பொங்கல் செய்வது எப்படி?
பொதுவான முறை :
பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைத்து ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி பொங்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு எடுத்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல தீயின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள்.
சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கிலோ
பாசிப்பருப்பு - 100கிராம்
பால் - அரை லிட்டர்
முந்திரி - 15
உலர் திராட்சை - 15
வெல்லம் - 800 கிராம் (பொடித்தது)
நெய் - 200கிராம்
பச்சை கற்பூரம் - 1 சிறிய கட்டி (பொடித்தது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
சர்க்கரை பொங்கல் செய்வதற்கு முதலில் பச்சரிசியை நீரில் ஊற வைத்து நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு மண்பானையை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு நன்கு கிளறவும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு, அரிசி மற்றும் பாசிபருப்பு நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து, பின்பு பொடித்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளறவும்.
வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு கிளறி இறக்கினால் கடவுளுக்கு படைக்கும் சர்க்கரைப் பொங்கல் தயார்!!!
வெண் பொங்கல்
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 4கப்
பாசிப் பருப்பு - 2 கப்
மிளகு - 15
சீரகம் - 2 டீ ஸ்பூன்
முந்திரி பருப்பு - 15
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
நெய் -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெண்பொங்கல் செய்வதற்கு முதலில் பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடானதும், அதில் முந்திரி பருப்பு, இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு மண் பானையை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் பச்சரிசி, வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
இறுதியில் சிறிது நெய் விட்டு கிளறி இறக்கினால் கடவுளுக்கு படைக்க வெண் பொங்கல் தயார்.
0 Comments
Thank you