♥தலைகீழ் – ஒரு பக்க கதை
♥“வெளியே செல்லும்போது துப்பட்டா போடாமல் வரும் மகளைக் கண்டிக்கவும் முடியவில்லை. அவளின் கழுத்துக்குக் கீழே கண்களை துறுதுறுவென மேயவிடும் இளவட்டப் பசங்களின் சேட்டைகளையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’
♥முதுகு தெரியாதபடி முந்தானையைப் போர்த்திக் கொண்டு பதட்டத்துடன் பக்கத்தில் மகள் ப்ரியாவுடன் பஸ்ஸ்டான்டில் நின்று கொண்டிருந்தாள் சீதா.
பத்தடி தள்ளி நின்ற அந்தப் பையன் ப்ரியாவையே “அந்த’ இடத்தில் அநாகரிகமாக பார்த்தபடி சீதாவின் எரிச்சலையும் பி.பி.யையும் எகிற
வைத்துக் கொண்டிருந்தான்.
♥“கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம்னு இப்பொழுது இஷ்டத்துக்குக் கண்களை மேயவிடும் இந்தக் கண்றாவி சுதந்திரம் வேறு’
♥வார்த்தைகளை மனசுக்குள் பொசுக்கிக் கொண்டு அவன் பார்வை படாதபடி மகளுக்கு முன்னால் நின்று பாசக் கேட்யமானாள் சீதா!
♥நல்லவேளை… பஸ் உடனே வர பட்டென மகளை முதலில் ஏறவிட்டு தானும் தாவினாள்… எதிலிருந்தோ தப்பித்த மனநிலை…
♥அரசு விடுமுறை என்பதால் பஸ்சில் கூட்டம் குறைவுதான் என்றாலும் உட்கார இடமில்லை. இருக்கையெல்லாம் பள்ளி வாண்டுகள்.
♥இரண்டு சிறுமிகள் எழுந்து இவர்களுக்கு இடம்தர, ஒருத்தி ப்ரியாவைப் பார்த்து, “அக்கா கொடியை தலைகீழா குத்தியிருக்கீங்க!’ன்னு அந்த
இடத்தில் கை காட்டினாள்.
♥ப்ரியாவும் ஷாக் அடித்த மாதிரி தலை கீழாய் வெளிப்படுத்திய தன் தேசப்பற்றை நேராக்கினாள்… அந்த வினாடியில் சீதாவின் நெஞ்சில் சுருக்கென்றது.
♥ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்… அவனும் பார்த்தான். மெலிதாகச் சிரித்தாள். இப்பொழுது சீதாவுக்கு எல்லாமே நேராகத் தெரிந்தது.
- அனிதாகுமார்
0 Comments
Thank you