♥இது உங்கள் இடம்
♥ஆட்டோ ஓட்டும், மாணவர்!
என் நண்பருக்கு, அடிக்கடி முதுகு வலி வரும். மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில், மருத்துவமனை செல்ல, ஆட்டோ ஏறியுள்ளார். ஆட்டோ டிரைவரின் மரியாதையான அணுகுமுறையும், மென்மையான நடவடிக்கையும், நண்பரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
♥மருத்துவமனையை அடைந்ததும், ஆட்டோ கட்டணத்தை கொடுத்துள்ளார். அப்போது, தன் இருக்கைக்கு அருகில் இருக்கும், ஒரு பெட்டியை காட்டி, 'இந்த சவாரிக்கு, எவ்வளவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த தொகையை மட்டும் போட்டால் போதும்...' என்றிருக்கிறார், ஆட்டோ டிரைவர்.
♥அதுமட்டுமல்லாமல், ஆட்டோ டிரைவரை பார்த்த, மருத்துவமனை காவலாளி, அன்பாக விசாரித்துள்ளார்.
காவலாளியிடம், அந்த ஆட்டோ ஓட்டுனரை பற்றி விசாரித்திருக்கிறார், நண்பர்.
♥'ஆட்டோ ஓட்டுனர், இந்த மருத்துவ கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்; ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவருக்கு, மருத்துவ படிப்புக்கு உதவும் பொருட்டு, ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார், மருத்துவ கல்லுாரி கண்காணிப்பாளர்...
♥'மேலும், தன் படிப்பு செலவுக்கு போக, மீதமுள்ள பணத்தை, இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுத்து விடுவார்...' என்றார், காவலாளி.
♥அந்த வருங்கால மருத்துவரை வாழ்த்தி, பெட்டியில் தாராளமாகவே பணத்தை போட்டு வந்துள்ளார், நண்பர்.
முரட்டுதனமான பேச்சும், அடாவடியாக நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுனர்களை பார்த்து பழகிப் போன எனக்கு, நண்பர் கூறியதை கேட்டதும், வித்தியாசமாக இருந்தது.
மருத்துவம் பயிலும், அந்த ஆட்டோ ஓட்டுனரை, மனதார பாராட்டினேன்.
♥மாலா உத்ஸ், நெய்வேலி
0 Comments
Thank you