♥பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்!
♥பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்துகளில், பள்ளி செல்லும் மாணவியர், கல்லுாரி பெண்கள், வேலைக்கு போகும் பெண்கள் - இந்த மூன்று வகையினரும் தான், பாலியல் அத்து மீறல் செய்யும் ஆண்களின் அதிக இலக்கு. இதை செய்பவர்கள், இந்த பெண்களுடன் பயணம் செய்யும் சக ஆண் பயணியர்; வயது வித்தியாசம் இல்லமல், 13-75 வயது வரை எல்லா தரப்பு ஆண்களும் இதைச் செய்கின்றனர்.பெண்கள் மேல் பாலியல் அத்து மீறல்களை செய்வதற்காகவே, பயணம் செய்யும் ஆண்கள் உண்டு.
இது எதில் முடிகிறது என்றால், முதலாவது, இது போன்ற வக்கிர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக துணிச்சல் ஏற்படுகிறது. காரணம், பொதுப் போக்குவரத்தில் கூட்ட நெரிசல் என்ற ஒரே ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தங்களின் வக்கிர விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
வக்கிர புத்தி
இரண்டாவது, பெண்கள் என்றாலே, பாலியல் உணர்வுகளை தீர்த்துக் கொள்ள பயன்படும் போகப் பொருள் என்ற தவறான, மோசமான எண்ணம். மூன்றாவது, வயது வித்தியாசம் பார்ப்பதே இல்லை; அதாவது, குழந்தையாக இருந்தாலும் வயதான பெண்களாக இருந்தாலும், இவர்களின் இலக்கு, பெண் என்றாலே, பாலியல் தொல்லை தந்து, அல்பமான உணர்வுகளை அனுபவிக்க வேண்டும் என்பதே. தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களின் வக்கிர நிலை அதிகரித்தபடி செல்கிறது.
தனிமையில் இருக்கும் பெண்களை பார்க்கும் இந்த வக்கிர புத்தியுள்ள ஆண்கள், பாலியல் பலாத்காரம் செய்யும் அளவிற்கு போகின்றனர். பொருளாதார நிலையில் பின்தங்கிய பெண்கள், பொது போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த பெண்களுக்கு, இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டால், அது பெரிய குற்ற உணர்வை ஏற்படுத்தும். பிரயாணம் என்றாலே பயத்தையும் ஏற்படுத்தும்.
♥காலையில், பேருந்தில் இது போன்ற அனுபவம் ஒரு பள்ளி மாணவிக்கு ஏற்பட்டிருந்தால், அவளால் வகுப்பில் முழு கவனத்துடன் பாடத்தை கவனிக்க முடியாது; சக மாணவியருடன் சகஜமாக பேசிப் பழக முடியாது.அடுத்தது, ஆண்கள் என்றாலே, உடல்ரீதியிலான அனுபவத்திற்கு அலைபவர்கள் என்ற தவறான எண்ணம் ஏற்படலாம். இந்த எண்ணம், தன் மீது பாலியல் அத்து மீறல் செய்த ஆண்கள் மீது மட்டுமல்லாமல், ஆண்கள் என்றாலே இப்படித் தான் இருப்பர் என்று, எல்லா ஆண்கள் மேலும் வெறுப்பு ஏற்படலாம்.
திருமணமான பெண் என்றால், தாம்பத்தியம் மேல் வெறுப்பு ஏற்படலாம்; இதனால், குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படலாம்.பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும் போது இது போன்ற பாலியல் அத்து மீறல்கள் நடக்கும் என்பது, பல அம்மாக்களுக்கு தெரியும். ஆனாலும் வேறு வழியில்லாமல் தங்கள் மகளை அனுப்ப வேண்டிய கட்டாயம். கல்லுாரிக்கோ, பள்ளிக்கோ, வேலைக்கு செல்லும் தன் பெண், பத்திரமாக வீடு திரும்பும் வரை, அம்மவுக்கு மன உளைச்சல் இருக்கும்.
♥புரியாத வயதில் இது போன்ற மோசமான அனுபவத்தை எதிர்கொள்ளும் ஒரு சில பெண்களுக்கு, பாலியல் உணர்வுகளில் அதீத விருப்பம் ஏற்படலாம்.அதனால், சிறு வயதிலேயே ஆண் துணை வேண்டும் என்று விரும்பலாம்.பாலியல் உறவை மட்டுமே பிரதானமாக கொண்டு அமையும் உறவுகள் நீண்டகாலம் நிலைப்பதில்லை. இதனால், பல ஆண்களுடன் உறவு வைத்து கொள்ளவும், தவறான பாலியல் செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளன.
பாதுகாப்பு வழி
♥பெண்களுக்கு ஏற்படும் இது போன்ற பாதிப்புகளை கருத்தில் வைத்து, அதைத் தவிர்ப்பதற்காக, பேருந்தில், ஆண்கள் பின் பக்கமும், பெண்கள் முன் பக்கமும் பயணம் செய்ய வேண்டும் என்ற விதி கேரளாவிலும், ஆண்களுக்கு தனி வரிசை, பெண்களுக்கு தனி வரிசை என்று தமிழகத்திலும் உள்ளது.ரயிலிலும் பெண்களுக்கென்று தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. எல்லா இடத்திலும் கண்டிப்பாக இதைச் செயல்படுத்தினால், பெண்கள் பாதுகாக்கப் படலாம்.
♥அடுத்தது, இது போன்ற பாலியல் அத்து மீறல்கள் நடந்தால், குற்ற உணர்வு இல்லாமல், சப்தமாக, 'என் பக்கத்தில் இருந்து தள்ளி நில்லு' என்று வெளியில் சொல்ல கூடிய தைரியத்தை, பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அமைதியாக கஷ்டப்படுவதை நிறுத்தபழக வேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் போது, எதிர் பாலினரின் நெருக்கம் பாலியல் உணர்வுகளைத் துாண்டுகிறது.
♥இந்த உணர்வு ஒரு சிலருக்கு மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தரும். அதனால், இதற்காகவே பயணம் செய்கின்றனர். ஒரு சில பெண்களும், இதற்கு ஒத்துழைக்கலாம்; அது ஆண்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.பெண்களை மதிக்க, ஆண்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பாலியல் தொந்தரவுகள், பெண்களை எந்த அளவு பாதிக்கின்றன என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். 12 வயதிலிருந்தே இதைச் சொல்லிக் கொடுத்தால், சமுதாயம் ஓரளவு திருந்தலாம்
0 Comments
Thank you