மனதை தொட்ட பதிவு
பல விதமான Test களுக்கு பின் டாக்டரை சந்திக்கச்சென்றேன்,
'இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லம்மா, இந்த வயசுல எல்லா பெண்களுக்கும் வர்ற பிரச்சனை தான், கர்பப்பையை Remove பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும், ரெண்டு நாள் ஆஸ்பிட்டலில் இருந்தா போதும், யோசிச்சு சொல்லுங்க' என்று சொல்லிமுடிக்க எத்தனையோ யோசனைகளோடு வீடு வந்தேன்.
மகன்களிடமும் மகள்களிடமும் சொல்ல, இப்போ இருக்கிற Advance technology ல இதெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரண ஆபரேஷன் மா, நகத்தை வெட்டி எடுக்கிற மாதிரி Easy யா பண்ணிடறாங்க, பயப்படுறதுக்கு எதுவுமே இல்லை, தைரியமா இரும்மா என்று சமாதானப்படுத்தினார்கள்!
எனக்கு மட்டும் தயக்கமாகவே இருந்தது!
ஆபரேசன் நாளன்று பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கூட ஆஸ்பிடலுக்கு வந்துவிட்டார்கள்! என்னுடைய தயக்கம் மட்டும் போகவே இல்லை!
ஆபரேசன் முடிந்து சில மணிநேரத்தில் கண்விழித்தேன்! கணவர், குழந்தைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் பார்க்க வந்துவிட்டார்கள்!
ஆனால் நான் பார்க்க விரும்பியது இவர்கள் யாரையும் இல்லை, ஆபரேசன் செய்து எடுக்கப்பட்ட என்னுடைய கர்ப்பப்பையை. ஏற்கனவே, நான் சொல்லி வைத்ததால் பாதுகாப்பான முறையில் வைத்திருப்பதாக சொன்னார்கள்!
கஷ்டப்பட்டு எழுந்து நடந்தேன், அடிவயிற்றின் வலி நடக்கமுடியாமல் தடுத்தது, ஆனாலும் நடந்தேன்! box ல் இருந்து வெளியே எடுத்தார்கள், பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு இருந்தது!
மெல்ல தடவியபடி தொட்டுப்பார்த்தேன்,
அழகான அந்த கருவறை அங்கங்கு வீங்கியும், முடிச்சுகளாகியும், சிறுசிறு கட்டிகளோடும் உருக்குலைந்து போயிருந்தது! மற்றவர்களை பொறுத்தவரை இது சாதாரண கர்ப்பப்பை, என்னை பொறுத்தவரை இது என்னுடைய கடவுள்!
என் ஐந்து குழந்தைகளின் பாரத்தை பாதுகாப்பாய் சுமந்தது இந்த கருவறைதான்!
ஒரு தாயாக இந்த உலகத்தில் பெருமையோடு வலம்வர காரணமே இந்த கருவறை தான்!
என் குழந்தைகளை கலைந்து போகாமல் காப்பாற்றியது இந்த கடவுள் தான்! எல்லோரும் எடுத்துவிடலாம் என கூறியபோது நான் தயங்கியதன் காரணம் உயிருக்கு பயந்து அல்ல,
என்னை தாயாக்கிய இந்த தாயை இழந்துவிடுவேனோ என்றுதான்!
நாலைந்து வருடங்களாய் குழந்தையின்றி நான் அலைந்த கோயில்களின் கடவுளுக்கு தெரியும் என் வலி!
மலடி என்று சொல்லி என் மாமியார் வேறுபெண் தேடிய போது ஏற்பட்ட ரணத்தை குணமாக்கியது இந்த கருவறை தான்!
முதல் குழந்தையை இழந்தது போன்ற இந்த வலியை முதன்முதலாக உணர்கிறேன்!
நான் உன்னை சரியாக பார்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேனோ என்கின்ற குற்ற உணர்ச்சி மேலோங்க.........,
எல்லாம் தந்த அந்த கருவறைக்கு சில துளி கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்கிவிட்டு அங்கிருந்து திரும்புகிறேன்,
அந்த கடவுள் தந்த அத்தனை உறவுகளும் என்னைத்தாங்க ஓடிவருகிறது! உடலளவில் கொஞ்சம் லேசாகிறேன்,
மனது மட்டுமே கனமாகிறது!
0 Comments
Thank you