♥கல்லும் புல்லும்!
சுகந்தி
♥அறைக் கதவுக்கெதிரே கட்டில் போடப்பட்டு, கல்யாணி படுத்திருந்ததால், அவளால் அங்கிருந்தே ஹாலில் நடப்பதையெல்லாம் பார்க்க முடிந்தது.
ஹாலின் நடுவே உட்கார்ந்து, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் நாராயணி.
“”என்ன மாமி… பூசணிக்காய் சாம்பார், தக்காளி ரசம், கத்திரிக்காய் கறி செய்யட்டுமா?” என்று அங்கிருந்தபடியே கேட்டாள் நாராயணி.
♥“”பண்ணுடியம்மா நாராயணி… நீ என்ன சமையல் செய்தாலும் எனக்கு பிடிக்கும். நீ ஒவ்வொண்ணையும் பார்த்து, பார்த்து ரொம்ப டேஸ்ட்டா பண்றே. ஒரு கையும், காலும் இழுத்துண்டு, படுத்த படுக்கையா இருக்கிற எனக்கு, நீ சமைச்சுப் போடறதும், சாதத்தை பிசைஞ்சுண்டு வந்து ஊட்டறதும், குடிக்க தண்ணி கொடுக்கறதும், வாயை துடைச்சு விடறதும், காலம்பர வந்ததும் என்னை குளிப்பாட்டி விடறதும், டிரஸ் மாத்தி விடறதும், என் சொந்தப் பொண்ணுன்னு ஒருத்தி இருந்தா கூட, இப்படி எல்லாம் என் தேவை ஒவ்வொண்ணையும் தெரிஞ்சுண்டு செய்ய மாட்டா…” என்று தன் அறையிலிருந்தபடியே கண்கலங்க, குரல் தழுதழுக்க கூறினாள் கல்யாணி.
♥“”முடியாதவாளுக்கு இப்படி எல்லாம் செய்யணும்ன்னு அந்த பகவானே ஆசைப்பட்டு, என்னை இப்படி ஒரு நிலைமையிலே கொண்டு வந்து வைச்சிருக்கான் போலிருக்கு கல்யாணி மாமி. உங்களுக்கு வேணுங்கறதை எல்லாம் நான் செய்யறப்போ, என்னைப் பெத்த எங்கம்மாவுக்கு நான் செய்யறது போல, ஆத்ம திருப்தி எனக்கு உண்டாகறது மாமி…
♥“”அதோட நான் உங்களுக்கு செய்யறதுக்கு ஆயிரமாயிரமா, மாசம் பிறந்தா சம்பளம் கொடுக்கறேள். அஞ்சு வருஷமா என் கணவன் என்னை கைவிட்டதிலேயிருந்து, நான் என் சொந்த கை கால்ல நம்பி நிக்க, வாழ, பாடுபட கடவுள் எனக்கு இப்படி ஒரு வழியையும் காண்பிச்சிருக்கார். இல்லாட்டா, இல்லாட்டா…” என்று சொல்லும் போதே, நாராயணியின் கண்களில் கண்ணீர் முட்டி மோதிக் கொண்டு வருவதை கவனித்து விட்டாள் கல்யாணி.
♥“”நாராயணி… ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கறதும், முடிஞ்ச உதவிகளை மத்தவாளுக்கும் செய்யத்தான் பகவான் நம்மளை படைச்சிருக்கான்,” என்ற கல்யாணி, “”மத்தியான டிபனுக்கு அடை செய்யட்டுமான்னு காலம்பர வந்ததுமே கேட்டியே?” என்று பேச்சை மாற்றினாள்.
“”ஆமாம் மாமி!”
“”இன்னைக்கு எனக்கு வயிறே சரியில்லை நாராயணி… மாமாவும், அடையை ராட்சஷ போஜனம் என்பார். அவருக்கும் அஜீர்ண பிராப்ளம் இருக்கு. மத்தியானம் அடை டிபன் வேண்டாம். ராத்திரிக்கு மோர் சாதமும், எலுமிச்சங்காய் ஊறுகாயும் போதும் நாராயணி…” என்றாள் கல்யாணி.
♥“”சரி மாமி…” என்ற நாராயணி, “”வயிறு சரியில்லை என்கிறேளே மாமி… காரம் குறைவா சாம்பார் வைக்கறேன். தெளிவா ரசம் போட்டுண்டு சாப்பிடுங்கோ. மோர் சாதத்துக்கு ஒரு துண்டு நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டுக்குங்கோ… வயிரு சரியாயிடும்,” என்றபடி சமையலறைக்குள் நுழைந்தாள் நாராயணி.
இனி பேச மாட்டாள் அவள். சமையல் கட்டிலிருந்து சமையலாகி கொண்டிருக்கும் வாசனை மட்டும் தான் வந்து, அந்த வீட்டையே ஆக்ரமிக்கும்.
நன்றாக வாழ வேண்டிய வயதில், கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து, குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டிய காலத்தில், தன் பிழைப்புக்காக வீடுகளில் வேலை செய்யும் நாராயணியை நினைத்த கல்யாணியின் கண்கள் கலங்கின.
♥நாராயணி அவர்கள் ஊர்ப் பெண் தான். அப்பா, அம்மா இல்லை. அவளுடைய சிறு வயதிலேயே ஒருவர் பின் ஒருவராக கண்ணை மூடி விட்டனர். உள்ளூரிலேயே அவள் மாமா, சந்தானம் இருந்தார். அவருக்கும் கஷ்டமான ஜீவனோபாயம் தான். ஆனாலும் அப்பா, அம்மாவை இழந்து, அழுது கொண்டு நிற்கும் நாராயணியை மற்றவர்களை போல, அம்போ என்று விட்டுவிட அவர் மனம் விரும்பவில்லை.
♥“நாராயணியை அழைச்சுண்டு வந்து நம்ம கூட வச்சுக்கலாம் சாவித்திரி…’ என்று தம் மனைவியிடம் கூறினார் சந்தானம்.
“நம்ம குழந்தைகளோட குழந்தையா நாராயணியும் இருக்கட்டும்…’ என்ற சாவித்திரி, “வா நாராயணி…’ என்று அவளை அன்போடு அழைத்து, அணைத்துக் கொண்டாள்.
சந்தானத்தால், நாராயணியை படிக்க வைக்க முடியவில்லை. சமையல் வேலைக்கு சென்று, நாலு காசு சம்பாதிக்கும் அவரால், அவர் குழந்தைகளையே சரிவர படிக்க வைக்க முடியவில்லை. அதை புரிந்து கொண்ட நாராயணி, “மாமா… நீங்க சமைக்கப் போற இடத்துக்கு நானும் வந்து, கூட மாட உதவி செய்யறேனே மாமா… உங்க கூட வேலை செய்யற ஆட்கள்ல ஒருத்தரை குறைச்சுடுங்கோ…’ என்றாள்.
தாம் சமையல் வேலை செய்யும் வீடுகளுக்கு அவளையும் அழைத்துச் செல்வார் சந்தானம். அவளுக்காக, மாதா மாதம் ஒரு சிறு தொகையை, வங்கியில் போட்டு வந்தார்.
♥பெரியவளாக ஆக ஆக, சாம்பார், ரசம், மோர்க் குழம்பு, பிட்லா, கூட்டு, அவியல், கோசம்பரி, பாயசம், பச்சடி, ஆமைவடை, ஸ்வீட், அப்பளம், ஊறுகாய் எல்லாம் சுயமாக, தானே, 20 – 30 பேர் சாப்பிடும் அளவுக்கு தயாரிக்க கற்றுக் கொண்டாள் நாராயணி.
அடுப்பில் சாம்பார், ரசம் கொதிக்கும் வாசனையிலிருந்தே உப்பு போதும், போதாது என்று சொல்கிற அளவுக்கு தேர்ந்து விட்டாள். உடல் வளர்ச்சியிலும், பாலகியாக இருந்த அவள், பருவ குமரியாகி விட்டாள்.
♥அவளை ஒரு சமையல் வேலைக்கு சந்தானம் அழைத்துச் சென்ற போது, அவருக்கு லேசாக ஒரு தலைச் சுற்றல் வந்தது. அப்படியே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார் அவர். மணிபர்சில் அவர் எப்போதும் கைவசம் வைத்திருக்கும் பி.பி., மாத்திரையை அவர் வாயில் போட்டு, அதை முழுங்க தண்ணீரும் கொடுத்த நாராயணி, “மாமா… அப்படியே படுத்துண்டு, ரெஸ்ட் எடுத்துங்குங்கோ… நான் சமையல் வேலையை கடகடவென முடிக்சுடறேன்…’ என்றாள். சொன்னபடியே ஓரிரு மணி அவகாசத்துக்குள், எல்லா சமையலையும் முடித்து, குழந்தைக்கு ஆயுசுஹோமம் முடிந்ததும், அந்த இடத்தை சுத்தம் செய்து, வந்தவர்கள் சாப்பிட இலைகளும் போட்டு விட்டாள் நாராயணி.
♥வந்தவர்கள் அவளுடைய சுறுசுறுப்பைக் கண்டு, அசந்து போயினர். அவள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு, “பேஷ்… பேஷ்!’ என்றனர். அவர்களில் ஒருவர் கைலாசம்; மற்றவர்கள் அவர் மனைவி பர்வதம், பிள்ளை குமரேஷ்.
“பேசாம எங்காத்துக்கு மருமகளா வந்துடுடியம்மா… எவ்வளவு ருசியா சமைக்கறே?’ என்றாள் பர்வதம்.
“காசு பணம் வேண்டாம்மா… வாய்க்கு ரொம்ப ருசியா சமைக்கிறே; அது போதும்!’ என்றார் கைலாசம்.
பிள்ளை குமரேசோ, “வரேன்னு சொல்லு…’ என்பது போல நாராயணியைப் பார்த்தான்.
அப்போதே தலை சுற்றல் போய், எழுந்து உட்கார்ந்து விட்டார் சந்தானம். அங்கேயே தம் வறிய நிலையை, அவர்களிடம் எடுத்துச் சொன்னார்.
“கட்டிண்டிருக்கிற புடவையோட மட்டும் வந்தால் போதும்…’ என்றனர் கைலாசமும், பர்வதமும்.
♥தம் சக்திக்கு ஏற்றபடி நாராயணிக்கும், குமரேசுக்கும் கல்யாணம் செய்து வைத்தார் சந்தானம். கணவன் வீட்டுக்குச் சென்றாள் நாராயணி. புகுந்த வீட்டில் நாராயணி எப்படி இருக்கிறாள் என்று பார்க்கச் சென்றனர் சந்தானமும், சாவித்திரியும்.
நாராயணி கணவனுடன் சந்தோஷமாக இருப்பதை பார்த்து, சந்தோஷத்துடன் ஊர் திரும்பினர்; ஆனால், சந்தோஷம் ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை.
நாராயணியின் மாமியார் பர்வதம், பாத்ரூமில் சறுக்கி விழுந்து, பின் தலை குழாயில் அடிபட்டு, மண்டை உடைந்து, இறந்து போனாள்.
சம்பந்தியம்மாளின் காரியத்துக்கு சென்றுவிட்டு சந்தானமும், சாவித்திரியும் ஊர் திரும்பும் போது, நாராயணியையும், பலவந்தமாக அவர்களுடன் அனுப்பி விட்டான் குமரேஷ்.
♥“இவள் வந்த வேளை, எங்கம்மா போயிட்டா… இவ, இங்கே இருக்கக் கூடாது. இருந்தா எங்கப்பாவையும் முழுங்கிடுவா…’ என்றான் அவன்.
ஐந்து வருஷம் ஓடிவிட்டது. மாமாவும் காலமாகி விட்டார். மாமி மற்றும் குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு நாராயணியின் தலை மீது விழுந்தது. ஆம்பிளை சமையல்காரர்களைப் போல, சமையல் தொழில் செய்ய முடியும் என்று நிரூபிக்க முயன்றாள் நாராயணி. ஆனால், கூட வேலை செய்தவர்களே அவளுக்கு குழி பறித்தனர். அவளிடம் பணம் போய் சேராமல் தாங்களே பறித்துக் கொண்டனர். தொழிலில் முன்னேற முடியாதபடி சங்கடத்தை உண்டு பண்ணினர்.
♥வீடுகளுக்கு சென்று வேலை செய்யும் நிலை உண்டாயிற்று நாராயணிக்கு. காலை வேளையில், இரண்டு வீடுகளில் சமைத்துப் போட, வேலை தேடிக் கொண்டாள். கல்யாணி போன்ற வியாதியஸ்தர்களை, முழுமையாக கவனிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள். வீட்டில் ஸ்வீட் செய்து, அதை சின்னச் சின்ன கடைகளுக்கு சப்ளை செய்தாள். எல்லாமாக சேர்ந்து குடும்பத்தை சிரமமில்லாது நடத்த ஏற்பாடுகளை செய்து கொண்டாள் நாராயணி.
“”சார்… சார்…” என்று வெளியிலிருந்து யாரோ கூப்பிடும் குரல் கேட்டது கல்யாணிக்கு.
♥“”மாமாவை யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கு நாராயணி. மாமா வெளியிலே போயிருக்கார். யாரு கூப்பிடறாங்கன்னு கொஞ்சம் பாரு…” என்றாள் கல்யாணி.
போய் பார்த்தாள் நாராயணி.
தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு; அங்கே குமரேசு நின்று கொண்டிருந்தான்.
“இத்தனை வருஷங்களுக்குப் பின், நான் இருக்கிறேனா, செத்தேனா என்று பார்க்க வந்திருக்கானா படுபாவி…’ என்று எண்ணினாள் நாராயணி.
“”யாரு நாராயணி… உள்ளே கூப்பிடு…” என்றாள் கல்யாணி.
“வாங்கோ…’ என்று அவனை கூப்பிடவில்லை நாராயணி. உள்ளே திரும்பினாள்; அவனும் பின்னாடியே வந்தான்.
♥“”உன் ஆம்படையான் குமரேஷ்…” என்று அவனைப் பார்த்து வியந்த கல்யாணி, “”இத்தனை வருஷத்துக்கு அப்புறம் பெண்டாட்டியை கூட்டிண்டு போயி, கூட வைச்சுக்கணும்ன்னு வந்திருக்கியாப்பா?” என்று கேட்டாள்.
“”ஆமாம் மாமி… நாராயணி எங்கள் வீட்டுக்கு வந்த நேரம் சரியில்லை. எங்கம்மாவை முழுங்கிட்டா. இன்னும் கொஞ்ச நாள்ல என்னையோ, எங்கப்பாவையோ முழுங்கிடுவான்னு நானே பயங்கரமா நெனைச்சுண்டு, அவளை தள்ளி வைச்சுட்டேன். அம்மா வீட்டுக்கு கொண்டு போய் தள்ளி விட்டேன்.
♥“”அப்போ அவ மனசு என்ன பாடுபட்டிருக்கும், எவ்வளவு அழுதிருப்பா, எவ்வளவு கண்ணீர் விட்டிருப்பா, இன்பமா கழிய வேண்டிய சின்ன வயசுக்காரா ராத்திரி எல்லாம், எவ்வளவு துன்பமா கழிஞ்சிருக்கும்… அநியாயமா ஒரு இளம் பெண்ணை வாழா வெட்டி என்ற பெயரோட வாழ வைச்சுட்டோமேன்னு நான் வருந்தாத நாளே இல்லை,” என்று, கண்களை துடைத்துக் கொண்டே கூறிய குமரேஷ், நாராயணியிடம் திரும்பினான்.
“”என்னை மன்னிச்சுடு நாராயணின்னு உன்கிட்டே மன்னிப்பு கேட்க நான் வரலே. என் கூட வா… இனிமேலாவது சேர்ந்து வாழலாம்ன்னு உன்னை கூப்பிட வரலே.
“”உன் வாழ்வை சிதற வச்ச என்னை, நிர்க்கதியாக்கிவிட்ட என்னை, மன்னிச்சு ஏத்துக்கோன்னு கேட்டுண்டு நான் இப்போ இங்கே உன்கிட்ட வரலே நாராயணி… உன்கிட்ட அப்படி எல்லாம் கேட்க எனக்கு யோக்யதை இல்லை, அருகதை இல்லை. உன் கணவன்னு சொல்லிக்கவே எனக்கு தகுதியில்லை.”
“பின்னே ஏன் வந்தீங்க?’ என்று கேட்பது போல, அவனைப் பார்த்தாள் நாராயணி. அவள் கண்களில் அக்னி பிழம்பு தெரிந்தது.
“
♥உன்னோட அஞ்சு வருஷ வாழ்க்கை வீணாயிடுத்து நாராயணி… இது மாதிரி இன்னும் மிச்சமிருக்கிற காலங்களும் வீணாக போயிடக் கூடாது. உன் சந்தோஷத்துக்கு, புது வாழ்க்கைக்கு நான், நம் கல்யாண பந்தம் குறுக்கே தடைக்கல்லா இருக்கக் கூடாது… நீ வாழணும்; சந்தோஷமா வாழணும். குழந்தை குட்டிகள் எல்லாம் பெத்துண்டு, புதுக் கணவரோட சந்தோஷமா வாழணும். அதுக்கு… அதுக்கு…”
“”என்னடாப்பா செய்ய போறே… நாராயணியை அழைச்சுண்டு போய் உன் கூட வச்சுக்கத்தான், அவளை கூப்பிட நீ வந்திருக்கேன்னு நினைச்சேன்பா. என்னமோ புது கல்யாணம், புதுக் கணவன்னு எல்லாம், என்னல்லாம்மோ பேசிறீயேப்பா!” என்றாள் கல்யாணி ஆதங்கத்துடன்.
“”நாராயணியை எங்கள் கல்யாண பந்தத்திலேயிருந்து சட்டபூர்வமாக விடுதலை செய்யப் போறேன் மாமி. இந்த பாவியோட, கல் நெஞ்சுக்காரனோட அவள் வாழ வேண்டாம்,” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான் குமரேஷ்.
“”இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்!” என்றாள் நாராயணி தீர்க்கமாக.
“”ஏன் நாராயணி?”
♥“”ஐயோ பாவம்… இளம் பெண்ணோட வாழ்க்கை வீணாப் போறதே என்ற இரக்க குணத்தோட நீங்கள் இங்கே வரலே; இப்படி எல்லாம் பேசலே. என் மேலே உங்களுக்கு ரொம்பவும் அக்கறையும், இரக்கமும் உண்டாயிருக்கிற மாதிரி காட்டிட்டு, என்கிட்டே விவாகரத்து வாங்கிட்டு போக, என் சம்மதத்தை பெற மட்டும் தான், நீங்க வந்திருக்கீங்க. நீங்கள் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க. அதுக்கு தடையா முதல் சம்சாரமா நான் இருக்கேன். என் மேல் இரக்கப்படற மாதிரி நடிச்சு, என்னை விவாகரத்து செய்துட்டு, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற தீர்மானத்தோடத்தான், ரொம்ப நல்ல மனுஷனாட்டமா வேஷம் போட்டுட்டு வந்திருக்கீங்க. இதுக்கு நான் ஏமாற மாட்டேன். உங்களுக்கு தெரியாம, உங்க நடவடிக்கைகளை அப்பப்போ கவனிச்சுட்டுதான் இருக்கேன்…” என்றாள் நாராயணி.
“”நிஜமாகவாடி நாராயணி?” என்றாள் கல்யாணி.
♥“”ஆமாம் மாமி… என்னை நிர்க்கதியா தவிக்க விட்டு, இவர் இன்னொரு பெண்ணோட வாழ நான் எப்பவும் ஒரு தடையா, இடைஞ்சலா காலம் பூராவும் இருப்பேன். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு பழைய பஞ்சாங்கம் படிக்கிற பெண்ணில்லை நான். என் வாழ்க்கையை நாறடிச்சவனுடைய வாழ்க்கையை அனுபவிக்க விட மாட்டேன்.
“”எனக்கு புருஷன் இல்லாம போகச் செய்தவன் இவன். இவனுக்கு பெண்டாட்டின்னு ஒருத்தி வராம இருக்க முதல் சம்சாரம் என்ற அடையாளத்தோட, இவனுடைய ஒவ்வொரு முயற்சியையும் முறியடிப்பேன். முதல் பெண்டாட்டின்னு, இவன் என் கழுத்திலே கட்டின தாலியை காட்டி, இவன் கல்யாணம் நடக்காம, இவனை கலங்க அடிப்பேன்…
♥“”பெண் என்பவள், ஆணின் இஷ்டத்துக்கெல்லாம் வளைந்து கொடுக்கிற பலவீனமான ஒரு ஜீவன், என்ற காலம் எல்லாம் மலையேறி போச்சு. எனக்கில்லாமல் போன வாழ்க்கை, சந்தோஷம், குழந்தை, குட்டி எல்லாம், இவனுக்கும் இருக்கக் கூடாது. ஒரு ஆண், ஒரு பெண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ண முடியும்ன்னா, அதே பெண்ணாலே அவனோட வாழ்க்கையையும் நாசம் பண்ண முடியும் என்கிறதை, இவனோட ஒவ்வொரு முயற்சியிலே÷யும் தலையிட்டு காட்டுவேன்.
♥“”அது, இவனைப் போன்ற ஆண்களுக்கு ஒரு பயத்தையும், புத்தியையும் கொடுக்கும். என்னைப் போன்ற அபலைப் பெண்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும். ஆணுக்கு, பெண் சளைத்தவள் இல்லைன்னு இவனைப் போன்ற அயோக்கியர்கள், வேஷதாரிகள் உணரணும்…” என்று மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நாராயணி உணர்ச்சிவசப்பட்டு, படபடவென பேசிய போது தான், அணிந்து வந்த முகமூடியை இந்த நாராயணி கிழி கிழி என்று கிழித்து விட்டாளே என்பது போல, தலையை குனிந்து, திரும்பி சென்றான் குமரேஷ்.
♥“”பெண்குலம் முன்னேற நீ ஒருத்தி போதுமடி நாராயணி. நிறைய பேர் கிளர்ந்து எழுந்து, புருஷக் கொடு மைக்கு எதிரா போராட முன் வரணும்,” என்றாள் கல்யாணி ஆவேசமாக.
0 Comments
Thank you