♥ஒழுக்கம் உயர்வு தரும்!
திருமணம் ஆகாத என் உறவினர் மகன், சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறான். வசதியாக தனி வீடு எடுத்து தங்க, வருமானம் போதாமையால், நான்கு நண்பர்கள் தங்கியுள்ள அறையில், தானும் இணைந்து, வாடகையை பகிர்ந்து கொள்கிறான்.
♥இந்நிலையில், சொந்த வேலையாக சென்னை சென்றேன், இரண்டு நாள் தங்கும் சூழ்நிலை ஏற்படவே, 'அம்மா... என் அறையில் வந்து தங்குங்கள்...' என்று அழைத்தான், உறவினர் மகன். பேச்சுலர் குடியிருக்கும் இடத்தில், புத்தகங்களும், உள்ளாடைகளும் ஒழுங்கற்று கிடக்கும். அதைவிட, சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்களை சுவரில் கண்டபடி ஒட்டி, வைத்திருப்பர் என்றெண்ணி மறுத்து, சிறிது துாரத்தில் உள்ள என் சகோதரி வீட்டில் தங்கினேன்.
♥மறுநாள், அந்த பையன், தன் அறைத் தோழர்களுடன் வந்து, தாங்கள் சமைத்து சாப்பிட சில பாத்திரங்கள் வாங்கி வைத்திருப்பதாகவும், பிரஷர் குக்கரில் சமைக்க கற்றுத் தரும்படி அழைத்தான். வேறு வழியின்றி அவர்களுடன் சென்றேன்.
தயங்கியபடி வீட்டினுள் நுழைந்த என்னை, ஊதுபத்தியின் நறுமணம் வரவேற்றது.
♥ஐந்து இளைஞர்களின் இருப்பிடமும் மிக துாய்மையாக, நேர்த்தியாக இருந்ததுடன், அவர்களது படுக்கையின் தலைப்பக்க சுவரில், அவர்களது பெற்றோரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதுபற்றி கேட்க, 'தினமும் எங்கள் பெற்றோரின் படங்களை பார்க்கும் போது, எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் எங்களை படிக்க வைத்து, எங்கள் முன்னேற்றத்தை காண கனவுகளுடன் காத்திருக்கும் அவர்கள், எங்களை தீய வழியில் செல்லாதபடி அறிவுறுத்துவது போல் உள்ளது...' என்று சொன்ன அவர்கள் மீது பரிவு ஏற்பட்டது.
அக்கணமே, அவர்களை என் பிள்ளைகளாக பாவித்து, மேலும் இரண்டு நாட்கள் தங்கி, வாய்க்கு ருசியாக சமைத்து கொடுத்து, ஊர் திரும்பினேன்.
♥படிப்பதற்கும், வேலை பார்க்கவும், வெளியூர் சென்று தங்கும் இளைஞர்களே... பண்பும், ஒழுக்கமும் உங்கள் வருங்காலத்தை வளமாக்கும்!
0 Comments
Thank you