♥ஒரு ஊரில் ஒருவர் தங்கத்தால் மெல்லிய தாள் செய்து விற்கும் தொழில் செய்து வந்தார். அவருக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் அந்தக் குழந்தை அப்பா செய்து வைத்திருந்த தங்கத் தாள் ஒன்றை எடுத்து ஒரு அட்டைப் பெட்டியில் ஒட்டி விட்டாள். அதைப் பார்த்த அப்பாவிற்கு மிகவும் கோபம். குழந்தையை 'இப்படிப் பொருளின் மதிப்புத் தெரியாமல் வீணடித்து விட்டாயே" என்று கோபித்துக் கொண்டார்.
♥மறுநாள் காலை அவர் தூங்கி விழிக்கும்போது அந்தத் தங்கத் தகடு ஒட்டிய பெட்டி அவரது படுக்கை அருகில் இருந்தது. அதன் மேல் குழந்தை அவள் சொந்தக் கையெழுத்தில் பிறந்தநாள் வாழ்த்து எழுதியிருந்தாள். தந்தை அந்தப் பெட்டியை ஆர்வமாகத் திறந்து பார்த்தார். அது காலியாக இருந்தது.
♥திரும்பவும் அப்பாவிற்கு கோபம் வந்தது. குழந்தையை கூப்பிட்டு 'ஏன் இப்படி செய்கிறாய்?" என்று கோபமாகக் கேட்டார். அதற்கு அவள் மழலை மாறாமல் 'அப்பா, நான் அந்தப் பெட்டி நிறைய முத்தம் நிரப்பி வைத்திருந்தேனே. உங்களுக்குத் தெரியவில்லையா?" என்று கேட்டாள். அப்பா தன் தவறுக்கு வருந்தினார். மகளைக் கட்டி அணைத்து முத்தங்கள் கொடுத்தார்.
♥இன்று அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவள் குடும்பம், குழந்தை என்று கிளம்பி போய்விட்டாள். அப்பா இன்னமும் அந்தப் பெட்டியை பத்திரமாக வைத்திருக்கிறார். தினமும் அதைத் திறந்து அதிலிருந்து ஒரே ஒரு முத்தம் மட்டும் எடுத்துக் கொள்கிறார். இன்னமும் அந்தப் பெட்டியில் குறையாமல் முத்தங்கள் இருக்கின்றனவாம்.
அன்பிற்கு மொழியும், வடிவமும் கிடையாது !!
0 Comments
Thank you