♥கட்டட தொழிலாளியிடம் கற்ற பாடம்!
♥எங்கள் வீட்டு மாடியில் வீடு கட்டினோம். கட்டட தொழிலாளர்களோடு, இளம் வயது சித்தாள் ஒருவள் இருந்தாள். அவளிடம் பேச்சு கொடுத்ததில், எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், மேலும் படிக்க வசதியின்மை மற்றும் குடும்ப பொறுப்பு வந்து விட்டதால், வேலைக்குப் போகும் நிலை வந்து விட்டதாக கூறிய போது, அவள் மீது இரக்கம் ஏற்பட்டது.
♥அவளுக்கு என்னாலான உதவியை செய்ய எண்ணி, 'எனக்குத் தெரிந்த ஒருவர், வீட்டு வேலைக்கு ஆள் கேட்கிறார், போகிறாயா... காலை சென்று, மாலை திரும்பிடலாம், இரண்டே பேர் தான்; வேலை அதிகம் இருக்காது. ஏ.சி., வீடு, இரண்டு வேளை சாப்பாடு, பொழுது போகலன்னா, 'டிவி' பாக்கலாம். சம்பளம், இதை விட இரண்டு மடங்கு அதிகம் கிடைக்கும்...' என்று சொல்ல, மறுத்து விட்டாள்.
♥காரணம் கேட்ட போது, 'சுமை துாக்கி, மாடி ஏறி, இறங்கி, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, உரம் ஏறிப் போனவர்கள் நாங்கள். திடீரென வெயில் படாமல், கனத்த வேலை செய்யாமல், ஏ.சி.,யில் அலுங்காமல், குலுங்காமல், 'டிவி' பார்த்தபடி இருந்தால், ஊளை சதை போட்டுவிடும்.
♥'தினமும், எங்கள் மீது வெயில் படுவதால், அவ்வளவு சீக்கிரம் தலைமுடி நரைக்காது; தோல் வியாதியும் வராது...' என்று சொன்னவள், 'அன்றாடம் கூலி வாங்கிப் போய், புதிய காய்கறிகள் வாங்கி, வேண்டிய அளவு சமைத்து, சூடாக சாப்பிட்டு, அப்போதே காலி செய்து விடுவோம். அந்த வீட்டில் எல்லாம், பிரிஜ்ஜில் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள் தான் கிடைக்கும்; அதில் சத்து இருக்காது...' என்றாள்.
♥படித்த நாம், வசதி வாய்ப்புகளை வைத்து, உடல் நலம் பேணுவதில் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம். நம்மால் இவர்களைப் போல் உழைக்க முடியாவிட்டாலும், உணவு விஷயத்தில் அவர்களை பின்பற்றுவது நல்லது.
♥துவைத்த துணிகளையும், மற்ற உணவுப் பொருட்களையும் காய வைக்க, நாமே தினம் மாடி ஏறி, இறங்குவது மிக நல்லது. அப்போதாவது, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் விட்டமின்களை பெறலாமே!
— எஸ்.ஜெயம் சதாசிவம், மதுரை
0 Comments
Thank you