♥#வாழ்வின்_விடியல்_நீ_எனக்கு
♥சில நாட்களாய் உடலின் சோர்வு என்னை அதிகமாய் வருத்திக்கொண்டிருந்தது. உடல் சோர்வும் மனத்தின் வேதனையும் என்னை மென்மேலும் வலுவிழக்கச் செய்தது.
♥தலை சுற்றல், வாந்தி, உடல் சோர்வு . இவை எல்லாம் அதற்கான அறிகுறிகளா ? அப்படியென்றால்....
வேதனையையும் மீறி ஏதோ ஓர் உணர்வு
எத்தனை வருடங்களின் வேதனை இது. ஒன்று இரண்டாகி. இரண்டு மூன்றாகி. மூன்று நான்காகி, எட்டு வருடங்கள் ஓடி விட்டன.
♥இந்த எட்டு வருடங்களின் வேதனைகள் தீருமா???? எங்கே தவறு செய்தேன் நான் ? என் வாழ்வில் இருள் நீங்கி விடியல் வருமா?
ஆன்மீகத்தையும் அறிவியலையும் நான் அவ்வளவு நம்பினேன். ஆனால் இரண்டும் என்னோடு ஒத்துழைக்கவில்லையே!
♥உறவினர்களின் பார்வையும், மாமியாரின் குத்தலும் என்று தீருமோ .... எப்படி தீருமோ ???
காலங்களின் அறிவியல் வளர்ச்சி சிலரிடம் தான் இருக்கிறது. பலரிடம் இன்னும் அதே பார்வை... அதே கேள்வி ... இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே பெண்களால் மட்டுமே பெண்களிடம் கேட்கும் கேள்வி.
♥"என்ன இன்னும் ஒன்னும் இல்லையா? ஏதாவது டாக்டரைப் பார்க்கலாமே? "
இந்தக் கேள்விகளில் மனம் நொந்த நேரத்தில் எல்லாம் அன்பாய் அணைத்திடும் இருகரங்கள். அவ்வளவு அன்பான கணவர். ஒரு வார்த்தை அதிர்ந்து பேசியது இல்லை. அவரின் தோள் சாய்ந்து கொள்கையில் அனைத்தும் மறந்து போகும்
இருந்தாலும் சிலரின் கேள்விக்குப் பயந்தே நானும் அவரும் பல இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தோம்.
♥இப்போ எனது இந்தச் சோர்வு ....
கண்கள் நாள்காட்டியை நோக்கின. நாள்கள் கணக்கில் இருந்து ஓடிதான் போயிருந்தன. ஆனால் ...
"இது உண்மையா? எட்டு வருட தவம் வீண்போகவில்லையா? கடவுளே நீ கண் திறந்து விட்டாயா ? என் விஷயத்தில் மருத்துவமும் சாதித்துவிட்டதா?
இத்தனை கேள்விகளுக்கும் பதில் எங்கே தேடுவேன்.
♥"அவரிடம் சொல்லலாமா? சொல்லி விட்டு இல்லை என்றால் அவரும் ஏமாற்றம் அடைவாரே". மனதுக்குள் ஆயிரம் போராட்டங்கள். தனியாக மருத்துவரிடம் சென்று பார்க்கலாமா ?
கைகள் அதுவாகவே வயிற்றைத் தடவின. அதே வேளையில் தோளில் அமைதியாய் அழுத்திய அந்தக் கரங்கள்.
" என்னம்மா , என்ன யோசனை ? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு? "
"ஒன்னும் இல்லங்க. உடம்பு கொஞ்சம் சரியில்ல அதான்"
அவரின் முகத்தை ஏறிட்டேன். என் முகத்தையே பார்த்தப்படி பேசினார்.
♥"எனக்குக் குழந்தை இல்லனு கவலையே இல்லம்மா. நீ இருக்கமா என் குழந்தையாய். வேற என்ன வேண்டும் எனக்கு. நாம் வேண்டுமுனா ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாமே." என்றார்.
♥‘கடவுளே. இந்த நல்ல மனதுக்கு இப்படி ஒரு சோதனையா ?’ என் உள்ளம் இன்னும் தவித்தது. ஏதும் பேசாமல் அவரின் அணைப்பில் ஆறுதல் தேடினேன். சில பல நொடிகள் எப்படி கடந்தனவோ? மிக மிக அருகில் ஒரு குரல்
அம்மா .........
♥இந்த மூன்றெழுத்து சொல் நான் கேட்க துடித்திடும் சொல். என் காதுகளில் இப்போ கேட்கிறது. இதன் இனிமையை உலகின் எந்த விஷயத்தாலும் ஈடு செய்ய முடியாது.
எங்கே கேட்கிறது?
♥"நான் வந்து விட்டேன் அம்மா உன் கண்ணீர் துடைக்க. இதோ நான் தான் அம்மா பேசுகிறேன். இங்கே பார் அம்மா" என்ற குரல் கேட்டு என் கணவரின் அணைப்பில் இருந்து எழுந்து உட்கார்ந்தேன்.
"என்னாச்சி” என்றார் என் கணவர்.
"ஒன்னும் இல்லைங்க.. ஏங்க நாம டாக்டர் கிட்ட போலாமா?" என்றேன்.
♥"ஏன்மா உடம்புக்கு ஏதாவது செய்யுதா? என்ன பண்ணுது." இந்தப் பதற்றமான குரலில் உள்ள அன்பு என்னை இன்னும் சோர்வாக்கியது.
"சரிம்மா கிளம்பு போலாம்."
" அத்தைகிட்ட என்ன சொல்லிட்டு போறது," என்றேன்.
"நான் பார்த்துகிறேன் வா" என்றார்.
♥கொஞ்ச நாளாகவே நாங்கள் சேர்ந்து வெளியே செல்வதை என் மாமியார் விரும்புவதில்லை. இது ஏனென்று எனக்கும் புரியவில்லை.
♥அவர் ஏதோ சொல்லி சமாளிக்க நாங்கள் புறப்பட்டோம். என் அத்தையின் முனுமுனுப்பு , குறுகுறு பார்வை என் முதுகினைப் பதம் பார்த்தது.என் மாமியார் நல்லவர் தான். பேரக்குழந்தை இல்லையே என்ற ஆதங்கமும் சிலரின் பதில் சொல்ல முடியாத கேள்விகளும் தான் அவரின் இந்த வெறுப்புக்குக் காரணம்
"இறைவா.. என்று என் வாழ்வில் விடியல் தருவாய்?"
"என்னம்மா ரொம்ப உடம்புக்கு முடியலையா?
♥"இல்லங்க... லேசா தலைவலி அவ்வளவுதான். அதான் டாக்டர் கிட்ட போறோமே சரியாகிடும்." என்றேன்.
கிளினிக்கில் மருத்துவரைச் சந்திக்கும் எங்களின் எண் வருவதற்குள் எனது தவிப்பு இன்னும் அதிகமாகி போனது.
'♥இவரை அழைத்துக் கொண்டு இங்கு வந்தது தவறோ! வாய் வார்த்தைகளை உதிர்ப்பதை விட இந்தப் பாழாய் போன மனசு பலமடங்கு வார்த்தைகள் அதிகமாய் உதிர்க்கிறதே.
தவிப்போடு திரும்பிய என் கண்களில் எங்களின் பக்கத்தில் ஒரு வயதான பெண்மணி கையில் பிறந்த சில தினங்களே ஆன குழந்தையுடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டது.
♥குழந்தையின் அழகான சிவந்த முகம் என்னைச் சுண்டி இழுத்தது. ஆனால் ஏதோ கடித்ததைப் போல அங்காங்கே இரத்தத் திட்டுகள் குழந்தையின் கைகளிலும் கால்களிலும். குழந்தையையே விழி அகலாமல் பார்த்தேன். குழந்தையும் விழித்து என்னைப் பார்த்தது.
♥‘குழந்தை சிரிக்கிறதா என்னைப் பார்த்து? என்ன உணர்வு இது?’ மனதின் எண்ண ஓட்டம் அடங்க மறுக்கிறதே.
"குழந்தை உங்க பேரபிள்ளையா? என்னம்மா ஆச்சி குழந்தைக்கு?" அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.
♥"இல்லம்மா.... நாங்க துப்புறவு பணியாளர்கள." பக்கத்தில் ஒருவர் இருப்பதை அப்போதுதான் கவனித்தேன். "குழந்தை குப்பைத் தொட்டியில் கிடந்துச்சி. எறும்பு கடிச்சிடுச்சிம்மா. போலீசுக்குச் சொல்லிட்டோம். மனசு கேட்கல அதான் போலிஸ் வரதுக்குள்ள இங்க தூக்கிட்டு வந்தோம். போலீஸ் இங்க வருவாங்கம்மா"
♥அந்தப் பிஞ்சு விரல்களை என் கரம் என்னையும் அறியாமல் பற்றியது.
காவல் துறையினர் வந்தவுடன் குழந்தை என் கரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தாதியர் ஒருவரால் தூக்கிச் செல்லப்பட்டது.
♥என் மனதின் வேதனை இப்போ வேறானது. என் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏதோ இன்னும் வலுவிழந்து போனது போல இருந்தது.
♥"என்னங்க இந்தக் குழந்தையைக் கேட்டா நமக்குக் கொடுப்பாங்களா? நாம் வளர்த்துக்கலாங்க." என்ற என்னை என் கணவர் சிறிதும் சலனமின்றி பார்த்தார்.
♥'இதை தானே நான் கொஞ்ச நாளாய் சொல்றேன்' என்பது போல இருந்தது அவரது அந்தப் பார்வை. ஆமாம் அவர் எப்பவோ இந்த முடிவுக்கு வந்து விட்டார். நான் தான் உறவுகளுக்குப் பயந்து வேண்டாம் என்றேன்.
ஆனால் இப்போ இந்தக் குழந்தையைக் கண்டு மனம் பதைக்கிறது.
"என்னங்க ?"
என் கைகளை மெதுவாய் பற்றியவர்.
♥"அதுக்கு நிறைய சட்டவரைமுறைகள் இருக்கு. இரு பார்ப்போம். நான் விசாரித்து வருகிறேன்."
காவல்துறையினரிடம் என் கணவர் என்ன பேசினாரோ எனக்குத் தெரியாது. ஆனால் என் கண்கள் மருத்துவர் அறையின் வாசலிலேயே இருந்தது.
♥மெல்ல குழந்தையைத் தொட்ட எனது கரத்தினைப் பார்த்தேன். அந்தக் கரம் மெதுவாய் என் வயிற்று பகுதியை வருடியது.
♥"அம்மா நான் தான் அம்மா. என்னை விட்டு விடாதே அம்மா. என்னைத் தூக்கி கிட்டு போ அம்மா"
எங்கிருந்து இந்தக் குரல் வருகிறது. என் கணவர் தோளில் தட்டி என்னைக் கூப்பிட்டார்.
"வா. நம்ம நம்பர் வந்துடுச்சி."
"என்னங்க என்ன சொன்னாங்க"
"மருத்துவரைப் பார்த்துட்டு வந்து சொல்றேன்."
♥உள்ளே சென்ற நான் மருத்துவரிடம் " தலைவலி, உடம்பு கொஞ்சம் சோர்வாய் இருக்கு." என்றேன். நான் இங்கு வந்த நோக்கமே மறந்து போனேன். நினைவில் முழுதாய் நிறைந்து போனது அந்த மழலை.
அவரும் சோதித்து மருந்து எழுதி கொடுத்தார்.
" என்னங்க என்ன ஆச்சி. சொல்லுங்க. குழந்தையை நம்மகிட்ட கொடுப்பாங்களா?” நான் கேட்டேன்.
♥“குழந்தையைப் பிள்ளைகள் பராமரிப்பு காப்பகத்தில் விடுவாங்கலாம். நம்மை சட்ட முறைப்படி தத்து எடுத்துக்கச் சொன்னாங்க" என்றவர் தொடர்ந்து..
" ஆனால்...... நீ எப்படி? இதுக்கு உன்னை ... " என் கணவரின் இந்த வார்த்தை திணரலை அறிந்து கொண்ட நான்..
♥" இனி யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்ல.. இது தான் என் குழந்தை. உங்க அம்மாவைச் சமாளிக்க வேண்டியது உங்க பொறுப்பு."
ஆவேசத்துடன் கூறிய என்னை ஒரு சிலர் திரும்பியும் பார்த்தனர். என் கணவர் என் கரம் பற்றி மெதுவாய் தலையசைத்தார். என் மாமியாரும் இதற்கு சம்மதிப்பார் என்று என் மனம் சொல்லியது.
♥“குழந்தையைப் பார்த்துட்டு போலாமா?” என்றேன். மருத்துவர் ஒருவரின் அனுமதியோடு குழந்தைகள் பிரிவில் இருந்த அந்தக் குழந்தையைப் பார்க்கப் போனோம்.
♥அங்கே அந்தத் துப்புறவு பணி அம்மா இருந்தார்.
" நீங்க தான் குழந்தையை வளர்க்க போறீங்களா. புண்ணியவதிமா நீ " என்றார்.
♥‘புண்ணியவதி நான் இல்ல. என்னை அம்மாக்கிய அந்தக் குழந்தைதான்.’ மனது லேசானது. வயிற்றில் ஏதோ ஓர் உணர்வு. தெரியும் இது வீட்டுக்குத் தூரமாகும் போது வரும் உணர்வு. ஒவ்வொரு மாதமும் வலி கொடுக்கும் இந்த உணர்வு இன்று இதமானது
♥கைகளில் அள்ளி அணைத்துத் கொண்டேன் அந்தக் குழந்தையை..... இல்லை இல்லை எங்கள் குழந்தையின் உச்சி முகர்ந்தேன். வாழ்வின் விடியல் நீ எனக்கு.
0 Comments
Thank you