காணும் பொங்கல்
காணும் பொங்கலின் சிறப்புகள்
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். நெடு நாளாக கண்டிராத நமது உற்றார் உறவினரை காணும் நாளே காணும் பொங்கல். காணும் பொங்கலைக்கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெற்று தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.
மேலும் பெண்கள், பொங்கல் பானை வைக்கும்போது அதில் கட்டிய புது மஞ்சள்கொத்தினை எடுத்து வயதில் முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்ற பிறகு, அந்த மஞ்சள்கொத்தினை சுமங்கலியிடம் இருந்து வாங்கி கல்லில் இழைத்து உடல் மற்றும் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
இந்நாளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்குமரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பொதுவாக காணும் பொங்கல் என்பது ஆறு, கடல், நீர்வீழ்ச்சி என நீர் நிலைகளை ஒட்டியே கொண்டாடப்படுகிறது.
பேருந்து, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் என நவீன வசதிகள் இல்லாத காலத்தில், மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதே இதுபோன்ற பண்டிகை நாட்களில்தான் எனலாம்.
மாமன், மைத்துனர், அத்தை, பாட்டி, சித்தி, பெரியப்பா, சித்தப்பா, ஒன்று விட்ட அத்தை, பங்காளி என குடும்பத்தின் அல்லது அந்த ஊரின் பெரியவர்கள் வரை சிறியவர்கள் வரை, அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் சார்ந்த சந்திப்பாக காணும் பொங்கல் அமைந்துள்ளது. அன்றைய வருடம் திருமணம் முடிந்த புதுமணத் தம்பதிகளுக்கு காணும் பொங்கல் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும்.
கடந்த வருடம் காணும் பொங்கல் தினத்தன்று ஒருவராக இருந்த நாம், இப்போது இருவராகி விட்டோம் என்றெண்ணி, அடுத்த காணும் பொங்கலுக்கு குழந்தையுடன் வர வேண்டும். அதற்கு இந்த நீர் நிலையே சாட்சி என்று காவிரி போன்ற ஆறு அல்லது நீர் நிலைகளில் விளக்குகளை மிதக்க விடுவதும் உண்டு.
0 Comments
Thank you