♥மனம் இருந்தால்...
♥தைக்க கொடுத்திருந்த சல்வாரை வாங்க, தையல் கடைக்கு சென்றிருந்தேன். திரும்பும் போது, 'அக்கா...' என்றொரு குரல். திரும்பி பார்த்தால், 10 வயது பெண், கையில் சுருக்கு பைகளை வைத்தபடி, கடையிலிருந்து வெளியே வந்தாள்.
♥'கடைக்காரர் தைத்த பின், துாக்கியெறியும் துணியில் தைச்சு இருக்கேன்கா. பிரிஜ்ஜில் காய்கறி வைக்க வசதியாக இருக்கும்...' என்றாள்.
விசாரித்ததில், அந்த கடை வாசலை பெருக்கி, சுத்தம் செய்யும் பணி பெண்ணின் மகளான அவளுக்கு, ஓய்வு நேரத்தில் கடைக்காரர், தையல் கற்று கொடுத்து வருகிறார்.
♥இந்த பைகளை விற்று, அப்பெண், தன் படிப்பு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது, தெரிந்தது.
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழிக்கேற்ப, வெட்டி எறியப்பட்ட துணிகளை வியாபாரமாக்கிய அப்பெண்ணின் உழைப்பும், சாமர்த்தியமும் என்னை ஆச்சரியப்படுத்தியது
♥மேலும், ஏழை பெண்ணுக்கு, ஏதோ உதவினோம் என்றில்லாமல், சம்பாதிக்கவும் வழி சொல்லித் தந்த தையல்காரரின் நல்ல உள்ளமும் புரிந்தது.
அதிக பண செலவுமில்லை, பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்கவும் வாய்ப்பு மற்றும் ஏழை பெண்ணுக்கும் பயனுள்ள தையல் பயிற்சி.
♥ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள்.
வியப்புடன் அப்பெண்ணையும், தையற்காரரையும் பாராட்டி, தேவைப்பட்ட பைகளை வாங்கி வந்தேன்.
0 Comments
Thank you