♥இன்னும் இருக்கின்றனர்!
♥கதிரவன் தன் ஒளிக்கிரணங்களை பூமி மீது செலுத்திய காலை வேளை.
அவசரமாக காவல் துறை பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் பெருமாள் சாமி.
நேற்று மாலை, பெருமாள்சாமிக்கு வாழ்க்கையில் மிக உன்னதமான நேரமாக இருந்தது. அவரது மகள் ரத்னாவிற்கு நேற்று தான் பெண் பார்க்கும் படலம் நடந்து, மாப்பிள்ளை முடிவாகி இருந்தது.
மாப்பிள்ளை, வருமானவரித்துறையில் உதவியாளராக இருந்தார். பெருமாள்சாமி போலீஸ்காரராக இருந்தாலும், அவரது வீட்டில் பெண் எடுக்க சம்மதித்ததற்கு காரணம், ரத்னாவின் குடும்பப்பாங்கான அழகு தான். அடுத்த புதன்கிழமை நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
♥தன் ஒரே மகள் ரத்னாவிற்கு திருமணம் நிச்சயமானது, பெருமாள்சாமிக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. ஆனாலும், வரப்போகும் நிச்சயதார்த்த செலவுகளை நினைக்கும் போது, அவருக்கு அடி வயிறு, "சுர்ர்' என்று வலித்தது.
ஊர், உறவுகளை அழைத்து நிச்சயதார்த்தம் செய்ய, எப்படியும் ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும். அதை ஒரு வாரத்திற்குள் சேகரிக்க வேண்டுமே என்று யோசித்தார் பெருமாள் சாமி.
♥மனைவி மங்களத்திடம் கேட்கலாமா?
"உன் நகையைக் கொடு. அடகு வச்சு பணம் வாங்கி, புள்ளையோட நிச்சயதார்த்தத்தை நல்லபடியா நடத்திடலாம். அப்புறம், ஆபீஸ்ல லோன் போட்டு வர்ற பணத்தில நகையை மீட்டுக்கலாம்...' என்று சொல்லலாம்.
ஆனால்...
"ஏங்க... நீங்களும் போலீஸ் வேலை தான பார்க்கிறீங்க? ஊர், உலகத்தில ஒவ்வொரு போலீஸ்காரரையும் பாருங்க. "இங்க இடம் வாங்கிப் போட்டேன்; அங்க வீட்டை கட்டினேன்'னு சந்தோஷமா இருக்காங்க. நீங்க மட்டும் ஏங்க இப்படி? எதையும் வாங்கத் தெரியாது; சேர்க்கவும் தெரியாது.
♥வாய்க்கும், கைக்கும் வர்ற சம்பளம் சரியா இருந்ததுன்னா நமக்குன்னு என்னங்க வாழ்க்கையில அஸ்திவாரம் இருக்கு?' என்று, மூன்றாம் வகுப்பு படிக்கிற மாணவனுக்கு, ஆசிரியை போதிப்பது போல போதிப்பாள்.
"கொஞ்சம் பொறுடி. இந்த வேலையில இருந்தா சுத்தமா இருக்கணும்ன்ற குறிக்கோளோட இருக்கேன். வேலையில இருந்து ஓய்வு பெற்ற பின், ஏதாச்சும் தொழில் ஆரம்பிக்கலாம். அதில உனக்கு நெறைய சம்பாதிச்சுத் தாரேன்...' என்று சமாதானம் கூறுவார் பெருமாள்சாமி.
ஆனால், இந்த முறை ஏனோ பெருமாள்சாமியின் மனம், மங்களத்திடம் நகையைக் கேட்க ஒப்பவில்லை.
♥"சரி... யார்கிட்டயாவது கடன் கேட்டு பார்ப்போம்' என்று முடிவு செய்து, காவல் நிலையத்திற்கு வந்தார்.
காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் யூசுப் மற்றும் ஏட்டு தங்கராசு இருந்தனர். யூசுப்பிடம் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு வந்தவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சிப் பூரிப்பைப் பார்த்த தங்கராசு, ""என்ன பெருமாள்... இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கே?'' என்றார்.
""ஆமா தங்கம். நேத்து என் பொண்ணை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து பார்த்துட்டு, நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிச்சிட்டுப் போயிருக்காங்க.''
♥""அப்படியா... ரொம்ப சந்தோஷம். இன்றைய விலைவாசில சிம்பிளா நடத்தினாலும் ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுமே!''
""அதை நெனைச்சா தான் மலைப்பா இருக்கு. என்ன செய்வதுன்னு தெரியல. அந்த பெருமாள் தான் கண் திறக்கணும்.''
தங்கராசுக்கு தெரியும். அந்த காவல் நிலையத்திலேயே, யாரிடமும் கை நீட்டி லஞ்ச பணம் வாங்காதவர் பெருமாள்சாமி என்று. யாராவது அவருக்கு லஞ்சம் கொடுக்க வந்தாலும், "ஏம்பா... என் வேலையைத்தான நான் செஞ்சேன். அதுக்குத்தான் அரசாங்கத்தில எனக்கு சம்பளம் கொடுக்கிறாங்க. நீ எதுக்கு சட்ட விரோதமா கொடுக்கற. வேண்டாம்பா...' என்று சொல்லி விடுவார்.
♥பணம் கொடுக்க வந்தவர், பெருமாள்சாமியை உலகின் எட்டாவது அதிசயமாய் பார்த்து விட்டு செல்வார்.
வருமானம் குறைவுதான் என்றாலும், அந்த வருமானத்திற்குள் வாழ்க்கையை நடத்த கற்றுக் கொண்டிருந்தார். மங்களத்திற்கும், அவரை போலவே வாழ கற்றுக் கொடுத்தார். பற்றாக்குறை, பெருமாள்சாமி மீது வெறுப்பை ஏற்படுத்தினாலும், அவர், அவள் மீது காட்டிய கண்ணியமும், கனிவும், பரிவும், மங்களத்தை வாய் மூடி இருக்க செய்தது.
பெருமாள்சாமி தன் இடத்தில் அமர்ந்து, தன் முன் இருந்த கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதிரில் வந்து அமர்ந்தார் தங்கராசு...
♥""பெருமாள் சார். நேத்து நம்ம ஸ்டேஷனுக்கு ஆல்பர்ட் வந்திருந்தான்.''
""அப்படியா?''
""எஸ்.ஐ.,க்கும், இன்ஸ்பெக்டருக்கும் பணம் கை மாறிடிச்சு. என்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கொடுத்து வச்சுருக்கான். எஸ்.ஐ., உங்களை எப்.ஐ.ஆர்., எழுதச் சொல்லி இருக்கார். நீங்க எப்.ஐ.ஆர்., எழுதிட்டா, என்கிட்ட இருக்கிறதில பாதியை உங்ககிட்ட கொடுத்துடறேன். உங்க மகள் நிச்சயதார்த்த செலவுக்கு அது உபயோகப்படும்... என்ன சொல்றீங்க?'' என்றார்.
♥தங்கராசு சொல்வதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார் பெருமாள் சாமி.
ஆல்பர்ட் ஒரு தொழில் வகை கொலையாளி. கூலிக்குக் கொலை செய்பவன். அவன் வருடத்திற்கு ஒருமுறை ஒரு இளம்பெண்ணை அழைத்து வந்து அவனுடன் வைத்திருப்பான். அவளிடம் சலிப்பு வந்ததும், அவளைக் கொன்று, எங்கேயாவது புதைத்து விட்டு, அந்த இறந்துபோன இளம் பெண்ணிற்கு உறவுக்காரன் போல, அவள் காணாமல் போய் விட்டதாக, யாரையாவது விட்டு புகார் கொடுக்க வைப்பான். அதை பதிவு செய்வதற்கு ஏகப்பட்ட பணம் செலவழிப்பான். முதல் தகவல் அறிக்கை தயாரான உடன், அதை வாங்கி, பாக்கெட்டில் போட்டு, அடுத்த பெண்ணைப் பார்க்க ஆரம்பித்து விடுவான்.
♥""இதில நமக்கு என்ன பிரச்னைப்பா? "பெண்ணைக் காணோம்'ன்னு பெட்டிசன் கொடுக்கிறாங்க. தேடிப் பார்ப்போம். ஆளு இருந்தா பிடிச்சு ஒப்படைப்போம். பிணமா கிடைச்சா பிணத்தை ஒப்படைப்போம். எதுவுமே சிக்கலியா? "பெண் காணாமல் போன இந்த வழக்கில், நேர்மையாகவும், துரித கதியிலும் இயங்கி, மும்முரமாக தேடிப்பார்த்தும், காணாமல் போன இந்த பெண் குறித்து துப்பு எதுவும் கிடைக்காததால், இந்த வழக்கின் மீது, மேல் நடவடிக்கை முடித்துக் கொள்ளப்பட்டது. தகவலுக்கு மேலிடத்திற்கு சமர்ப்பிக்கிறது...' என்று மாத அறிக்கையில் எழுதி, மேலிட உத்தரவு வாங்கிடுவோம்.''
♥ஆல்பர்ட்டுக்கு வக்காலத்து வாங்கி, மிகவும் சாதாரணமாக பேசினார் தங்கராஜ்.
ஆல்பர்ட்டின் தகிடுத்தத்தங்கள் அனைத்தும் பெருமாள்சாமிக்கு தெரிந்தே இருந்தது. சட்டத்தின் பின்னணியில் அவன் ஒரு கொலைகாரன் என்கிற விஷயம் தெரியும். மேலதிகாரிகளிடம் சொல்லி, அவனை சட்டத்தின் பிடியில் மாட்டி விட வேண்டிய, "திராணி' பெருமாள்சாமியிடம் இல்லாததும், "ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்று தெரிந்து வைத்திருந்தும், குறைந்தபட்சம் ஆல்பர்ட் கொட்டும் நாறப் பணத்தையாவது தான் தொடாமல் இருந்தால், அதுவே தனக்குப் போதுமானது என்று வைராக்கியம் பூண்டிருந்தார்.
♥பெருமாள்சாமியின் மவுனத்தை தங்கராசு விரும்பவில்லை.
""உங்களுக்கு நாளைக்கு வரைக்கும் டைம் தர்றேன். நீங்க இந்த பணத்தை வாங்கிக்கலைன்னா நாளைக்கு மறுநாள் அவ்வளவு பணத்தையும் நானே வச்சுக்கிட்டு, எப்.ஐ.ஆர்., எழுதிடுவேன். அப்புறம் வருத்தப்படாதீங்க.''
போய் விட்டார் தங்கராசு.
பெருமாள்சாமிக்கு வேலையே ஓடவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. "ஆல்பர்ட் பணத்தை கையால் தொடுவது கூட பாவமாச்சே...' என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கி இருந்தது. மன உளைச்சலுடன் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு, சென்றார். சாப்பிட்டபடியே மங்களத்திடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தார்...
♥""மங்களம்... நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செஞ்சிட் டோம். ஆனா, செலவுக்கு என்னடி செய்யப் போறோம்?''
""என்ன செய்யப் போறோமா? யார்கிட்டயாச்சும் கடன, கிடன கேட்டு வாங்குங்க!''
""யார் கிட்டயாச்சும் கேட்டு வாங்கறதா? உன்னை விட்டா எனக்கு யார்டி இருக்கா?''
பெருமாள்சாமி சொன்னதை புரிந்து கொண்டாள் மங்களம். ஆறு பவுன் கழுத்துச் செயினை அடகுக் கடையில் வைக்க கேட்கிறார். அவளுக்கு, எப்போதும் இல்லாத அளவுக்கு கோபம் வந்தது...
""என்னய்யா மனுஷன் நீ? உம்மை கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தை கண்டேன்.
♥ஊர் மெச்ச இந்த செயினு ஒன்னைத் தான் கழுத்தில போட்டுட்டு இருக்கேன். அதையும், அந்த செலவு, இந்த செலவுன்னு அப்பப்ப வச்சு, என்னை மூளியாக்கறீங்க... கடைக்காரனும் ஒவ்வொரு முறை அடமானம் வைக்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை களவாடி கொண்டிருக் கிறான். என் பெண்ணோட கல்யாண நிச்சயத்துக்கு நான் செயின் இல்லாம மூளியா நிக்கறதாவது!'' என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு வந்து தரையில் விழுந்தது.
♥மனம் கலங்கிய பெருமாள்சாமி, மங்களத்திடம் சொல்லிக் கொள்ளாமலேயே வீட்டை விட்டுக் கிளம்பி, காவல் நிலையத்திற்கு வந்தார்.
"எவனோ, எப்படியோ போகட்டும். பொருள் இல்லாமை, என் மனைவியின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விட்டது. என் வைராக்கியம் என் குடும்பத்தை பாதிக்கிறது...' என்று நினைத்தவர், நேரா தங்கராசுவிடம் சென்றார்.
ஆல்பர்ட்டிற்கு முதல் தகவல் அறிக்கை எழுதுவதற்காக வைத்திருந்த காகிதக் குறிப்புகளை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
♥பெருமாள்சாமியிடம் அந்த காகிதத்தை கொடுத்தபோது, காகிதத்திற்கு அடியில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கான கட்டு இருந்தது. அந்த பணத்தை கையில் வாங்கிய பெருமாள்சாமிக்கு உடல் முழுவதும் சுடுவது போல இருந்தது.
தன் இருக்கைக்கு வந்தவர், முதல் வேலையாக பணத்தை பத்திரப்படுத்தி, முதல் தகவல் அறிக்கை எழுத ஆரம்பித்தபோது, அவரையும் அறியாமல், அவரது கைகள் நடுங்கின.
♥எழுதி முடித்த கையோடு தங்கராசுவிடம் கொடுத்த பெருமாள் சாமியை வானளாவ புகழ்ந்தார். உதவி ஆய்வாளரோ, "இன்னொரு மாடும் நம்ம கூட்டத்தில சேர்ந்திடுச்சே...' என்று சொல்லி சிரித்தார்.
பெருமாள்சாமியின் மனம் மட்டும் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தது.
அன்று இரவு மங்களத்திடம் அந்த பணத்தை கொடுத்தவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவளும் அந்த பணம் அவருக்கு எப்படி வந்தது என்று கேட்டுக் கொள்ளவில்லை. தன் கழுத்து நகை தப்பியது என்று பெருமூச்சு விட்டாள்.
இரவு முழுவதும் உறக்கம் வராமல், காலையில், சீக்கிரமாகவே விழித்துக் கொண்ட பெருமாள்சாமி, தன் காலைக் கடன்களை அமைதியாக முடித்து, வேலைக்குக் கிளம்பினார்.
♥அவரது வினோத செய்கைகளை கவனித்த மகள் ரத்னா, ""அம்மா... அப்பா ஏம்மா இன்னிக்கு, "மூடு - அவுட்'ல இருக்கார்?''
""உன் நிச்சயதார்த்தத்துக்கு செயினைக் கொடு அடகு வைக்கணும்'ன்னு நேத்துக் கேட்டார், நான் கொடுக்கலை. அதில கோபம் போல இருக்கு!''
""ஏம்மா... என்கிட்ட கேட்டா நான் கொடுத்து இருப்பேன்ல?''
""சும்மா இருடி பைத்தியக்காரி. நீ போற இடத்தில வாழ வேண்டிய பொண்ணு. உன் நகையை அடகு வைச்சா, அப்புறம் திருப்பறது கஷ்டம்,'' என்றதும், தன் பாதுகாப்புக் கருதி, மவுனமாகிப் போனாள் ரத்னா.
♥இரண்டு நாட்களுக்கு பின், பெருமாள்சாமி ஒரு, "அடிதடி' வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது, மங்களத்திடமிருந்து போன் வந்தது...
""ஏங்க... நம்ம தெருவுல செப்டிங் டேங்க் குழாய் நிரம்பி, நம்ம வீட்டை சுத்தியும், தெருவைச் சுத்தியும் போகுதுங்க. ஒரே நாத்தமுங்க. வீட்ல இருக்கவே முடியல ....'' என்றாள்.
அந்த பகுதி நகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்த பின், தன் வேலையில் மூழ்கினார் பெருமாள்சாமி.
♥வேலை முடிந்து, மாலை வீட்டிற்குப் போன போது, கோளாறை சரி செய்திருந்தனர். ஆனாலும், அன்று மழை கொட்ட ஆரம்பித்திருந்ததால் மழைத் தண்ணீர் செப்டிங் டேங்க்கின் மீதிக் கழிவுகளுடன் சேர்ந்து, ஒரு நாற்றக் குட்டையை உருவாக்கி, கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.
மறுநாளே ரத்னாவிற்கு காய்ச்சல் கண்டது. காய்ச்சலின் தீவீரம் அதிகமாக இருந்ததால், அவளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் பெருமாள்சாமி.
♥ஆல்பர்ட்டின் பணம் ஐம்பதாயிரம் ரூபாய் மருத்துவமனையில் முன் பணமாக செலுத்தவும், பல பரிசோதனைகளை செய்யவுமே பயன்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின்னரும், குணமாகவில்லை. டெங்கு காய்ச்சல் என்ற குண்டை தூக்கி போட்டார் மருத்துவர்.
இன்னும் பத்தாயிரம் வேண்டும் என்றார் மருத்துவர். இம்முறை பெருமாள்சாமி கேட்காமலேயே தன் செயினைக் கழற்றி, அவரது கைகளில் கொடுத்தாள் மங்களம்.
கொடுக்கும்போது, ""இரண்டு நாட்களுக்கு முன் கொண்டு வந்த நாற பணத்தை, யார்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தீங்க?''
""நீ தான் செயின் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டல்ல. என் வைராக்கியத்தை தங்கராசுகிட்ட அடமானம் வச்சு, அவர் கொடுத்த லஞ்சப் பணத்தை தான் வாங்கிட்டு வந்து உன்கிட்ட கொடுத்தேன்,'' என்றார்.
♥""அய்யா சாமி... என்ன மன்னிச்சுடுங்க. பொண்ணு கல்யாணத்துக்கு என் கழுத்திலயும் செயின் கிடக்கணுமேன்னுதான் உங்ககிட்ட அந்த மாதிரி நடந்துக்கிட்டேன். இனிமே, எப்பவுமே உங்க வைராக்கியத்தை அடகு வைக்கவும் வேணாம்; பாவப் பணம் நம்ம வீட்டுக்கு வரவும் வேணாம். இதை வச்சு பணம் வாங்கிட்டு வந்து, கவுன்டரில் கட்டிட்டு, ஐம்பதாயிரத்த எடுத்துட்டு போய் அந்த தங்கராசுகிட்டயே, "எனக்கு இந்த பணம் வேணாம், நீங்களே வச்சுக்கங்க...'ன்னு கொடுத்துட்டு வாங்க,'' என்றாள். அனிச்சையாக அவளிடமிருந்து, நகையை அவர் பெற்று, கிளம்பியபோது, "வாழ்க்கையில் எதை அடமானம் வைக்க வேண்டும், எதை அடமானம் வைக்கக் கூடாது?' என்பதை மங்களம் நன்றாக புரிந்து கொண்டதில், மகிழ்ந்தார் பெருமாள்சாமி.
***
♥கஜா
இயற்பெயர் : எஸ்.பாலசுப்ரமணியன்
கல்வி : பி.எஸ்சி.,
வயது : 51
பணி : அரசு துறையில், உதவியாளராக இருக்கிறார்.
புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வமுள்ளவர். நல்ல சிறுகதைகளை படைக்க வேண்டும் என்பது இவரது லட்சியம்
0 Comments
Thank you