திருக்கார்த்திகை தீபத் திருவிழா
⭐ நமது நாட்டில் கொண்டாடப்படும் தெய்வத்திரு நாட்களுள் திருக்கார்த்திகையும் ஒன்று.
⭐ பௌர்ணமி தினத்தன்று, சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும்போது இவ்விழா கொண்டாடப்படுகின்றது. ஆதிகாலத்திலிருந்தே மக்கள் அக்கினியைத் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
⭐ பஞ்ச பூதங்களுள் ஒன்றான அக்கினியை மகிழ்விப்பதே இப்பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
⭐ நமது புராணங்களும் திருக்கார்த்திகை விழாவுக்கான காரணக்கதைகளை அழகாக வர்ணிக்கின்றன.
⭐ திருக்கார்த்திகைக்குரிய தெய்வங்களான சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை வழிபடும்படி கூறுகின்றன.
⭐ தென் இந்தியாவில், திருவண்ணாமலை என்ற திருத்தலத்தில் உள்ள உயர்ந்த மலையின் உச்சியில் மிகப்பெரிய நெய்தீபம் ஏற்றி இறைவனை வழிபடுகின்றார்கள். இது அற்புதமான திருக்காட்சியாகும்.
திருக்கார்த்திகை வழிபாடு:
⭐ கார்த்திகை மாதம், பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கார்த்திகை விழா ஆரம்பமாகி மூன்று நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
⭐ திருக்கார்த்திகைத் திருநாளில் அதிகாலை நேரத்தில் வீட்டை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும்.
⭐ ஜோதியாகத் தோன்றிய சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும், கார்த்திகேயனையும் வணங்க வேண்டும்.
⭐ அன்றைய நாளில், தீபங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தீபமேற்ற உகந்த நேரம் மாலை வேளை என்பதால், மாலையில் அந்தி சாயும் நேரத்தில் வீடுகளில் தீபமேற்றி வழிபட வேண்டும்.
⭐ திருவிளக்கிலிருந்து அகல் விளக்குகளை ஏற்றி, அனைத்து அறைகளிலும், வாசலிலும் வைத்து, நம் இல்லத்தில் நிறைந்திருக்கும் தீப ஒளியையே இறைவனின் ரூபமாகக் கருதி வழிபட வேண்டும். குறைந்தபட்சம் இருபத்தியொரு தீபங்களாவது ஏற்றி வழிபட வேண்டும்.
⭐ பின்னர், தலைவாழை இலை விரித்து, அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, கார்த்திகைச் சிற்றுண்டிகளாகிய கொழுக்கட்டை, பொரி, பிரசாதங்களோடு, பழ வகைகளும் படைத்து, மாவிளக்கு ஏற்றிவைத்து, முதலில் பிள்ளையாரை வணங்கிப் பின்னர் இறைவனைப் பூஜிக்க வேண்டும்.
0 Comments
Thank you