#காத்திருப்பேன்
ஆறேழு மாசம்
ஆசை வைச்சு காத்திருந்து
ஐயரிடம் போய் நாளும் வைச்சு...
இராத்தூக்கம் காணலயே!
இராக்கோழி கூவலயே!
அதிகாலை மணிகூட
அடிச்ச சத்தம் கேட்கலயே!
அவசரமாய் தலை முழுகி
அரைகுறையாய் தலை துவட்டி
வீட்டுக்கு மெழுக்கு போட்டு
விருந்துக்கு பாலெடுத்து
தலைவாரி பொட்டுவைத்து
தனி ரோஜா பூச்சூடி..
தவிப்புடனே காத்திருப்பேன்.
கதவோரம் நின்று
கால்விரலால் படம்கீறி
கனகால ஆசையெல்லாம்
கொட்டிவிட காத்திருப்பேன்..
அவன் வருகைக்காக பூத்திருப்பேன்
இவன் தான் கணவன் என்று எண்ணித்தொலைத்திருப்பேன்.
இதயவறை ஒன்றை இடமொதுக்கியிருப்பேன்.
வந்தவர்கள் வாய்சிரித்து பேசி
வசதி பற்றிக்கேட்பார்கள்.
வடிவழகை பார்ப்பார்கள்.
வருகின்றோம் என்பதோடு
வந்த கதை முடிவு பெறும்.
பார்த்துப் போனவர்கள் யாரும் என்மனதை
பாராது போனார்கள்.
அடிக்கடி ஆட்கள் மட்டும்
ஆரும் திரும்பி வருவதில்லை
பதில் வராமல் போதல் எனக்கு
பழக்கமாகி போயுள்ளது
நான் சூடும் பூ மட்டும்
சுருங்கி வாடுகின்றது எனைப்பார்த்து.
நாளையும் தயாராவேன்!
மனசை மட்டும் பார்க்கும்
மாப்பிள்ளை வருவானென.
0 Comments
Thank you