♥#கண்மனி
♥“ப்ளீஸ்மா. எனக்காக” என்றாள்.
“”ம்ம்” என்றேன்.
♥அவள் கை என் கைக்குள்ளும், என் கை அவள் கைக்குள்ளும் மாறிக் கொண்டிருந்தது. உடல் முழுவதும் உருக்குலைந்து போனாலும் உள்ளங்கைகளுக்குள் அவள் பிடியின் வலிமை நாற்பது ஆண்டுகளாக மாறவில்லை.
“”சாப்பிடுறியா” என்றேன்.
“”ப்ச். வேண்டாம்” கண்களைத் திறக்காமலேயே.
கண்மணி
பிடியை இறுக்கி “”ஏன்” என்றேன்.
♥மூடிய இமைகள் மெல்ல நீரை விடுவித்து கண்கள் ஓரம் தேக்கியது. கண்களைத் திறந்து மறுபடியும் “”ப்ளீஸ்மா” என்றாள்.
♥கண்களின் ஓரம். தேங்கியிருந்த நீர் மீண்டும் அந்தப் பெரிய கண்களுக்குள் சென்றுவிட்ட மாதிரி தெரிந்தது.
♥“”நாம எவ்வளவு தூரம் இதைப் பத்திப் பேசியிருக்கோம். இப்ப யோசிக்கிறீங்களே”
♥“”நான் இப்படிக் கிடந்தா, நீ அப்படித்தான் பண்ணியிருப்பியா” மறுபடியும் கண்களை மூடிக் கொண்டாள்.
“”என்ன இட்லியா”?
“”ஆமாம்”!
“”ஒரு இட்லிதான் சரியா?”
♥இருவருமே ஒரே விஷயத்தைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தோன்றியது.
♥எங்கள் திருமணநாள். கெட்டி மேளம் கொட்டியது, தாலி கட்டினேன். தலையைச் சுற்றி பொட்டு வைக்கும்போது காதோரம் கேட்டேன்: “”என்னைப் பிடிச்சிருக்கா”
♥“”இப்பக் கேட்டா”, திடீரென சுற்றிலும் இருட்டு, நிசப்தம். மேளச் சத்தம் இல்லை புகையில்லை. என்ன செய்ய! இப்படிச் சொல்லிட்டாளே. முன்னாடியே கேட்டிருக்கணுமா? எப்ப பொண்ணு பார்க்க போனப்பவா? குடும்பத்தோட புடவை, நகை வாங்கப் போனப்பவா?
♥யாரோ கையைப் பிடித்து மணமேடையைச் சுற்றிக் கூட்டிபோனார்கள். அவளும்தான் உடன் வந்தாள். கையைப் பிடித்திருந்தோம். என் கையில் வேர்வை. அவள் கை மெத்தாகவும்,குளிர்ச்சியாகவும் அவசரப் பட்டுட்டோமோ?
♥அந்தக் கண்கள், கூர் நாசி – என நான் மயங்கிய ஒவ்வொன்றும் கண் முன் தெரிந்தது.
♥குனிந்து மெட்டி போட விரலைத் தொட்டதும் படக்கென்று காலை பின்னால் இழுத்துக் கொண்டாள்.
♥நிமிர்ந்து முகத்தைப் பார்த்தால்… அந்த வெட்கமும், மகிழ்ச்சியும் குற்றாலச் சாரலாக..
♥பாதத்தை முழுவதும் பற்றி மெட்டி அணிவித்தேன். முதல் ஸ்பரிசம், முதல் சிலிர்ப்பு.
♥இப்பொழுது மேடையைச் சுற்றி வரும்போது அழுத்தமாக பிடித்திருந்தாள். பழைய
அதிர்ச்சி எனக்கு குறைந்தது.
ஆசீர்வாதங்கள், பரிசுகள் தொடர்ந்தது.
டிபன் பந்தியில் பக்கத்தில் உட்கார்ந்தவுடன் கேட்டேன்:
“”என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டேனே?”
“”இப்பவே கேட்டா” என்றாள்.
“”புரியலியே”
♥“”வாழ்க்கை முழுவதும் நம்ம முன்னாடி இருக்கு – இப்படிக் கேட்கிறதுக்கும் பதில் சொல்றதுக்கும்”
“”ம்ம்ம்”
♥“”நானும் உங்களைக் கேட்பேன். அடிக்கடிக் கேட்பேன். எல்லாத்துக்கும் கேட்பேன்” என்றாள்.
♥ஆட்கொள்ளுதல் என்பது இதுதானோ என நினைத்தேன். ஆனால் இத்தனை வருடங்களில் கேட்கவும் இல்லை,பதில் சொல்லவும் இல்லை, கேட்காமலும் சொல்லாமலுமே தெரிந்திருந்தது.
♥மனமறிந்து நடந்து கொண்டிருந்த வாழ்க்கையில் இன்று வாய்விட்டுக் கேட்கிறாள்.
♥விடுதலை. முக்தி வாழ்விலிருந்து, வலியிலிருந்து, துன்பங்களிலிருந்து பந்தங்களிலிருந்து.
♥இவள் கேட்கும் விடுதலை எங்களுக்குள் முன்பே இருந்த பரஸ்பர புரிதல்தான். பத்து வருடங்களுக்கு முன்பே அறுபதாம் ஆண்டு நிறைவு தினத்தன்று ஆரம்பித்த பேச்சு. அடுத்த ஓர் ஆண்டுக்குள் தீர்மானமாக உருப்பெற்றிருந்தது.
♥இருவரில் யார் ஒருவர் முடங்கிப் படுத்து, அதன்பின் ஒரு சில மாதங்களில் மீண்டு வரும் நம்பிக்கையற்றுப் போய் வீழ்ந்து கிடந்தாலோ, மற்றவர் அந்த உடலுக்கு ஜீவன் முக்தி அளித்து விட வேண்டும்.
“”பாவமில்லையா?”
“”யாருக்கு?”
“”செய்பவருக்குத்தான்”
“”பாவம்தான். அதற்குத்தான் தண்டனை காத்திருக்குமே”.
“”என்ன தண்டனை”
“”தீர்க்கவொணா தனிமைதான்”.
♥“”சேர்ந்து செய்யும் குற்றத்துக்கு ஒருவருக்கு தண்டனை,மற்றவருக்கு விடுதலையா?”
“”என்ன செய்வது? அதுவும் அன்பினால்தான்”
♥“”மனங்கள் புரிதலின் முக்கியம் ஒரு விஷயத்தை இருவருமே எப்பொழுதுமே ஒரே மாதிரியே புரிந்து கொள்ளுதல்தான்”
♥அனுபவத்தினால், பரஸ்பர புரிந்து கொள்ளுதலும் ஒரு ஞானமாகிப் போனது. வாக்கியங்களுக்கு அவசியமின்றி வார்த்தைகளும் அசைவுகளுமே போதுமாகிப் போனது.
♥அவளது தினப் பிரார்த்தனைகளில் “நோயுற்றிடாமல், நொந்து மனம் வாடாமால்,பாயில் கிடவாமல், பாவியேன் காயத்தை ஓர் நொடிக்குள் நீக்கி பொன் போரூர் ஐயா உன் சீரடிக்குள்..’ என்ற வரிகள் பல முறை இடம் பெற ஆரம்பித்திருந்தன.
♥பக்க வாத ஸ்ட்ரோக் வந்த அன்று காலைகூட இதைத்தான் உருகி உருகிச் சொல்லிக் கொண்டிருந்தாள். நகர வாழ்க்கையின் அனுகூலம் காரணமாக உடனடி வைத்தியம் கிடைத்தாலும், படுக்கையில் முடக்கம் தவிர்க்க முடியாமல் போனது.
♥மருத்துவமனையிலிருந்து திரும்பி பத்து நாளைக்குப் பின்தான் எங்கள் செல்வ மகனை தொடர்பு கொள்ள முடிந்தது, அலைபேசியில்…
ஏதோ ஒரு நாட்டுக்காக ஏதோ மென்பொருளில் புதைந்திருந்தான்.
“”அப்பா, எப்படி இருக்கீங்க?”
பதில் சொல்ல இரண்டு நிமிடங்கள்தான் கொடுத்தான்.
“”வீக் என்ட் வர்றேன்ம்பா” என்றான்.
♥நகரத்தின் மேற்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு அம்மாவைப் பார்க்க வருவதற்கு வார விடுமுறை தேவைப்படும் தலைமுறை.
♥மருமகள் எங்களுடன் பேச்சை நிறுத்தி 6 வருடங்கள் கடந்து விட்டன. இவள் ஓய்வு பெறும் மாதம் பேசியது. பி.எஃப். பணம் எங்களுக்கு, மற்றவை அவர்களுக்கு என வைத்துக் கொண்டோம். மனபேதம் அங்கே ஆரம்பித்திருக்குமோ? சொன்னால் புரிந்திருக்கும். வேறு காரணம் தேவையோ இல்லையோ, மனுசங்க தேவையில்லை என்ற ஒரு காரணம் போதும் – தூரமாக வாழ தூரத்திற்கு அனுப்ப.
♥போன வருடம் எனக்கு இதயக் குழாய்களில் அடைப்புகள் என்று தெரிய வந்தபோது மகிழ்ச்சியாகவே உணர்ந்தோம். சட்டென்ற மரணத்திற்கு ஒரு வழிவகையாகத்தான் அதைப் பார்த்தோம்.
ஆனால் இவளது பக்கவாதம் பெரும் அதிர்ச்சி. இவளுக்குப் போய் ஏன்?
♥அவளது பிறந்தநாள் அன்று காலையில் ஆலய தரிசனம் அக்கா, தங்கைகளிடமிருந்து தொலைபேசி வாழ்த்துக்கள் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பின் போதும் மகனிடமிருந்தோ, பேத்தியிடமிருந்தோ இல்லையென்று சிறு ஏமாற்றம். எல்லா ஆண்டும் ஏமாற்றம்தான் புதிதில்லை. இருந்தும் எதிர்பார்ப்பாள். அம்மாவாச்சே!
♥கொஞ்சம் ஓட்ஸ் கஞ்சி குடித்துவிட்டு, கோயில் பொங்கலையும் சாப்பிட்டுவிட்டு கை உளைகிறதுன்னு சொல்லிவிட்டு சோபாவில் படுத்த பத்து நிமிடத்தில் கீழே விழுந்தாள்.
வாய் கோணலாகியிருந்தது.
ஒரு வாரம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைக்குப் பின் சொன்னாள்- கண்ணாலும், கைச் சைகையாலும்:
“”நான் போயிடறேங்க. ஹெல்ப் பண்ணுங்க”
♥சாதாரண ஒரு மனிதனுக்கு சாவதும், கொல்வதும் சுலபத்தில் சாத்தியமில்லை. செத்துப் போகலாம் போல இருக்கு என்று சொல்லலாம் ஆனால் போக முடியாது போகத் தெரியாது. நன்றாக இருந்த காலத்தில் நானும் அவளுமே கருணைக் கொலையைப் பற்றி இரு மனமுதிர்ச்சி அடைந்த மனிதர்கள் என்ற முறையில் நிறையப் பேசியிருக்கிறோம். ஆனால், செய்வது எப்படி? என்ன முறை ஒவ்வொன்றுமே நம்மால் முடியாதுன்னுதான் தோன்றியது.
♥பூச்சிக்கொல்லி மருந்து, ரயில் முன், தூக்கு, தூக்க மாத்திரை என பல விஷயங்கள் பரிசீலனைக்கு வந்தது.
♥வீட்டுக்குத் திரும்பிய ஒரு மாதத்திற்குப் பின் தூக்க மாத்திரை வாங்குவதற்கு டாக்டரை வழிக்குக் கொண்டு வந்து சீட்டு வாங்கியாச்சு. எத்தனை மாத்திரை என்றால் அபாயம் என்று நெட்டில் கண்டுபிடித்தோம். ஒரே மருந்துச் சீட்டை வைத்து மூன்று கடைகளில் மாத்திரை வாங்கி வைத்தேன்.
“”உன் பையனையோ, பேத்தியையோ பார்க்கணுமா?”
“”ஆமா. பார்க்கணுமில்லே, கடைசியா ஒரு தடவை”
♥அலைபேசியில் அழைத்தோம். குடகுப் பக்கம் ரிசார்ட்டில் இருக்கிறானாம். திங்கள்கிழமை வந்திடுவோம்” என்றான்.
“”இன்னமும் ஐந்து நாட்கள்”
“”அவன் நம்ம கிட்ட சொல்லிட்டா போனான் நாம மட்டும் ஏன்..?”
“”அவனும் நாமும் ஒன்னா” என்றாள்.
♥இதற்கிடையில் வலையில் தேடும் போது வெளியே (எக்ஸிட்) என்ற ஒரு ஸ்விஸ் நிறுவனம் வயதானவர்களுக்கும், உடல் நலம் பெரிதும் கெட்டுப்போனவர்களுக்காக கருணைக் கொலை செய்வதை ஒரு சேவையாகவே செய்வது தெரிய வந்தது.
♥தொடர்பு கொண்டால் அது அவர்கள் நாட்டு சட்டப்படி, அவர்கள் குடி மக்களுக்கு மட்டும்தான் என்றார்கள்.
♥புதன்கிழமை காலை நல்லதம்பி வந்திருந்தான். சமூக சேவை செய்யும் ஊர் சுற்றும் நாடோடி. எனக்கு கிளாஸ்மேட் வருடா வருடம் ஏதாவது ரசீது புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து விடுவான். நம்மகூட உள்ள மக்களுக்கு ஏதாவது செய்யணும்பாங்கிறதுதான் அவனது மந்திரம். சொல்லிகிட்டே இருப்பான். வந்தவங்கிட்டேயே பணம் கொடுத்து எல்லோருக்கும் டிபன், காபி வாங்கிவரச் சொன்னேன்.
“”மதினிக்கு எப்ப இருந்துடா இப்படி?”ன்னு கண் கலங்கி விட்டான்.
♥டிபன் சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஆகியும் ரசீதுப் புத்தகத்தை எடுக்கவில்லை. நான் செக் புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.
“”வேண்டாம்டா”
“”ஏம்பா?”
♥“”ஒரு ரெண்டு நாள் எங்க ஆசிரமத்துக்கு வந்து இருங்களேன். கொஞ்சம் மாறுதலா இருக்கும்”
“”இந்த நிலைமையிலா? உனக்கும் சிரமம்”
“”இதனாலல்லாம் ஒரு சிரமமும் எனக்கு இல்ல”
♥அவளும் அரை மனதுடன் தலையசைத்தாள். அன்றே மதிய உணவுக்குப் பின் ஆம்புலன்சில் பயணம்.
♥ஆசிரமம் வந்து சேரும்போது இரவு 8 மணி. ஒரே இருட்டு ஒரு அறையில் கொசு வலைக்குள் தஞ்சம். ஏனோ சீக்கிரம் தூக்கம் வந்துவிட்டது.
♥காலை ஆறு மணிக்கு முதல் கதிர்கள் அறைக்குள் வரும்போதே பிரார்த்தனைப் பாடலும் கேட்டது. கதவு திறந்து பார்த்தேன்
♥சீருடை வாசையில் சிறுவர் சிறுமியர். தொழுத கைகள், மூடிய கண்கள். உணர்ந்த நிலையில் வேண்டுதல் பாடல். கதவை விரியத் திறந்தேன். அவளும் வெளியே பார்த்தாள். கை அசைத்து அழைத்து வெளியே போக வேண்டும் எனக் கண்ணால் உத்தரவு.
♥இத்தனை பிள்ளைகளா இங்கு இருக்கிறார்கள். கூர்ந்து பார்த்தால் ஒவ்வொரு பிள்ளைகளிடத்தும் ஏதோ குறை தெரிந்தது.
♥காலை உணவு மேசையில் நல்லதம்பி எங்களின் கொஞ்சம் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார்.
♥“”தனித்தனியே பார்த்தால் குறைபாடுகள் தெரியும். மொத்தமாகப் பார். எந்தக் குறையும் இல்லை. ஒருவரிடத்தில் இல்லாதது மற்றவரிடத்தில் இருக்கும்” என்றார்.
♥“”இரவு உணவுக்கு முன் எல்லோரையும் ஒரு சேரப் பார்க்கலாம்” என்றார். பகலில் அவரவர் பள்ளிக்குப் போய்விடுவார்கள்.
♥மாலை நான்கு மணிக்கு மேல் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொன்றாக திரும்பி வந்தனர். அவரவர்களும் ஏதோ வேலைகளிலும், விளையாட்டிலும் இருந்தனர். இரண்டு ஊன்றுகோல்களுடன் இருந்த ஒரு பெண் குழந்தை கறுப்புக் கண்ணாடி போட்டிருந்த பையனுக்கு புத்தகம் ஒன்று வாசித்துக் கண்பித்துக் கொண்டிருந்தாள்.
♥ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு வகையில் இடைவெளியைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். வாழ்க்கையின் ஒரு பெரும் புதிர் விடுபட்டுக் கொண்டிருந்தது.
♥இரவு ஏழு மணிக்கு டைனிங் ஹாலில் கூடினர். எதுவும் மணி அடிக்கவில்லை. ஆனாலும் எல்லோரும் வந்து விட்டனர்.
♥சிறு மர மேடையில் நின்று ஒரு ஆசிரியை கேட்டார் “”இன்று யார் என்ன செய்யப் போகிறீர்கள் ?”
♥“”கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்த பையன் கை தூக்கி ஸ்கூல்ல சொன்ன கதை சொல்லட்டுமா?” என்றான்.
♥பரமார்த்த குருவும் சீடர்களும் கதை ஒன்று சொன்னான். எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
♥“”இன்னொன்று” என்று கத்தினர். ஆசிரியை ஏற்கெனவே நின்றிருந்த பக்கம் லேசாக தலை திருப்பினான்.
“”சொல்லு கண்ணா”
♥“”சொல்றேன், இது யானையைப் பார்த்த ஐந்து குருடர்கள் கதை” என்று ஆரம்பித்தான்.
♥எனக்குப் படபடவென்று நெஞ்சம் துடித்தது. இவளைப் பார்த்தேன். துடிப்பு முகத்தில் தெரிந்தது.
♥இவன் எப்படி? ஏன்? இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் கவனிக்க ஆரம்பித்தோம்.
♥கதையைச் சொல்லி முடித்துவிட்டான் என்று நினைத்தபோது “”அப்புறம் அடுத்த நாள்..” என்று தொடர்ந்தான்.
ஒரு மன உதறலுடன் அவனைக் கவனித்தோம்.
♥“”அதே கோயிலுக்கு அவங்க ஐந்து பேரும் மறுபடியும் யானையைப் பார்க்கப் போனாங்க. படுத்துக் கிடந்த யானை இவங்களைப் பார்த்தவுடனே முட்டி போட்டு எழுந்து நின்று இவர்கள் பக்கம் தும்பிக்கையை நீட்டி ஒரு பிளிறு பிளிறியது”.
♥“”டேய் பசங்களா, யானைக்கு உங்களைத் தெரிஞ்சிருக்குடா தினம் வாங்கடா என்றார்.யானைப் பாகன்” என்று கதையை முடித்தான்.
♥அவ்வளவுதான். என் வலது கையைத் தொட்டுக் கொண்டிருந்த கண்மணியின் இடது கை இறுக்கிப் பிடித்தது. அது வாதத்தினால் செயல் இழந்திருந்த கை. எல்லோரும் கை தட்டிக் கொண்டிருந்தபோது அவளை மீண்டும் பார்த்தேன்.
தொடையை தட்டிக் கொண்டிருந்தாள்.
நிறைவான இரவு உணவுக்குப் பின் அறைக்குத் திரும்பியவுடன் சொன்னாள்:
“”நாம இருக்கணுங்க. இன்னும் எவ்வளவோ செய்யணுங்க”
“”ஆமாம் கண்மணி!
0 Comments
Thank you