"என்னங்கய்யா வேணும்.... டீ சாப்பிடுறீங்களா ?"
"சூஸ்... சூஸ்... வாங்கி தா கண்ணு.. ஆசையா இருக்கு"
"என்ன ஜூசுங்க ஐயா வேணும்?"
"ஆப்பிள் சூசு"
கடையில் சுற்றி நிற்பவர்கள் கேலியுடன் "பார்ரா" என்கிறார்கள்.
சிரித்தவாறு ஜூஸ் வாங்க உள்ளே போகிறார் அந்த முகம் தெரியாத மனிதர்.
அந்த கேப்பில் அந்த முதியவரை நானொரு படமெடுத்துக் கொண்டேன். உள்ளே போனவர் பெரிய கப் நிறைய ஜூஸுடன் வெளியே வந்தார்.
பெரியவர் ஆசையாசையாக இரு கைகளிலும் ஜூஸ் கப்பை ஏந்தி, ஸ்ட்ரா வழியாக மெல்ல உறிகிறார். அவர் கண்கள் சொக்கிப்போகிறது. முகத்தில் அப்படி ஒரு திருப்தி.
அளவு பார்த்து பார்த்து பாதி ஜூஸை குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தார். வாங்கிக்கொடுத்தவர் பதறிப்போய்... "ஐயா... அந்த டம்ளரை கொடுத்துட்டு போங்க" என்று அழைக்க... கையால் சைகை காட்டிவிட்டு முன்னாள் சென்றார்.
அங்கே அவர் மனைவி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க. அவர் கையில் மீதி ஜூஸை கொடுத்து குடிக்க சொல்கிறார். "ஏது?" என்று அந்த அம்மா கேட்க... வாங்கிதந்தவரை நோக்கி விரல் நீட்டுகிறார்.
"குடி... இனிப்பா இருக்கு..." என்று ஆசையாய் அவர் சொல்ல, பாட்டி கண்ணில் காதல் மின்னுகிறது.. வாங்கிக்கொடுத்தவர் சிரித்துக்கொள்கிறார்.
நான் அந்த காதலை , கண்களில் ஹார்டின்களோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.
அழகு... ❤️❤️❤️
- பாலா
0 Comments
Thank you