அப்பாகிட்ட சொல்லக்கூடாதா... தனியா இருக்கும்போது வேலைக்கு போனாதானேம்மா இலகுவாயிருக்கும்.. என்றேன்...
♥"""என்பேச்சை விட உன் பேச்சைத்தானே அவர் அதிகமா கேட்பாரு நீயே பேசிகோடியம்மா.. என்றவாறு அம்மா சென்றுவிட்டாள்
♥நான் தங்கை அப்பா அம்மா இதுதான் என் சிறிய நடுத்தரக்குடும்பம்... அப்பா சம்பாத்தியம் மட்டும்தான் எங்க எல்லார் தேவைக்கும்..
♥ஒரு காட்டன் சட்டை ஜீன்ஸ்.. சிறிய தொப்பை...ஒரு ஹன்டா அக்ரீவா வண்டி இதுதான் எங்க அப்பா.... அமைதியானவர் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது... அப்பாவியாக இருப்பார்... ஆபிஸ்ல கூட "வெள்ளாந்தி" மாணிக்கம் என்றுதான் பெயரு.. அவ்வளவு அப்பாவியா இருப்பாரு...
♥தனக்கென ஒரு ரூபாய் செலவு செய்யமாட்டாரு ... தீபாவளி பிறந்தநாள் என்று நாமலா கட்டாயபடுத்தி சட்டை வாங்கி கொடுத்தாதான்.... மற்றபடி வாங்கவே மாட்டாரு... ஆனா நமக்கு எந்த குறையும் விட்டதில்லை...
♥எங்ககிட்ட அம்மாகிட்ட அதிர்ந்து ஒரு நாள்கூட பேசியிருக்க மாடாரு..
எதுவா இருந்தாலும் அருகே வந்து தோல்ல கைபோட்டு அன்பா நண்பன் போல புரியவைப்பாரு... என் முதல் நண்பனே என் அப்பாதான்..
♥அம்மா கூட ஏதாவது சின்ன சச்சரவு வந்தா அப்பா திரும்ப பேசமாட்டாரு எதுவானாலும் இரு வார்த்தைக்கு மேல பேசமாட்டாரு... இடத்தை விட்டு விலகிடுவாரு... அம்மா நிறுத்தவே மாட்டாங்க... அப்போ அப்பாவ பார்க்க பாவமாயிருக்கும்... நான் அப்பா பக்கதில போய் உக்காந்துடுவேன்...
♥நான் பெரியவள் ஆனதும் அப்பா மாதிரி திரும்ப பேசாத ஒருவர் தான் எனக்கு கணவராக வரனும் என நினைப்பேன் ... என் அப்பா என் முதல் ஹீரோவா என்மனசில இருந்தார்.
♥அம்மாகூட மனஸ்தாபம் வந்தாகூட
மறுகணமே
"""ராசாத்தி ஒரு காப்பி தாம்மா ..
என எதுவும் நடக்காத மாதிரி அம்மாகிட்ட கேட்பார்.... இதுக்காகவே காத்திருந்ததுபோல அம்மாவும் காபியோட வந்து அப்பா கூட சிரிச்சு பேசிட்டுஇருப்பாங்க.. இத பார்க்கும்போது எனக்கு வாழ்க்கை பாடம் சொல்லித்தாரங்களோ என நினைக்கத்தோன்றும்...
♥கண்ணாடி முன் நின்று அப்பாவ நான் பார்த்ததேஇல்லை சவரம் செய்ற நேரத்தை தவிர... ரொம்ப எளிமையாகவே இருப்பாரு... எதுக்குமே ஆசப்பட மாட்டாரு...
♥எப்பாவது ஆட்டுக்கறி வாங்கிவருவாரு... ஆனா அவர் சாப்டமாட்டாரு சாப்டுறமாதிரி சாப்புட்டுட்டு போயிடுவார்...
♥"" மட்டன் பிடிக்காதுன்னா ஏன் வாங்கியரனும்... விருப்பமானதை வாங்கிவர்றது என அம்மா முனு முனுப்பால்...
ஆனா எங்களுக்காகவே அப்பா சாப்டாம போறார் என எனக்கு சில காலத்தில் உணர முடிந்தது...
♥அவருக்கு பிடிச்சது ஒரு பாடல் மடடும்தான் "கர்ணன் படதில வரும் "உள்ளத்தில் நல்ல உள்ளம் " என்ற பாடல் மட்டும்தான் ...தினமும் உறங்கும்முன் இரு தடவை அந்த பாடலை கேட்டுத்தான் உறங்குவாரு.... இதுக்காகவே ஒரு பழய காசட்டும் ரெக்காடரும் வைச்சிர்காரு.
♥என் துணிகளை நான் கழுவி காயப்போடுவேன்... ஆனா அதிகமாக அப்பாதான் எடுத்து அழகாகா மடித்து என் அறையில் வைத்திருப்பார்... இஸ்திரி போட்டமாதிரி அழகா மடிச்சு வைச்சிருப்பாரு
♥அன்று அப்படிதான் என் துணிகளை அப்பா எடுத்துக்கொண்டிருந்தார்...
♥""என்னங்க மஞ்சு இப்ப சின்னப்பொண்ணு கிடையாது... நீங்க போங்க நான் எடுக்கிறேன்
என அம்மா கூற...
அப்பா ஒரு நிமிடம் அம்மாவ பார்த்தவர்
♥"""ராசாத்தி.. என்ன பேச்சு இது... நம்ம பசங்க எப்படி இருந்தாலும் நம்ம பசங்கதானே... சின்னப் பொண்ணு பெரியப் பொண்ணு என ஏன் எடை போடுற... அவ என் பொண்ணு ... என்று அப்பா கூறும்போது அவர் கண்கள் கலங்கியது... அம்மா இதை எதிர்பார்க்கவில்லை ....
♥"""அதுக்கில்லங்க... நான் சொல்றது...
என முடிக்கும் முதலே அப்பா நகர்ந்துவிட்டார்.
அம்மா கூறவந்தது அப்பாக்கு புரிய வாய்ப்பில்லை... என் உள்ளாடைகளை நான் துணிக்குள்ளாக காயப்போட்டிருப்பேன் என அம்மா நினைப்பாள்... அதால அப்பா சங்கட படுவார் என நினைத்தாள் ....
♥ஒருநாள் அப்பாகிட்ட பேசிட்டு இருக்கும்போது பக்கத்துவீட்டு ராமு சார் வந்தாரு அவருக்கு அப்பா வயசு தான் ஆனா செயின் மோதிரம் டீசட் என பகட்டா திரிவாரு... தலை மீசை எல்லாம் டை வேற அடிச்சிருப்பாரு....
♥""என்ன மாணிக்கம் நாங்கள் குடும்பதோடு சினிமாவுக்கு போறம் நீயும் குடும்பதோட வாரியா... ஜாலியா இருக்கும் என்றார்...
♥எங்களை திரும்பி பார்த்தாரு அப்பா அப்புறம்
"" இல்ல சார் எனக்கு சினிமால பெரிசா பிடிப்பில்லை... என் பொண்ணுங்க விரும்பினா.... என முடிக்கும்முதலே
""" இல்லப்பா நாங்க போகல என்றேன்...
♥""" பொண்ணுங்கள பெத்துட்டா... என்ன பன்றது சிக்கனமாதான் இருகனும்.. நீ என்னபன்னுவா... ம்..நான் வர்றேன் என அவர் சென்றுவிட்டார்...
♥எனக்கு திக்கென்றது.. நமக்காகவா அப்பா இப்படி மாறினார்... என நினைத்துக்கொண்டேன்... முன்னாடி அப்பா எப்படியிருப்பாரு... என அறிய அம்மாவின் திருமண ஆல்பத்தை பார்த்தேன்.... யப்பா... நம்ம அப்பாவா ... என திகைக்கவைத்தார்.. அப்படி ஹம்சமா இருந்தாரு..
♥மறுநாள் அம்மாவிடம் கேட்டேன்... """அம்மா உன்னய பொண்ணு பார்க்க வரும்போது அப்பா எப்படிம்மா இருந்தாரு...
♥அம்மா வெட்கப்பட்டது தெரிந்தது.. அவரு அப்ப ஹீாரோ மாதிரி தான் இருப்பாரு கலர் கலரா சட்டை போடுவாரு கருப்பு கண்ணாடி... என புல்லட் வண்டில தான் வருவாரு...
அவர நான் பார்த்ததும் சரி சொல்லிட்டேன் எங்க உறவுக்கார பொண்ணுங்களே பொறாமைபட்டாங்க...என்னய பார்த்து ... என வெட்கப்பட்டாள் அம்மா..
♥"" என்னம்மா சொல்ற நீ ... அப்போ ஏன்மா இப்ப இப்படி இருகாரு... நீதானேம்மா அவர பாத்துக்கனும்... என நான் முடிக்கும்முன்...
♥"""அவரு என்ன சினனக்குழந்தையா.. நான் பாத்துக்க... வாழ்க்கை என்றால் இப்படிதான் திருமணம் குழந்தைங்க என வரும்போது மாற்றமும் வரும்... என்றாள் அம்மா.
♥""" வாழ்க்கை மாற்றமா.. இல்ல நாங்க பெண்ணா பிறந்த நேரமா ... என அம்மாகிட்ட கேட்டேன்...
♥"""உனக்கு இப்ப புரியாது நாளைக்கு உனக்கும் பசங்க குடும்பம் என்று வரும் போது தான் புரியும் என்று கூறி சென்றுவிட்டாள் அம்மா.
♥என் அப்பாவ என் திருமணம் ஆகும் வரை நல்லபடியாக பார்த்துக்கனும் என நினைத்தேன் ... அதற்கு தான் இந்த விண்ணப்பம் எழுதிட்டு இருந்தேன்...
இதோ அப்பா வந்துட்டாரே...
"""மஞ்சு மஞ்சு என அப்பாவின் குரல் கேட்டதும் ஓடினேன்...
""அப்பா என்னப்பா...
♥""வாம்மா உன்கூட பேசனும்... என தோலில் கை போட்டு அருகே உட்காரவைத்தார்..
♥""உனக்கு நல்ல ஒரு பையன் பார்த்திருக்கேன்... நல்ல இடம்...எனகு தெரிஞ்சவங்கதான். உனக்கு நிச்சயம் பிடிக்கும் இந்தா பாரு என பாக்கெட்டில் இருந்த படம் ஒன்றை காட்டினார்... அது அம்மாவின் திருமண ஆல்பத்தில் அப்பா இருந்த மாதிரியே இருந்தது...
"""அப்பா நான் வேலைக்கு.. என முடிக்கும்முதல்..
♥"""மஞ்சு பையன் உன் இஸ்டப்படி படிப்போ வேலையோ நீ தொடரலாம் என்று கூறியிருகாரு...அதால அப்புறமா வேலைக்கு போம்மா... இதை விட்டா இப்படி ஒரு அருமையான வரன் கிடைக்காது எனறார்.
♥அப்பாவை உக்காரவைச்சு பார்க்கனும் என்ற என் கனவில் உயிர் இல்லாமல் போய்விட்டது .
♥விறு விறு என திருமணம் நடந்து முடிந்து நான் பக்கத்து ஊரில் குடிதனம்சென்றுவிட்டேன்....
♥இரு வருடங்களில் மாரடைப்பு வந்து அம்மா திடீர்னு இறந்துட்டாங்க... அப்பாவ பார்க்கவே முடியல...ரொம்ப உடைஞ்சு போய்ட்டாரு... ஒருமாசம் அப்பா கூடவே இருந்தேன்...என் கணவர் மற்றும் பொண்ணுக்காக அப்புறம் கிளம்பி வந்துவிட்டேன் ...
♥பின்னர் அடிக்கடி அப்பாவ போய் பார்த்துவருவேன்... பென்சன் பணத்தில தங்கைய பாத்துகிட்டாரு... அம்மா இல்லாததில தங்கைய தனியா வைத்துபார்க்க சிரமப்பட்டாரு அப்பா... அதால படிக்கும்போதே நல்ல இடமா பார்த்து தங்கை திருமணத்தை.. வீட்டை வித்து நடத்தினாரு...
♥ஏன்பா என்கிட்ட கேட்டிருக்கலாமே... ஏன்பா வீட்டை வித்தீங்க.... நாங்க இல்லையாப்பா உங்களுக்கு...என கேட்டப்ப
♥""" இல்லம்மா உங்க அம்மா இல்லாத இந்த வீடு யாருக்கும் வேணாமே என்றார்... அம்மாவின் இழப்பை அவரால் தாங்க முடியல....
♥தங்கை மும்பைல போய் கணவர் கூட செட்டில் ஆயிட்டா..அவ கணவருக்கு மும்பைல தான் வேலை.
நான் அப்பாவ பலதடவ கேட்டன்...
♥""அப்பா வாங்கப்பா நம்ம வீட்டுக்கு... இனி இந்த வீட்ல இருக்க முடியாது... அதான் நீங்க கேட்ட மூனுமாசம் நாளையோட முடியுது என்றேன்...
♥என்னை நிமிர்ந்து பார்த்தவர் ""மஞ்சு நீ போம்மா... நான் எனக்கு ஒரு இடம் பார்த்திட்டேன் ... நான் எப்பவேணும்னாலும் உங்களயும் நீங்க எப்பவேணும்னாலும் என்னையும் வந்து பாத்துக்கலாம்... அதுதாம்மா நல்லது... என்றார்...
♥என்னால் அழுகையை அடக்க முடியல... அப்பாவை கட்டிக்கொண்டேன்.... என் தலையை ஆதரவாக தடவி கொடுத்தார்... எவ்வளவு கேட்டும் எங்க கூட வர மறுத்துட்டாரு...
♥என்னம்மா மஞ்சு ரெடியா என என் கணவர் நேசன் என் தோலில் கைவைக்க சுய நினைவிற்கு வந்தேன்.... என் கண்களில் கண்ணீரை பார்த்த நேசன் என் கண்களை தன் விரல்களால் துடைத்துவிட்டவாறு....
♥""" என்ன மஞ்சு இது, மாமா ஒரு நாள் நிரந்தரமாக நம்மகூட வந்துருவார் பாரு... சரி வா போலாம் போய் மாமாவ அதான் உன் அப்பாவ கூட்டியரலாம் வா...
♥எல்லோரும் காரில் சென்று அந்த இல்ல வாசலில் காரை நிப்பாட்டி இறங்கி உள்ளே சென்றோம்... வழக்கமாக சனிக்கிழமை பத்துமணிக்கு தான் வருவேன்.. ஆனா இன்று ஒன்பது மணிக்கே வந்துட்டேன்...அப்பாவுடன் ஒரு மணி நேரம் அதிகமாக இருக்கலாமே என்ற ஆசையில்....
♥அந்த இல்ல வார்டன் எங்களைக்கண்டதும் வந்து நலம் விசாரித்து அப்பாவின் அறைக்கு அனுப்பி வைத்தார்....
♥காலைலயே எழுந்து மறுபடி அயர்ந்திருந்தார் அப்பா..... தலை மாட்டில் அந்த பழய ரெக்காடர்ல "உள்ளத்தில் நல்ல உள்ளம் "" மிக மெதுவாக பாடிக்கொண்டிருந்தது... தலையனைக்கு பதிலாக அழகாக மடிக்கப்பட்ட அம்மாவின் இரு சேலைகள்... அதில் தான் தினமும் உறங்குவார் போல்... எனக்கு கண்களில் நீர் கொட்டியது...
♥நாம் வந்ததைக்கூட அப்பா கவனிக்கல. ஒரு கையால முகத்தை மறைத்தவாறு மறுகையில் ஒரு படத்தை மார்போடு அனைத்தபடி அயர்ந்திருந்தார்.... மெல்ல அவர் கையில் இருந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தேன் ... அது எங்கள் குடும்ப படம் நான் அம்மா அப்பா தங்கை .பலவருஸத்திற்கு முன் எடுத்த படம் அது. எனக்கு அழுகையை அடக்கமுடியல.... அப்பா காலில் கையை வைத்தேன்....
♥"""அப்பா அப்பா... என மெதுவாக கூப்பிட திடுக்கிட்டு எழுந்தார் அப்பா...
♥"" மாப்ள...மஞ்சு...கவிகுட்டி... எப்ப வந்தீங்க.... நான் மறுபடி அயர்ந்துட்டன்மா... என அதே வெள்ளந்தியா பார்த்தாரு அப்பா...
♥இல்லப்பா நாங்கதான் ஒருமணி நேரம் முன்னாடியே வந்துருக்கோம் .... வாங்கப்பா போகலாம் என அழைத்து வந்தேன்....
♥அப்பா வீட்டுக்கு வந்தா என் மகள் கவிக்குதான் செம குஷி.... தாத்தா தாத்தா.... என சுத்தீட்டே இருப்பாள்...
♥உடைகள் துவைத்து காயப்போட்டிருந்தேன்... அப்பா வழமை போல என் உடைகளை மடிச்சிட்டு இருந்தார்....
♥நேசனைக்கானமே என இவரைத்தேடி மொட்டை மாடிக்கு சென்றேன்... அங்கே இவர் மேலே காய்ந்துகொண்டிருந்த என் மகளின் உடைகளை மடித்துவைத்துக்கொாண்டிருந்தார்....
♥அப்படியே ஓடிச்சென்று கட்டிப்பிடித்தேன் ..... என் தலையை தடவிக்கொடுத்தார்.... அதே அப்பாவின் பரிசம் உணரமுடிந்தது...
♥சனி ஞாயிறு எப்படி போகும் என்றே தெரியாது... எவ்வளவுதான் கெஞ்சி கேட்டாளும் அப்பா மேலதிகமா தங்கவே மாட்டாரு...
இன்று திங்கள் அப்பா கிளம்பிடுவாரு நேசன் ஆபிஸ் போகும்போது அப்பாவ இல்லதில விட்டுடுவாரு... கவி அழுதுகிட்டே இருப்பாள் ... தாத்தா... தாத்தா... என ..... அவள தேத்துறதுக்கு ஒருநாள் வேனும்...
♥மறுபடி எப்ப சனிக்கிழமை வரும் அப்பா எப்ப வருவாரு என்றுதான் எல்லார் எதிர்பார்ப்பும் இருக்கும்........ நிரந்தரமா அப்பா ஒரு நாள் நம்மகூட தங்குவார் என்ற நம்பிக்கைலயே ஒவ்வொரு சனிக்கிழமையும் கரைகிறது...
0 Comments
Thank you