HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நரகப் பேருந்து

♥நரகப் பேருந்து

♥எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விடுவேன் என்பது போல படியில் தொங்கிய ஆட்களால் ஒருபுறம் சாய்ந்து ஆடி அசைந்து வந்து நின்றது பேருந்து. அதைப்பார்த்து பெருமூச்சு விட்டபடி கொஞ்சம் வழிவிடுங்க என்று கூறிக்கொண்டே பேருந்தில் ஏற முயன்றாள் ஜானகி. படியில் தொங்கிக்கொண்டிருந்த ஆட்களில் ஒரு சிலரைத் தவிர யாரும் வழிவிடவில்லை. இறங்கி ஏறுங்க என்ற நடத்துனரின் வார்த்தையும் ஒருவர் காதிலும் கேட்கவில்லை. இறங்கிவிட்டால் கிடைத்த இடமும் போய்விடும் என எண்ணிய சிலர் அப்படியே ஏறி உள்ள போமா இடம் இருக்கு என்றனர். அடித்துப் பிடித்து பலரை இடித்து ஒரு வழியாய் உள்ளே ஏறினாள் அவள்.

♥கூட்டத்தில் தன் தோழி மீனா கொஞ்சம் பின்னால் நின்றிருக்க என்றும் போல் இன்றும் அவளைப்பார்த்து ஸ்ஸ்....ஸப்பா என்று தலையை இருபுறமும் ஆட்டிவிட்டுத் தனக்குக் கிடைத்த சொற்ப இடத்தில் ஒட்டிக் கொண்டாள்.

♥போட்டு வந்த குறைந்த அளவு ஒப்பனையும் அழிந்து வியர்வை வழிந்தோடியது. மொத்த உடம்பையும் ஒரே கால் தாங்கிக்கொண்டிருக்க துப்பட்டா ஒரு புறமும் கைப்பை ஒரு புறமும் மாட்டி வேதனை அளித்தது.

♥மூச்சு விடக் கூட  முடியாமல் நின்று கொண்டிருக்க நடத்துனர் கடைசியில் இருந்து டிக்கெட் வாங்குவதற்காக முன்னேறி வந்து கொண்டிருந்தார். இனி அனைவரும் வழி விடுகிறேன் என்ற பெயரில் நசுக்கித் தள்ளி விடுவார்கள் என நினைக்கையில் அவர் பை வைத்த நடத்துனராக இல்லாமல் பாசக்கயிட்றை வீசி வரும் எமனாகவே தெரிந்தார். நல்லவேளையாக மாட்டிய கைப்பையை எடுத்து டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மூன்று ஸ்டாப் முன்பு ஏறும் தன் தோழி அவளுக்கும் சேர்த்தே டிக்கெட் எடுத்து விடுவாள்.

♥பாதாள குகைக்குள் சென்று திரும்பியது போல் ஒரு வழியாக நடத்துனர் கடந்து செல்ல ஒரு சிறிய மூச்சு எட்டிப்பார்த்தது. அது முடிப்பதற்குள் அடுத்த ஸ்டாப் வந்து விட இன்னும் பலர் அடித்துப் பிடித்து ஏற வந்த மூச்சு அப்படியே பயந்து ஓடியது.

♥அழாத குறையாய் ஒரு காலில் நின்று கொண்டிருக்க திடீரென ஏதோ ஒரு அசௌகரியம். யாரோ அவள் இடையில் கை வைத்தது போன்ற உணர்வு ஏற்பட
என்னவென்று யோசிப்பதற்குள் மறுபடியும் அதே உணர்வு தோன்ற சந்தேகமின்றி எவனோ ஒருவன் தான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பின்னிருந்து கை வைக்கிறான் எனத் தெரிய உடம்போடு சேர்ந்து மனமும் ரணமானது. கோபம் தலைக்கு ஏற ச்சீ நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கள, ஏன் இப்டி நாய் மாதிரி அலையுறீங்க எனப் பேசிவிட்டு வேகமாய்த் திரும்பி சப்பென கண்ணத்தில் ஒருவனை அடித்த பழைய ஞாபகங்கள் வர இம்முறை எதுவும் பேசாமல் ச்சீ இது மாதிரி ஜென்மங்கள் எப்போ தான் திருந்த போகுதோ என மனதிற்குள் நினைத்துக் கொண்டு சட்டென திரும்பி பின்னிருந்தவனை முறைக்க அவன் ஒரு அடி தள்ளிச் சென்றான். ஆனால் அவளுக்குத் தெரியும் அடுத்த நிறுத்தம் வருவதற்குள் அவன் மீண்டும் கை வைப்பான் என.

♥இது போன்ற பலரை எத்தனையோ முறை சத்தம் போட்டும், ஒரு தடவை ஒருவனை கன்னத்தில் அறைந்தும் ஆண் இனத்திற்கு இழுக்காக விளங்கும் இது போன்ற ஆண்கள் முளைத்துக்கொண்டே தான் இருக்கின்றனர் என நொந்தவள் தன் கைப்பையை வைத்து தன் பின்பக்கத்தை மறைத்து கொஞ்சம் நகர முயற்சித்து இடப்புறம் திரும்ப அங்கொருவன் சலனப்பார்வையில் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

♥அந்த நொடி நரகமென தோன்ற வேறு வழி இன்றி பக்கத்தில் இருந்த சிலரை இடித்துக்கொண்டு திட்டுவாங்கிக்கொண்டு முன்னேறினாள்... அதன் பின்னர்தான்  ஒரு மன நிம்மதி கிடைத்தது.

♥ஒரு வழியாய் சில நிறுத்தங்களைத் தாண்டி மூச்சு விட இடம் கிடைக்க கடல் கடந்து வந்தது போல் தன் தோழியின் அருகில் வந்து சேர்ந்தாள். இருவரும் அருகருகே நின்று அப்பப்பா முடியலடி என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர்.

♥ஜன்னல் வழியே வந்த சிறு காற்று கொஞ்சம் இதம் தர ஏதோ யோசித்தவளாய் தானாக சிரித்தாள் ஜானகி. ஏன்டி நீயா சிரிக்குற எனத் தோழி கேட்க; இல்லடி பாகுபலி படத்தோட ஒரு டயலாக் ஞாபகம் வந்துச்சு. அப்படி என்ன டயலாக் ஜானு.

♥"பெண்களின் மேல் கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல தலையை" அப்படினு நம்ம ஹீரோ ஒரு டயலாக் பேசுவாரே அப்படிப் பார்த்தா இப்படி சிட்டி பஸ்ல போற நம்மள மாதிரி பொண்ணுங்க டெய்லி மூணு நாலு தலைய வெட்டி எடுத்துட்டு தான் கீழ இறங்கி போகணும் இல்ல மீனு எனக் கூறி ஒரு வெற்றுச் சிரிப்பு சிரித்தாள்.

♥உண்மைதான் ஜானு என தோழியும் தலையாட்டி இப்படி இடிக்குறனால இவனுங்களுக்கு என்ன கிடைக்கும் ஒரு வேளை இடிச்சா நாம எப்படி ரியாக்ட் பண்றோம்னு பார்க்க அப்படி பண்ணுவாங்களோ. எப்போ இந்த நரகத்துல இருந்து விடுதலை கிடைக்கும்னு இருக்கு ஜானு என பேசிக்கொண்டே தங்கள் நிறுத்தத்தில் இறங்கி அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர் இருவரும்.

♥இப்போது நடந்தவை எல்லாம் சிறு ஒத்திகையே இனி இரவு வீடு திரும்புகையில் தான் முழுப்படமும் ஓடும். இடிப்பதற்காகவே பஸ்ஸில் ஏறுவது, டிக்கெட் எடுத்து தருகிறேன் என்ற சாக்கில் கையைத் தொடுவது, கைப்பேசியை எடுத்தால் பின்னிருந்து எட்டிப்பார்ப்பது, இறங்கி நடக்கையில் பின்னால் செல்வது என.. ஆனால் இதுவே இன்று இதுபோன்ற ஜானகி மீனாக்களிற்கு எழுதப்படாத விதி.

♥எப்போது வார இறுதி வரும் வீட்டில் ஒய்வு எடுக்கலாம் என நினைக்கும் பெண்களை விட இரண்டு நாள் இந்த தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என நினைக்கும் பெண்களே அதிகம்.

♥கடந்த சில நாட்களாக ஜானுவிற்கு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆள் இது போன்ற தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தான். முறைத்தும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க என்று கோபமாக சொல்லியும் அவன் பெரிதாய் எடுத்துக் கொள்ளவே இல்லை. இந்தப் பேருந்தை விட்டால் நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாது. இரண்டு நிறுத்தம் தள்ளி ஏறும் அந்த ஆள் அவள் எங்கு நின்றாலும் தேடி வந்து அவள் பின்னால் நின்று கொள்வான். சத்தம் போட்டுக் கத்தினால், கூட்டமா இருந்தா அப்படிதான்மா ஆகும் இதுக்கெல்லாம் பார்த்தா பஸ்ல ஏன் வரீங்கனு அந்த கிழம் கேட்கும், தெரியாமத்தான்மா பட்டிருக்கும் என அதை ஆமோதிக்கவும் சிலர் இருக்கத்தான் செய்வர். ஆனால் ஒரு பெண்ணிற்குத் தெரியாத அவன் தெரியாமல் இடித்த சகோதரனா இல்லை சமயம் பார்த்து இடித்த சாக்கடையா என தனக்குத் தானோ யோசித்துக் கொண்டாள். ஆனாலும் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என அவள் மனது துடிக்க சில நாட்களில் ஒரு யோசனை வந்தது.

♥உடனே தன் தோழியை அழைத்து மீனு நான் ஒரு ஐடியா பண்ணிருக்கேன். நாளைக்கும் நாம பஸ்ல போறப்ப அந்த கிழம் இடிக்க வரும் அப்போ நீ கேசுவாலா போன் எடுக்குற மாதிரி அவன ஒரு போட்டோ எடுத்திடு. அவன் இடிக்குறதையும் எடு. என் ஸ்கூல் ப்ரண்ட் ஒருத்தன் சமூக விழிப்புணர்வு சம்பந்தமா ஒரு பேஸ்புக் பக்கம் வச்சுருக்கான். அதுல நாம அந்த போட்டோவ போடலாம். அந்தப் பக்கத்தில நிறைய பாலோவர்ஸ் இருக்காங்க. எப்படியும் ஷேர் ஆகும் எனச் சொல்ல.

♥ஜானு இதெல்லாம் நமக்குத் தேவையா எதுக்கு வீண் பிரச்சினை. நாம வேணும்னா வேற பஸ்ல போலாம் என மீனா உரைக்க. நாம ஏன் மீனு அவனுக்காக வேற பஸ்ல போனும். வேற பஸ்ல போனா அங்கையும் ஒருத்தன் இப்படி இருக்கத்தான் செய்வான். எதாவது பண்ணணும் டி அப்போ தான் இதுமாதிரி ஆளுங்கலாம் ஒழுங்கா இருப்பாங்க.

♥ஒரு வேளை போட்டோ ஷேர் ஆகி ரொம்ப பெரிய ப்ராப்ளம் ஆய்டுச்சுனா என்ன பண்றது ஜானு.

♥ஹ்ம் பேஸ்புக்ல ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்குல போஸ்ட் ஷேர் பண்றாங்க மீனு. இதுவும் ஒரு போஸ்ட்டா பாத்துட்டு கொஞ்சம் திட்டிட்டு கடந்து போய்டுவாங்க.

♥அப்போ எதுக்கு தான் நாம அந்த போஸ்ட்ட போடனும்...

♥காரணமாதான் நாம ரயில்வே ஸ்டேஷன், பெரிய திருவிழாலாம் போறப்போ அங்க அங்க எச்சரிக்கை, செயின் திருடர்கள், குழந்தை திருடர்கள்னு போட்டோ போட்டு வச்சுருப்பாங்க. நாமலும் அதப் பார்த்துட்டு கடந்துபோய்டுவோம். நமக்கு அந்த போட்டோல இருந்த எந்த மூஞ்சியும் ஞாபகம் இருக்காது. அதுல இருக்குற ஒரு திருடனே நம்மட்ட நேர்ல வந்து பேசினாக்கூட நமக்கு அவனத் தெரியாது.

♥அதல்லாம் அந்த திருடன்களை பயமுறுத்தவும் மக்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைலாம் இங்க நடக்கும்னு எச்சரிக்க பண்றதுக்கான ஒரு முயற்சிதான். நம்ம போட்டோ இருக்கேனு திருடனும் கொஞ்சம் பயப்பட்டுதான் ஆவான். அது மாதிரி தான் மீனு இதுவும்..

♥நம்மள மாதிரி இரண்டு மூனு பேர் இந்த மாதிரி பிரச்சனைய சமூகத்துல பதிவு பண்ணி மக்கள் அதப் பத்தி பேசினாலே போதும் இது மாதிரி தப்பு குறைய நிறைய வாய்ப்பு இருக்கு..

♥ஓகே ஜானு நீ என்னவோ சொல்ற பண்ணுவோம்..

♥அடு்த்த நாளும் அதே போல் அந்த ஆள் ஜானுவின் பின் நின்று அவளை இடிக்க அவனையும் அவன் செய்த சேஷ்ட்டைகளையும் போட்டோ எடுத்தாள் மீனா. பின்பு போட்டோவில் ஜானுவின் பாதி உருவத்தை கத்தரித்து விட்டு பஸ் நம்பர், ஓடும் வழித்தடம், நேரம் முதலிவற்றோடு    "#என்று_எங்களுக்கு_விடுதலை

என்ற குறியீட்டோடு பதிவு செய்தனர்.

♥சிறிது நேரத்திலே பலரும் அந்த ஆளை முகநூலில் திட்டித் தீர்த்தனர்.  மீனா! மக்கள் நல்ல ரெஸ்பான்ஸ் குடுக்குறாங்க அதுவும் நிறைய ஆண்கள் தான் செமயா திட்டித்தீக்குறாங்க. சூப்பர் ஜானு அந்த கிழம் இந்தப் போஸ்ட்ட பாத்திருக்குமா.

♥தெரியலயே, நாளைக்கு சனி, ஞாயிறு லீவு. திங்கள் பார்க்கலாம். அந்த ஆளும் தினமும் நாம போற பஸ்ல தான வரான். திங்கள் அவன் வரலேனா நாம கொஞ்சம் ஜெயிச்சுட்டோம்னு அர்த்தம். இருவரும் புன்னகைத்து விடைபெற இருநாட்களில் அந்தப் படங்கள் பெருமளவு பகிரப்பட்டன.

♥சில பெண்களும் தாங்கள் அனுபவித்த இது போன்ற சம்பவங்களையும் அந்தப் பதிவின் கீழ் குறிப்பிட்டனர். திங்கள் காலை பஸ்ஸில் ஏறிவிட்டு அந்த ஆள் ஏறும் நிறுத்தத்தை எதிர் நோக்கி காத்திருந்தனர் இருவரும்.விழியை விரித்து பேருந்து வாயிலில் பதித்திருந்தனர். ஆனால் அந்த ஆள் அங்கு இல்லை. பேருந்து அந்த நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டதும் இருவரும் ஒருவருக்கொருவர் ரகசியமாய் கை கொடுத்து புன்னகைத்துக் கொண்டனர்.

♥மீனு ஆனால் நாம இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணணும். இன்னைக்கு அந்த கிழம் அலுவலகத்துக்கு விடுப்பா கூட இருக்கலாம். ஆமா ஜானு என இருவரும் வாரம் முழுவதும் வழி மேல் விழி வைக்க அந்த ஆள் பத்து நாள் ஆகியும் வரவேயில்லை.

♥லட்சம் களைச்செடில ஒன்ன பிடுங்கிட்டோம் மீனு. ஆனா இதுக்கு முடிவே இல்லைல எத்தனையோ பொண்ணுங்க இந்த நொடியில கூட இது போல கொடுமைய அனுபவிச்சுட்டு தான இருப்பாங்க எனப் பேசிக்கொண்டிருக்கையில் அவளது கைப்பேசி அழைத்தது.

♥என் ஸ்கூல் ப்ரண்ட் தான் கூப்பிடுறான்  என வேகமாய் எடுத்தவள் சொல்லு பிரபு எனக் கூற,

♥ஜானு நீ ஆரம்பிச்சு வச்ச பிரச்சனை பயங்கரமா போய்ட்டு இருக்கு எனக் கூற அய்யோ என்னாச்சு என அவள் பதற,

♥பயப்படாத நல்ல முறைல தான் போகுது இன்னோரு பொண்ணும் வீடியோ எடுத்துப் போட்டுருக்காங்க ஒரு பக்கத்தில. எனக்குத் தெரிஞ்சே மூனு பக்கம் இது சம்பந்தமா உருவாகியிருக்கு. என் முகநூல் பக்கத்துலயே இரண்டு பொண்ணுங்க அவுங்களுக்கு நடந்தத ஷேர் பண்ண சொல்லிருக்காங்க. எனக்கென்னமோ இனி கொஞ்சம் இது மாதிரி குற்றம் குறையும்னு தோனுது. எப்படியோ உன்னோட தைரியமான முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

♥ஜானுவிற்கு மகிழ்வாக இருந்தது. சில நாட்களில் இன்னும் சில படங்களும் வீடியோக்களும் பகிரப்பட்டு பேசப்பட்டது.

♥ஒரு திங்கள் அதே பிதுங்கி வழிந்த பஸ்சில் ஏறி ஒரு காலில் நின்று கொண்டிருந்தாள் ஜானு. நடத்துனரிடம் பக்கத்தில் நின்றிருத்த ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, என்ன சார் கூட்டம் குறைய மாட்டேங்குது. பொம்பளையாள்லாம் சிரமப்படுறாக இன்னும் இரண்டு பஸ் விட்டா நல்லா இருக்கும் எனக் கூற,

♥நானா சார் பஸ் வச்சுருக்கேன் கவர்மென்ட்ல தானே நடவடிக்கை எடுக்கனும், ஆனால் பராவாயில்லை சார் பஸ்ல இடிக்குறவனுங்க போட்டோவ பூரா நெட்ல போட்டுவிட்டதுனால இப்போ கொஞ்சம் பிரச்சனை இல்லாம இருக்கு என்று சொல்லிக் கொண்டே அடுத்த நிறுத்தத்திற்கு விசில் அடித்தவர் டிக்கெட் கேட்டு வாங்குங்க, படியில நிக்குற ஆம்பளைங்க கொஞ்சம் இறங்கி வழிவிடுங்க என்றார்.

♥உடனே அருகில் இருந்தவர் ஆமாம்பா அதோட பொம்பளப் பிள்ளைக மேல கைய கிய வைக்காம நில்லுங்க. இல்லேனா உங்க வண்டவாளம் தண்டவளத்துல ஏறிடும் எனச் சொல்ல ஆமாம் ஆமாம் என சிலக் குரல்களும் கேட்டன.

♥வீரமாய் வாள் எடுத்து தலையை வெட்டிய பாகுபலி போல் சில களைகளை வெட்டி எறிந்த பெருமிதத்தில்  ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணைச் சிமிட்டிக் கொண்டனர் தோழிகள்.

Post a Comment

0 Comments