#அந்தக்காலம்
தொலைபேசி இல்லாமலே சொன்ன நேரத்திற்கு நின்றிருந்தோம்.
காதல்கள் பலதும் கடிதங்களிலேயே வாழ்க்கை ஓட்டின.
தோல்விக்காதல்கள் தற்கொலை செய்துகொண்டது. அல்லது எங்கோ ஓடித்தொலைந்து கொண்டது.
ஆட்களை அடுக்கி பேருந்துகள்
அவஸ்தை தந்ததில்லை
வீட்டிலொரு மிதி வண்டி நின்றால்
பெருமை கொண்டோம்.
மிதிவண்டியை அலங்கரித்து அதில்
ஆனந்தம் அடைந்தோம்.
வேலைக்கு போகாதவனுக்கு
விவசாயம் தெரிந்திருந்தது
பாம்புக்கடிக்கு
பார்வை பார்த்தோம்.
கண்ட நோய்களெல்லாம் நாம்
கண்டது கிடையாது
ஐஞ்சு மணிக்கு எழும்பி சாமிக்கு
அறுகம் புல்லும் பூவும் பிடுங்கினோம்
அப்பா பால்கறக்க அம்மா வீடுபெருக்க
அக்கா கோலம் போட்டாள்.
சுந்தரம்பாள், கோவிந்தராஜன் பக்திபாடல்கள் கோவில்களில் ஒலிக்கும்
கல்யாண வீடுகளில் பலகார சூடுகள் தான் ஊர், உறவுப்பெண்களின் பாராளுமன்றம்
பாய் போட்டு சாப்பாடுவதில் பரவசமடைந்தோம்
வானொலிப்பாடல்கள்
மனப்பாடம் ஆகின
ஆல் இந்தியா ரேடியோ பாடல்கள் ஒலிபரப்பாகும் நேரத்துக்காய் தவமிருந்தோம்
அப்துல் கமித்தின் பாட்டுக்கு பாட்டுக்கு அலைமோதுவோம்.
இசையும் கதையும்
இனித்தே போனது.
டைனமோவை சுத்தி
நாலைந்து வீடு கூடி இரவு
ஏழரைசெய்தியை கொற்றவை, ரத்னா குரலில் கேட்டோம்
வருசம் தீபாவளிக்கு உறவுகள் வீடுகளில் உலாவந்தோம்.
மாலையில் நாம்
மாபிள் அடி, கிட்டிப்புல்லு என்று விசியாக
பெண்கள் புளியமர நிழலில் அரட்டை அடித்தார்கள்
ரஜனியின் படங்கள் பார்த்து வார்த்தைகள்
மனதில் பதிந்து போனது
அழி இறப்பர் வாசனையில் ஆனந்த சுகமடைந்தோம்.
மயிலிறகு குட்டிபோட்டது புத்தக ஒற்றைக்குள். அதற்கும் வாசனைப்பவுடர் போட்டோம்
காகிதத்திலேயே நீரில் கப்பலும் , ஆகாயத்தில் ராக்கட்டும் செய்தோம்
ஆசிரியர்களுக்கு
அச்சம் கலந்த மரியாதை செய்தோம்.
அவர்களும் கரிசனை கொண்டு கண்டித்தார்கள்
கோயில் திருவிழாக்கு
இருபது ரூபா இதய திருப்தியாய் இருந்தது.
ஐஸ் பழம் அரை நொடியில் சாயம் போயிருக்கும்.
முழுப்பாவாடை சட்டை பெண்பிள்ளைகள் கைகள் கலர்காப்பால் நிறையும்
மாதமொரு தடவை வீட்டில் ஆண்கள் அனைவருக்கும் அப்பா சொல்வதைப்போல் கட்டையாக முடிவெட்டு நடக்கும்.
மூச்சும் காட்ட முடியாது எம்மால்
எவரும் வெளிநாட்டிலும் இல்லை
அரச வேலையிலும் இல்லை. இருந்தும் கஷ்ரம் கடன் இருந்ததில்லை.
0 Comments
Thank you