♥உபசரித்தால் என்ன குறைந்து விடும்!
♥ஆசிரியராக பணிபுரியும் நானும், என் தோழியும், அன்று, மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தோழி ஏதோ யோசனையில் இருந்ததைக் கவனித்த நான், என்னவென்று விசாரித்தேன்.
♥கடந்த மாதம், காலமான அவளது மாமியார், இறந்து விடுவோம் என தெரிந்ததாலோ என்னவோ, என் தோழியை கூப்பிட்டு, தான் போட்டிருந்த மூன்று சவரன் வளையல்களை தோழிக்கு கொடுத்து, 'இதை என் பரிசாக வைத்துக் கொள்...' என்று கூறியுள்ளார். பின், 'நான் இந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்து, பல வருஷமாகுது. கல்யாணமான மறுநாள் அடுப்பங்கரையில் காலை வைத்தவளுக்கு, இன்று வரை ஓய்வே இல்லை.
'
♥வகை வகையாய் சமைத்துப் போட, சப்புக் கொட்டி சாப்பிட்ட என் கணவரோ, மகனோ, மகளோ, 'நீ சாப்பிட்டியா...' என்று ஒரு நாள் கூட கேட்டதில்லை. 'நீயும் கூட உட்கார்ந்து சாப்பிடு; நாங்கள் பரிமாறுகிறோம்...' என்று, இதுவரை ஒருவர் கூட கூறியதில்லை. கேட்டு வாங்கிச் சாப்பிடுவதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது...
'
♥நம்மை நாமே நமஸ்காரம் செய்வது போல, நாம் சமைத்ததை நாமே எடுத்துப் போட்டு சாப்பிடுவதில் திருப்தியே இருக்காது. நீ, இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தபின், என்னோடு உட்கார்ந்து இரண்டொரு முறை சாப்பிட்டிருக்கிறாய்... 'நீங்க உட்காருங்க; நான் பரிமாறுகிறேன்...' என்று கூறியிருக்கிறாய். அதில் எனக்கொரு மனநிறைவு. அதற்காகத் தான் இந்த பரிசு...' என்று கூறினாராம்.
♥இதைக் கூறி, 'நாம் அனைவருமே நம் அம்மாவின் கையால் சாப்பிட்டிருப்போம்; ஆனால், எத்தனை பேர், 'அம்மா நீ சாப்பிட்டாயா... நீயும் வந்து உட்காரும்மா... எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்'ன்னு கூறியிருப்போம்... அதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்...' என்றாள்.
♥அம்மாவோ, மாமியாரோ யாராக இருந்தாலும், 'சாப்பிட்டீர்களா... நான் பரிமாறட்டுமா...' என்று இனி உபசரிக்கலாமே... சின்ன சந்தோஷம் அவர்களுக்கு கிடைக்கட்டும்!
0 Comments
Thank you