#சமையல்_குறிப்புகள்
♥மிளகாய் பொடியுடன் தயிரை குழைத்து, இட்லி அல்லது தோசைக்கு தொட்டுச் சாப்பிட்டால் புதிய சுவை கிடைக்கும்.
- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
♥ சமைத்த கீரை மிச்சமாகிவிட்டால், உளுந்து மாவை அரைத்து கீரை வடை செய்து சாப்பிடலாம்.
♥ரசப்பொடி கைவசம் இல்லாதபோது, மிளகு, சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம்பருப்பை சேர்த்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.
- ஆர்.கீதா, சென்னை-41
♥சேனைக்கிழங்கை புளிநீரில் வேக வைத்துவிட்டால் சாப்பிடும்போது வாய் நமச்சல் இல்லாமல் இருக்கும்.
- எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
♥கூட்டு, குழம்பு ஆகியவற்றிற்கு அரிசிமாவை கரைத்து விடுவதற்கு பதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்துவிட, சீக்கிரம் ஊசிப் போகாது,
சுவையாகவும் இருக்கும்.
♥பக்கோடா மாவுடன் சிறிது ரவையை கலந்து செய்தால் பக்கோடா ஆறிய பிறகும் மொறு மொறுப்பாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.
♥ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி, உப்பு, மிளகாய்ப்பொடி, வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி கலந்து தாளித்துக்கொட்டிட,
சுவையான ஊறுகாய் ரெடி.
♥கறிவேப்பிலை பொடி, புதினாப்பொடி கொண்டு சாதம் கலக்கும்போது சிறிதளவு எலுமிச்சைச் சாறு பிழிந்தால், புதிய கீரையில் செய்தது போல வாசனையாக இருக்கும்.
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
♥தேங்காய் எண்ணெய் கார வாசனை வராது இருக்க வெயிலில் வைத்து கல் உப்பை துணியில் கட்டி போட நன்றாக இருக்கும்.
- என்.உமாமகேஸ்வரி, நங்கநல்லூர்.
♥கோதுமை தோசை சுடும்போது கோதுமை மாவுடன் ஒரு கைப்பிடி ரவை சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வார்த்தால் தோசை கிளறிக் கொள்ளாமல் பட்டு பட்டாக எடுக்க வரும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
♥கோதுமை மாவுடன் பீட்ரூட், கேரட், பாலக் கீரை, சீரகத்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் சுவையான, வண்ணமயமான சப்பாத்தி தயார்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி
♥துவையல் தேவைக்கு அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட அளவில் தோசை மாவை எடுத்து அதில் துவையலை கலக்கி தோசையாகச் சுட்டு விடுங்கள். வித்தியாசமான ருசி தரும்.
- ஆர்.அஜிதா. கம்பம்.
♥சேனைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி அத்துடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து வேக வைத்து பாருங்கள். சீக்கிரமே வெந்திடும்.
- தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.
♥தோசை மிருதுவாக பூப்போல இருக்க தோசை மாவில் சிறிதளவு சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து தோசையை வார்த்தால் தோசை பூப்போல இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.
♥கொழுந்து வெற்றிலை, சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் கட்டினால் விரைவில் குணம் தெரியும்.
- சண்முகத்தாய், சாத்தூர்.
♥சிறிது வாழை மட்டை, இஞ்சி இரண்டையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்த பின்பு, அந்த எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் பலகாரங்களில் எண்ணெய் அதிகம் தங்காது.
- ஆர்.அம்மணி ரெங்கசாமி, தேனி.
♥இட்லி மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் ஜவ்வரிசியை தூள் செய்து உடன் சேர்க்கலாம். மாவு கெட்டியாவது மட்டுமில்லாமல் இட்லியும் மிருதுவாக இருக்கும்.
- ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
♥குளோப் ஜாமுன் செய்யும் போது உருண்டைகள் உடையாமல் அப்படியே இருப்பதற்கு ஜீரா பாகு சற்று ஆறிய பின்னர் அதில் போட வேண்டும்.
♥மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.
♥அதிகாலை சமையல் செய்பவர்கள் முதல் நாளிலேயே காய்கனிகளை வெட்டி பிரிட்ஜ்ஜில் வைப்பார்கள். வெங்காயத்தை மட்டும் முதல் நாளிலேயே வெட்டி வைப்பதை தவிர்க்கலாம். அப்படி வெட்டி வைக்கவேண்டுமென்றால் நன்றாக மூடி உள்ள பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்து பிரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் கெடுதலும் ஏற்படாது. வெங்காய வாடையும் பிரிட்ஜினுள் பரவாது.
♥எந்த அரிசியாக இருந்தாலும் 15 நிமிடங்களுக்கு குறையாமல் ஊற வைத்து உலையில் வேகவைத்தால் அது வேகும் நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும்.
♥வாழைப்பூ, வாழைத்தண்டு நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கும் போது அவை கருத்து விடாமல் இருப்பதற்காக சிறிது தயிர் ஊற்றி வைக்கலாம்.
♥விளக்கு போன்ற பித்தளை பாத்திரங்களை புளி சேர்த்து தேய்ப்பதற்கு பதில் எலுமிச்சை சாறை பாத்திரம் தேய்க்கும் பொடியுடன் சேர்த்து தேய்தால் எண்ணெய் பிசுக்கள் மறைந்து பளபளப்பாக மாறிவிடும்.
♥வீடுகளில் தரை, சமையல் டேபிளில் எலுமிச்சை சாறு கறை இருந்தால் அதனை அகற்ற அதில் சிறிது வெண்ணையை தடவி சில மணி நேரம் கழித்து துடைத்தால் போய்விடும்.
♥ தேங்காய் சட்னி செய்யும் போது புளியை சேர்க்க விரும்பாதவர்கள் அதற்கு பதில் சிறிது தக்காளிப்பழத்தை சேர்த்து தயாரித்தால் வித்யாசமான சுவையுடன் இருக்கும்.
♥உருளை கிழங்கு வேகவைத்த தண்ணீரை கீழேவிடாமல் அதை உபயோகித்து பாத்திரம் கழுவினால் பாத்திரம் பளிச்சென இருக்கும்.
0 Comments
Thank you