மணப்பெண்ணுக்கு பொட்டு வைக்கத்
தேடியபோதுதான்
மண்டபத்தில் தாய்மாமனைக்
காணவில்லையென்று அறிந்தது
மணமேடை
பத்திரிக்கையில்
தன் பெயரைச் சேர்க்கவில்லையென்ற
கோபத்தை
கல்யாணத்தை புறக்கணித்தலால்
ஈடு செய்ய முனைத்திருந்த தாய்மாமன்
மண்டப வாசலில்
முறுக்கிக் கொண்டு நின்றிருந்தார்
கையைப் பற்றிய
மச்சானின் அழைப்பை உதறிவிட்டு
தங்கையின் அழுகையை
தரையில் எறிந்தார்
பங்காளிகள் பஞ்சாயத்தை
சொம்போடு வீசினார்
யார் பேச்சுக்கும் மசியாமல்
வீராப்பு காட்டியவரை
மாமா என்றழைப்பில்
கண்ணீர் கசியச் செய்த மணப்பெண்
மணமேடை இறங்கியிருந்தாள்
நீ எதுக்கும்மா வந்த என்று
துண்டு கீழே விழுந்தது தெரியாமல்
உருகியோடியவர்
பொண்ணை மணமேடையில்
நிறுத்தியபோது
நல்ல நேரம் துவங்கியிருந்தது
நான் கோபப்படும் உரிமையை
நீதானம்மா கொடுத்த என்றபடி
தாய்மாமன் சீர் செய்தவரின்
காலில் விழுந்து வணங்கிய மணப்பெண்ணின் நெற்றியில்
அழுத்தமாய் பொட்டொன்று வைத்தார்
ஒட்டிக்கொண்டது இரத்த சொந்தம்
மண்டப வாசலில்
துண்டாகிக் கிடந்தது வீராப்பு
0 Comments
Thank you