அவள் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி. எப்போதும் அவள் முகம் இறுக்கமாக இருக்கும். கொஞ்சம்கூட சிரிக்கமாட்டாள். தனியாகவே இருப்பாள். சக மாணவிகள் பலர் அவளோடு நெருங்கி பேச விரும்பினார்கள். ஆனால் அவள் ஆர்வமாக பேச விரும்பாததால் ஒவ்வொருவராக விலகிவிட்டார்கள்.
♥பக்கத்து வகுப்பு மாணவன் ஒருவன் அவளை கண்காணித்தபடியே இருந்தான். அவள் வெளிப்படுத்த முடியாத கவலையில், மிகுந்த மனஅழுத்தத்தோடு இருப்பதை அவன் உணர்ந்துகொண்டான். அதனால்தான் அவள் மற்றவர்களிடம் இருந்து விலகி, தனிமையிலே வெம்பிக்கொண்டிருக்கிறாள் என்பதை அவன் புரிந்துகொண்டான். அவளை எப்போதாவது எதிரும்புதிருமாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்போது, அவனே வலியச் சென்று அவள் முகம் பார்த்து சிரிப்பான்.
♥பதிலுக்கு முதலில் ஒருசில தடவை முறைத்துப்பார்த்துவிட்டு விலகிய அவள், பின்பு லேசாக சிரிக்கத் தொடங்கினாள். அடுத்து அவன் அவளோடு ஒருசில வார்த்தைகள் பேசினான். இவளும் பேசினாள்.
♥இடையில் ஒரு நாள் அவனை திடீரென்று சந்தித்து, ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. உன்கிட்டே நிறைய பேசவேண்டும். என்னை உனக்கு பிடிச்சிருக்கா?’ என்று கேட்டாள். அவனும் யதார்த்தமாக, ‘எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு. என் பெற்றோர் ரொம்ப நல்லவர்கள். நீ எப்போது வேண்டுமானாலும் என்னிடம் செல்போனில் பேசலாம். உனக்கு ஏதாவது பிரச்சினை இருந்தாலும் என்னிடம் சொல்..’ என்றான்.
♥அப்போது முதல் முறையாக அவள் முகம் மலர்ந்ததை அவன் கவனித்தான்.
♥மறுநாள் அவனை சந்தித்த அவள், தனியாக பேசவேண்டும் என்றாள். அவனும் ‘காபிடே’ ஒன்றுக்கு அவளை அழைத்து சென்றான். பயந்து பயந்து அவன் பின்னால் சென்றாள்.
♥அங்கு போய் அமர்ந்ததும், தன் பையில் இருந்த தனது பிறப்பு சான்றிதழை அவன் கையில் எடுத்து கொடுத்தாள். ‘நேற்றுதான் எனக்கு 18 வயது ஆயிருக்கு. நான் மேஜர் ஆயிட்டேன். என் வீட்டில் இருக்கும் நகை, பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு வருகிறேன். நாம எங்கேயாவது ஓடிப்போயிடலாமா?’ என்றாள்.
♥அவன் அதிர்ந்துவிட்டான். ஆனாலும் சுதாரித்துக்கொண்டு, ‘எனது நெருங்கிய உறவினருக்கு அடுத்த வாரம் திருமணம். அதன் பின்பு இது பற்றி நாம் பேசலாம்..’ என்று அவளுக்கு காபி வாங்கிக்கொடுத்து வழியனுப்பிவைத்துவிட்டு, அதிர்ச்சி விலகாமல் தனது அம்மாவிடம் போய் விஷயத்தை சொன்னான்.
♥‘நீ சரியாக அவளை அணுகியிருக்கிறாய். உணர்ச்சிவசப்பட்டு அவளை நீ திட்டி இருந்தாலோ, உபதேசம் செய்திருந்தாலோ அவளது மனஉளைச்சல் அதிகரித்திருக்கும். அவள் இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம் என்பதை நாம் தெரிந்துகொண்டால்தான் அவளுக்கு சரியான வழியை காட்ட முடியும். நான் அவளை பார்க்க விரும்புவதாக கூறி, வீட்டிற்கு அழைத்து வா..’ என்றார்.
♥அவன், அவளை அழைத்தான். அவள் முதலில் பயந்தாள். ‘உன்னை பற்றி நான் எதுவும் என் அம்மாவிடம் சொல்லவில்லை. என் அம்மாவை உனக்கும் ரொம்ப பிடிக்கும். ஒருமுறை அவரை நீ சந்தித்தால் உனக்கு சந்தோஷம் ஏற்படும்’ என்றான்.
♥அவளும் சென்றாள். மெல்ல மெல்ல அவளிடம் பேச்சுக்கொடுத்து அவள் குடும்ப நிலவரத்தை மாணவனின் அம்மா அறிந்தார். அப்போது அந்த மாணவி தன்னை மறந்து அழுதாள். ‘அப்பாவும், அம்மாவும் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுகிறார்கள். தடித்த வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்தி தினமும் சண்டை போடுகிறார்கள். அதனால் வீடே நரகமாக காட்சியளிக்கிறது. என்னால் ஒழுங்காக சாப்பிடவோ, தூங்கவோ, படிக்கவோ முடிவதில்லை. அந்த நரகத்தில் இருந்து தப்பி, யாருடனாவது ஓடிவிடவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கைக்குரியவராக உங்கள் மகன் மட்டுமே இருக்கிறார்’ என்றாள்.
♥அவளது மனஉளைச்சலுக்கான காரணத்தை புரிந்துகொண்ட அந்த பெண்மணி, அவளை தேற்றினார். அவளது அம்மா வேலைபார்க்கும் அலுவலகத்தின் விலாசத்தை வாங்கி, அவரை சந்தித்து, மகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனஅழுத்தத்தை எடுத்துக்கூறி, ‘சண்டையை குறைத்து மகளிடம் அன்பு செலுத்தும்படி’ கூறியிருக்கிறார்.
♥கணவன்– மனைவியாக வாழும் நீங்கள் உங்கள் வீட்டில் சண்டை போடுகிறீர்களா? உங்கள் மகள்கூட இப்படி ஒரு கோணத்தில் ‘தப்பி ஓட’ யோசிக்கலாம் என்பதை, உங்க காதில போட்டு வைக்கிறோம் அவ்வளவுதானுங்க.
0 Comments
Thank you