பெண் ஏன் தலைக்குனிந்து நடக்க வேண்டும்?
நல்ல மனைவி என்பவள் யார்?
‘ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்’ என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு. ஆனால், அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மதத்தில் தான் அதிகம். இந்து புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாகக் காட்சியளிப்பாள். குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண் தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்து மதம்.
கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக் கொள்வது. அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளர வேண்டுமென்பதற்கு, இந்து மதம் சான்று காட்டி நீதி சொல்கிறது. ‘பிற புருஷனை அவள் மனத்தால் நினைத்தாலும் கற்பிழந்து விடுகிறாள்’ என்று இந்து மதம் அச்சுறுத்துகிறது. பெண் ‘தலைக்குனிந்து நடக்க வேண்டுமென்று, இந்துக்கள் விரும்புவது’ அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்குத் தான்.
அழகான ஆடவன் முகத்தை அவள் பார்த்து ஒரு கணம் அதிர்ச்சி வந்து, பிறகு அவள் தன்னிலைக்கு மீண்டால் கூடக் ‘களங்கம்’ என்று இந்துக்கள் கருதுகிறார்கள். ‘காலைப் பார்த்து நட’ என்று அவர்கள் போதிப்பது அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு மட்டுமல்ல; பூமியிலும், வாழ்க்கையிலும் வழுக்கி விழாமல் இருப்பதற்கும் கூட! பெண்ணுக்கு அதை அதிகம் வலியுறுத்தினாலும், ‘ஆணுக்கும் அது வேண்டும்’ என்கிறது இந்து மதம். திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள். காலிலே ஆடவனுக்கு வெள்ளியால் ‘மெட்டி’ போடுகிறார்கள். இவை ஏன்?
நிமிர்ந்து நடந்து வரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்து வரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும் ‘அவள் அந்நியன் மனைவி’ என்றுத் தெரிந்து அவன் ஒதுங்கி விட வேண்டும். தலைக்குனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால் மெட்டி தெரிய வேண்டும் ‘அவன் திருமணமானவன்’ எனத் தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும். ஒரு பெண்ணும், காளையும் சந்தித்து ஒரு வரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம். துயரத்தால் விம்மலாம். இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ ஆகலாம்.
ஆனால், திருமணமான ஒரு பெண்ணுக்கு பரபுருஷன் மீது ஆசை என்பது கிஞ்சித்தும் வரக் கூடாது. தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள் தாண்ட முடியாது. தமிழகத்திலே ஒரு மன்னனுக்குத் ‘தாலிக்கு வேலி’ என்ற பெயரே உண்டு. திருமணத்தின் போது ‘அக்கினி’ வளர்க்கிறார்களே, ஏன்? அவர்களது எதிர்கால ஒழுக்கத்தில் ‘அக்கினி’ சாட்சியாகிறான். அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினி அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான். அவர்களைத் தண்டிக்கிறான்.
அதனால் தான், கற்பு நிறைந்த பெண்ணைக் ‘கற்புக்கனல்’ என்கின்றார்கள். அம்மி மிதிக்கிறார்களே, ஏன்? எல்லாக் குடும்பங்களுக்கும் இன்றியமையாதது அம்மி. அந்த அம்மியின் மீது காலை வைப்பது, ‘என் கால் உன் மீது தான் இருக்கும்; உன்னைத் தாண்டிப் போகாது’’ என்று சத்தியம் செய்வதே.
‘‘படி தாண்டாதப் பத்தினி’’ என்பது வழக்கு. ‘‘படியைத் தாண்டமாட்டேன்’’ என்பதே அம்மியின் மீது சொல்லப்படுவது. அருந்ததியைப் பார்ப்பது ஏன்? ‘‘அருந்ததியைப் போல் நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன்’’ என்று ஆணையிடுவதே. ‘‘பால், பழம்’’ சாப்பிடுவது ஏன்? அது ‘‘பாலோடு சேர்ந்த பழம் போலச் சுவை பெறுவோம்’’ என்றுக் கூறுவதே.
பூ மணம் இடுவது ஏன்? ‘‘பூ மணம் போல புகழ் மணம் பரப்புவோம்’’ என்றே! மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடுவதேன்? ஒரு முடிச்சு கணவனுக்கு அடங்கியவளென்றும், மறு முடிச்சு தாய்-தந்தையர்க்கு கட்டுப்பட்டவளென்றும், மூன்றாவது முடிச்சு தெய்வத்திற்கு பயந்தவளென்றும் உறுதிக் கொள்ள வைப்பதே. ஆம். பெண்ணிற்குத் ‘தற்காப்பு’ வேண்டும். தாய்-தந்தை ‘காப்பு’ வேண்டும். தெய்வத்தின் ‘காப்பு’ வேண்டும்.
இந்தக் காப்புகளுக்காகவே கையில் ‘காப்பு’ அணியப்படுகிறது. ‘அவளைக் காப்பேன்’ என்ற உத்திரவாதத்திற்காகவே கணவன் கையில் ‘காப்பு’ கட்டப்படுகிறது...
பெண்கள் தலைக்குனிந்து ஒழுக்க நெறிகளுடன் வாழ்ந்தால் மட்டும் தான் இந்தச் சமுதாயத்தில் பலர் தலைநிமிர்ந்து நடக்க முடியும்...
இது தான் உண்மை √
0 Comments
Thank you