♥தூண்டில் புழுக்கள்
சந்தர் சுப்ரமணியன்
♥அன்று எண்ணெய்க் கடையை இரவு எட்டு மணிக்கே சாத்திவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார் நல்லமுத்து. வரும்போதே ஐயங்கார் பேக்கரி அல்வா அரை கிலோ பாக்கெட் வேறு.
""என்னங்க இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க? உடம்பு ஏதும் சரியில்லையா என்ன?'' என்ற மனைவி பாகீரதியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கையில் இருந்த அல்வா பாக்கெட்டை பாகீரதியிடம் கொடுத்தார்.
♥பாக்கெட் மேல் இருந்த ஐயங்கார் பேக்கரியின் பெயரைப் பார்த்த பாகீரதி, ""என்ன பேக்கரியிலிருந்து வேற ஏதோ வாங்கி வந்திருக்கீங்க?''
""ஒன்னுமில்லே பாகீ. சும்மாத்தான். குழந்தைகளைக் கூப்பிட்டு கொடு'' என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தார் நல்லமுத்து.
""சும்மாத்தான்'' என்று சொல்லிவிட்டாலும், அது ""சும்மா இல்லை'' என்பது நல்லமுத்துவுக்கு மட்டுமே தெரியும்.
♥எத்தனை நாட்களுக்குத்தான் எண்ணெய்ப் பிசுக்குடன் அதே கடையில் பொழுதை ஓட்டுவது? அலுத்துப்போய் விட்ட நல்லமுத்துவுக்கு இது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருந்தது. இன்னும் கையில் பிசுக்கு போகவில்லை. குளியலறையில் வைத்திருந்த சிகைக்காய்த் தூளை எடுத்து, கையை நன்றாக கழுவினார். ""சனியன், இதைச் சீக்கிரம் விட்டொழிக்கணும். தொழிலா இது? நாள்பூரா ஒரே பிசுக்கு, நாத்தம்.'' கழுவிய கையை முகர்ந்து பார்த்து எண்ணெய் வாசனை சென்றுவிட்டதை உறுதிசெய்துகொண்டு கையிலிருந்த துணியால் துடைத்துக் கொண்டார்.
♥""இன்னும் டிபன் ரெடி பண்ணலே. நீங்க இவ்ளோ சீக்கிரமாக வருவீங்கன்னு தெரியாது. இதோ பத்து நிமிஷத்துலே ரெடி ஆயிடும்'' பாகீரதி சமையலறையிலிருந்து சொல்வது நல்லமுத்துவுக்குக் கேட்டது. பிள்ளைகள், கார்த்திக்கும் வீணாவும் தான் வாங்கி வந்த அல்வாவை ருசி பார்த்துக் கொண்டிருந்தனர். சோபாவில் அமர்ந்து அருகே இருந்த ரிமோட்டால் டிவியை ஆன் செய்தார். அவருக்கு ஏதோ வித்தியாசமாக இருந்தது. இவ்வளவு சீக்கிரம் அவர் டிவியின் முன்னர் உட்கார்ந்தது கிடையாது. டிவியில் ஏதோ ஓட ஆரம்பித்தாலும், அன்று நடந்த நிகழ்ச்சிகள் அவர் கண்முன் விரிந்தன.
♥இன்று ஒன்றும் முதல்முறையில்லை அது. இதுவரை நான்குமுறைகள் செய்துள்ளார்; இது ஐந்தாவது முறை. என்றாலும் இம்முறைதான் பெரிய வெற்றியை அடைந்ததாக நல்லமுத்து எண்ணினார். சீக்குப்பிடித்த எண்ணெய்யை வாங்கி வைத்துக்கொண்டு, லிட்டருக்குப் பத்து ரூபாய் லாபம் வர, நாளெல்லாம் கடையில் மன்றாடுவதை மட்டுமே தெரிந்து வைத்திருந்த நல்லமுத்துவுக்கு, ஒரே நாளில் ஒரு லட்சம் சம்பாதிப்பது என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
♥""எல்லாம் கான்டேக்ட்ஸ் தான் சார் இன்னிக்கி. கான்டேக்ட்ஸ் இல்லேன்னா, கடையைத் தொறந்து வச்சிக்கிட்டு நாளெல்லாம் உட்கார்ந்து கெடக்கணும்'' அந்த ராஜதுரை இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொன்னது நல்லமுத்துவுக்கு இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. ""காசு இருந்தா மட்டும் பெரிய ஆளு இல்லே சார்; கான்டேக்ட்ஸ் இருக்கணும். அப்பப் பாருங்க! நாம வேற லெவல்தான்!'' என்று அவர் இன்று காலை மீண்டும் அதையே வேறுவிதத்தில் சொன்னதும் நினைவுக்கு வந்து போனது நல்லமுத்துவுக்கு.
♥""இது தப்பான காரியம் இல்லையா ராஜதுரை?'' என்ற நல்லமுத்து கேட்டபோது ராஜதுரையின் முகம் கோபம் அடைந்ததைப் பார்க்க முடிந்தது.
""ஏன் சார் நீங்க வீடு, மனை ஷேர் இப்படி எதையுமே வாங்கி வித்தது கெடையாதா? இது மட்டும் தப்பா இருந்தா வீட்டுக்கும், மனைக்கும் என்ன சொல்லுவீங்க?'' என்ற ராஜதுரையின் கேள்விக்கு நல்லமுத்து மெளனத்தையே பதிலாகத் தந்தார்.
♥""பொருளோட மதிப்பு எப்பவுமே உசந்துகிட்டேதான் போவும் சார். உலகத்துலே எந்த பொருள் விலை கம்மியா போவுது சொல்லுங்க சார்?'' என்று பொருளாதாரத் தத்துவத்தை நல்லமுத்துவுக்கு ராஜதுரை பலமுறை விவரித்துள்ளார்.
♥""பாருங்களேன். நேத்து டைலர் கடையிலே தூக்கிப்போட்ட கந்தல் இப்போ உங்க கடையிலே எண்ணெய் தொடைக்க உதவுது. அங்க அது கந்தல், இங்க அதன் மதிப்பு வேற. பார்பர் ஷாப்லே வெட்டித் தள்ளிய முடியும் அதே போலத்தான். அப்படித்தான்சார் எந்தப் பொருளுக்கும். வாங்கறவங்க எப்படி அதைப் பார்க்கறாங்க அப்படீங்கறதுலதான் அதன் மதிப்பே இருக்கு'' ராஜதுரை சொல்வதும் சரியாகத்தான் பட்டது நல்லமுத்துவுக்கு.
♥ஓவியங்கள் பல இலட்சம் ரூபாய்க்கு விலைக்குப் போவதை அவர் செய்தித்தாள்களில் படித்துள்ளார். ""அந்த ஓவியங்களுக்கு ஏன் அத்தனை விலை?' என்று அவர் பலமுறை நினைத்ததும் உண்டு.
காலை ராஜதுரை தொலைபேசியில் அழைத்து அந்தச் செய்தியைச் சொன்ன போது நல்லமுத்துவுக்கு சற்று பயமாகவும் வியப்பாகவுமே இருந்தது. உடனே நல்லமுத்து ஒத்துக்கொள்ளாததால், அரைமணி நேரம் கழித்துத் திரும்பவும் அழைப்பதாகக் கூறினார் ராஜதுரை.
♥அந்த அரைமணி நேரத்தில் நல்லமுத்து ""ஆம்', ""இல்லை' என்ற இரு துருவங்களுக்கு இடையே இங்குமங்குமாக ஓர் ஆயிரம் முறையாவது பந்தாடப்பட்டு இருப்பார்.
அவ்வளவு எளிதான தீர்மானம் இல்லை அது. அதன் விலை ஐந்து லட்சம். தொலைபேசியில் பேசும் போது ராஜதுரை, ஏதோ மூலிகை வேரும் ஓலைச்சுவடிக்கட்டும் என்றார். அந்தச் சுவடியில் இரும்பைத் தங்கமாக்கும் மந்திரம் உள்ளது என்றும் அதை அந்த மூலிகைவேரின் மூலமாகத்தான் செய்ய இயலும் என்றும் கூறினார்.
♥சுவடிக்கட்டில் கடைசி இரண்டு சுவடிகள் பாதிக்குமேல் செல்லரித்துப்போனதால், அதன் பொருளை முழுமையாகப் பெற முடியவில்லை. இருந்தாலும் அந்தக் கட்டின் இன்னொரு பிரதி உலவிவருவதாகவும், அது கிடைத்தால் இந்த பொன்னாக்கும் மந்திரம் சாத்தியமாகும் என்றும் ராஜதுரை கூறினார். இதில் தனக்கு என்ன பயன் என்று நல்லமுத்து வினவியபோது, இதன் விலை ஐந்து இலட்சம் என்றும் இதை வாங்குவதற்காக இன்னொரு பார்ட்டி இருப்பதாகவும் கூறினார்.
♥இன்னமும் நல்லமுத்துவுக்கு புலப்படவில்லை. இன்னொரு பார்ட்டி இருந்தால் அவர்களிடம் நேரடியாக விற்றுவிடலாமே, தானெதற்கு?
இந்தக் கேள்வியை நல்லமுத்து கேட்பதற்கு முன்னரே ராஜதுரை பதிலளித்தார். ""சார் நான் நேரடியா அந்தப் பார்ட்டிக்கே விற்றால் எனக்கு ஒரு கமிஷன் தான் கிடைக்கும். இப்படி மாற்றி விற்றால், இரண்டு கமிஷன் கிடைக்கும். அப்புறமும் நீங்களும் கொஞ்சம் காசு பார்க்கலாம் இல்லையா சார்?'' இதைக் கேட்ட நல்லமுத்து சற்றே அதிர்ந்தார். "
♥"என்ன ராஜதுரை! என்னை பகடையாக யூஸ் பண்றீங்க போலிருக்கே?'' என்றார்.
""இல்லே சார். எனக்கும் இரண்டு குழந்தைங்க இருக்கு. ஊர்லேயே விட்டுட்டு வந்திருக்கேன். என்கிட்ட பணமில்லே. இப்படி உங்களைப் போல பணம் இருக்கற நல்லவங்ககிட்ட கொஞ்சம் பழகறதாலே ஏதோ வாரத்துக்கு ஐஞ்சு, பத்துன்னு காசு பார்க்கறேன். அவ்ளோதான் சார். உங்களோட இரண்டு மாசமாகப் பழகி இருக்கறதாலே வெளிப்படையா சொன்னேன். நீங்க யோசிங்க. நான் இன்னும் அரை மணிலே கால் பண்றேன். நீங்க இல்லேன்னு சொன்னா வேற யாராச்சும் ரெடி பண்ணி ஆகணும். இருந்தாலும் பாருங்க தானா லட்சுமி வருவதை வேணாங்கறீங்க'' என்று
சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டார்.
♥இதற்கு முன்னர் நான்கு முறை அவரிடமிருந்து நான்கு பொருள்களை வாங்கிப் பின்னர் அவர் சொல்லிய ஆட்களுக்கே இரண்டு வாரங்களுக்குள் கொடுத்திருக்கிறார் நல்லமுத்து. முதல்முறை ஒரு புராதன குறுவாள்; பின்னர் இருமுறை பூஜைப்பொருள்கள், நான்காவது முறை சிவப்பு நிறக்கல்லில் செய்யப்பட்ட சிறியலிங்கம். பெரிதாக வரவு இல்லையென்றாலும், முதலும் ஒன்றும் பெரிதாக இல்லை. ராஜதுரை சொன்னதுபோல் விற்றும் கொடுத்திருக்கிறார். வாங்குவதற்கும்,
விற்றுக் கொடுப்பதற்கும் தன்னுடைய பங்கையும் பெற்றுகொண்டிருக்கிறார்.
♥இரண்டு முறை ராஜதுரை தங்கியிருக்கும் வீட்டிற்கே சென்றும் வந்துள்ளார். என்றாலும் இந்தமுறை தொகை ஐந்து லட்சம் ஆயிற்றே! அவ்வளவு கையில் இருப்பும் இல்லை. சட்டென்று நல்லமுத்துவுக்கு நினைவுக்கு வந்தது. டிஸ்ட்ரிபியூட்டருக்கு கொடுக்க வங்கியில் வைத்திருந்த மூன்று லட்சம். இன்னும் இரண்டு லட்சம்? வங்கி மேனேஜருக்குத் தொலைபேசியில் பேசினார் நல்லமுத்து. ""சார் ஒரு இரண்டு லட்சம் ஓவர் டிராப்ட்டில் வேணும் இன்னக்கி கிடைக்குமா?''
மறுமுனையில் மானேஜர், ""கொஞ்சம் இருங்க, உங்க கிரிடிட் லிமிட் பார்த்துட்டு சொல்றேன்'' என்று இணைப்பைத் துண்டிக்காமல் மெளனமானார். அந்த ஒரு நிமிடம் ஒரு யுகமானது நல்லமுத்துவுக்கும். ""சார்! கெடைக்கும் சார் லிமிட்டுக்கு உள்ளதான் இருக்கு'' என்றார் மேனேஜர்.
♥எல்லாம் ஐந்நூறு கட்டுகளாக வாங்கிக்கொண்டு, வங்கியின் வெளியே நின்றுகொண்டிருந்த ராஜதுரையின் ஆல்டோ காரில் உட்கார்வதற்குள் வேர்த்துவிட்டது நல்லமுத்துவுக்கு. ""என்ன சார்? எல்லாம் சரிதானே?'' என்று விசாரித்தார் ராஜதுரை. எல்லாம் சரியென்பது போல தலையாட்டியபடி காருக்குள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார் நல்லமுத்து.
♥""இதுக்கு ரசவாதம்னு பேர் சார். சித்தருங்க கண்டுபிடிச்சது. அது இன்னும் அப்படியே ரகசியமா இருக்கு. நம்மாள முடியுமானா அதெல்லாம் முடியாது. ஆனா இதுக்கு விலை இருக்கு சார்'' என்று வாங்கப்போகும் அந்த வேர் குறித்து சிலாகித்தபடி ராஜதுரை காரை ஓட்டிக்கொண்டிருந்தார்.
""என்னங்க! டிவி பார்க்கறீங்களா இல்லே, கண்ணைத் தொறந்துட்டே தூங்கறீங்களா? எத்தனை தரம் கூப்பிடறது?'' பாகீரதி, தோளை உலுக்கியபின்னர்தான் நல்லமுத்து மீண்டும் நனவுக்கு வந்தார்.
"
♥"இல்லேம்மா! ஏதோ நெனச்சிட்டு இருந்தேன். சாப்பாடு பசங்களுக்குக் கொடுத்திட்டியா?'' என்றவாறு எதிரே வைக்கப்பட்டிருந்த தட்டை எடுத்து உண்ண ஆரம்பித்தார்.
மீண்டும் நினைவுகள் அவரைத் துரத்த ஆரம்பித்தன.
ஐந்து லட்சம் கைமாறியபிறகு அவரிடம் ஒரு கோணிப்பை போன்ற பொக்கிஷ முடிச்சு கொடுக்கப்பட்டது. காரில் இருந்தபடியே அவர் அந்த முடிச்சை ஜாக்கிரதையாக அவிழ்த்து உள்ளே இருந்த பொருள்களைச் சரிபார்த்தார். ராஜதுரை கூறியது போலவே, ஏதோ மூலிகைவேர் முடிச்சும், கூடவே ஒரு சுவடிக்கட்டும் இருந்தன.
♥""பத்திரம் சார். சுவடி ஒடிஞ்சிடப்போவுது!'' என்ற ராஜதுரையின் அறிவிப்பை ஏற்று, அந்தப் பொக்கிஷப்பையை மீண்டும் முன் இருந்ததுபோலவே கட்டிவைத்த படியே, ""ராஜதுரை, நீங்கள் சொன்ன அந்த ஆளு இன்னிக்கே இதை வாங்கிக்குவாரா?'' என்றார்.
""ஏன் சார்? பயப்படாதீங்க. நான் இருக்கேன் இல்லே. சரி இப்பவே கால் பண்ணிப் பார்க்கறேன்'' என்று
சொல்லிவிட்டு, காரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு தொலைபேசியுடன் இறங்கி சற்று தொலைவு சென்று யாருடனோ பேச ஆரம்பித்தார்.
♥நல்லமுத்துவுக்கோ தன் கையிலிருந்து போன ஐந்து லட்சத்திலேயே மனம் இருந்தது. சீக்கிரம் அந்த ஐந்து லட்சம் கைக்கு வந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, ராஜதுரை வண்டியில் ஏறியவாறே, ""உங்க லக்கு சார். பார்ட்டி இப்பவே வாங்கிக் கிறாராம். இப்பவே போவமா? சொல்லுங்க'' என்றார்.
""போலாமே! இன்னிக்கே வேலை முடிஞ்சா சரிதான். ஆனா எவ்வளவு மேல வச்சிக் கேட்கணும்?''
♥""இன்னும் ரெண்டு மூனு பார்ட்டி பார்த்து வித்தோம்னா கொஞ்சம் ஜாஸ்தியா கேட்கலாம். இன்னிக்கேன்னா கொஞ்சம் குறைவாத்தான் கெடைக்கும். ஒரு லட்சம் அதிகம் வந்தா போதுமா?''
""ஒரு லட்சமா?' என்று நல்லமுத்து நினைத்த வண்ணம், ""போதும் போதும். கைக்கு காசு வேண்டும் எனக்கு''
""என் கமிஷனை மறந்துடாதீங்க சார். அதுக்காகத்தான் ஊர்வுட்டு ஊர் வந்து இந்த பொழப்ப நடத்திக்கிட்டு இருக்கேன்''
♥""லட்சம் கிடைச்சா ஜாஸ்தியாவே தரேன்'' என்ற நல்லமுத்துவை பார்த்துவிட்டு ராஜதுரை வண்டியை ஓட்ட ஆரம்பித்தார்.
அடுத்த அரை மணி நேரத்தில் நல்லமுத்துவின் கையில் கமிஷனெல்லாம் போக ஆறு லட்சம் இருந்தது. மீண்டும் ஐநூறு ரூபாய்க் கட்டுகள். வங்கியின் வாசலில் இறங்கி பணத்தை உடனே தன்னுடைய கணக்கில் கட்டிவிட்டுக் கடைக்குத் திரும்பினார் நல்லமுத்து.
"
♥"இந்தாங்க இன்னொரு தோசை வச்சிக்கங்க'' என்ற பாகீரதியின் குரல் மீண்டும் நல்லமுத்துவை வீட்டுக்குள் வரவழைத்தது.
அன்று இரவு முழுதும் தூக்கம் இல்லை நல்லமுத்துவுக்கு. ஏதோ ஒன்று அவரை அரித்துத் தின்றது. இருந்தாலும் விதங்காணாப் பரவசத்தை அவர் உணர்ந்தார். பணத்திற்கு இத்தனை வலிமையா? மனிதனின் நிலையை அரை மணிக்குள் எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது!
♥இந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு வாரங்களுக்கு ராஜதுரை அவரைத் தொடர்பு கொள்ளவில்லை. மூன்றாம் வாரம் நல்லமுத்துவே ராஜதுரையை, தொலைபேசியின் மூலம் அழைத்தார். எடுக்கவில்லை. ""எங்கேயாவது போயிருப்பாரோ?' அன்று முழுவதும் நாலைந்து முறை அழைத்தும் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.
அடுத்த வாரம் ராஜதுரையே அழைத்து, ""என்ன சார்? போன வாரம் நாலைஞ்சி முறை கால் பண்ணியிருக்கீங்க போலிருக்கே. நான் மும்பையிலே இருக்கேன்"" என்றார்.
♥ ""ஒன்னுமில்லை. சும்மாத்தான் கூப்ட்டேன். நீங்க ஊருக்கு வந்ததும் கால் பண்ணுங்க"" என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தார் நல்லமுத்து.
தொடர்ந்து எண்ணெய் வியாபாரத்தில் மூழ்கிப்போன நல்லமுத்துவுக்கு ஒருநாள் திடீரென்று ராஜகுருவிடமிருந்து அழைப்பு.
""சார் எப்படி இருக்கீங்க? ஃபிரியாத்தானே இருக்கீங்க? மீட் பண்ணுவோமா எங்கேயாவது அரை மணி நேரம்? போன்லே வேணாம்னு பார்க்கறேன்''
♥""இன்னும் இரண்டு மணி நேரம் வேலையிருக்கு. மாலை ஐந்து மணிக்கு பார்ப்போமா?''
""சரி சார். நானே வந்து அழைச்சிட்டுப் போறேன்'' என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் ராஜதுரை.
மாலை ராஜதுரை வந்து நல்லமுத்துவை, ஊருக்கு வெளியே உள்ள ஓர் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
""சொல்லுங்க ராஜதுரை. ஏதோ சொல்லனும்னு சொன்னீங்க''
""ஆமாம் சார் நான் மும்பை அதுக்காகத்தான் போயிருந்தேன். இது கொஞ்சம் பெரிய மேட்டர் சார். வாங்க ஆள் ரெடியா இருக்கான்; கொடுக்கவும் ரெடியா இருக்கான். முன்ன செஞ்சது மாதிரி நடுவுலே ஒரு மாத்து மாத்தினா கைலே காசு தேறும். அதான் உங்ககிட்டே பேசலாம்னு வந்தேன்''
♥நல்லமுத்துவுக்கு திடீரென பயம் கலந்த ஆச்சரிய உணர்வு. ""சொல்லுங்க ராஜதுரை'' என்று தன்னுடைய ஆர்வத்தையும் பயத்தையும் ஒருசேர மறைத்தவண்ணம் கேட்டார்.
""விஷயம் கொஞ்சம் சீக்ரெட் சார். நாம இதுலே இறங்கறமோ இல்லியோ, இந்த சீக்ரெட் வெளிய போகக்
கூடாது'' என்று முகஸ்துதி பாடினார் ராஜதுரை.
""போகாது. சொல்லுங்க''
""நம்மஊர் கோயில் தெரியுமா? போயிருக்கீங்களா?''
""உம். நிறைய தரம் போயிருக்கேனே. என்ன அதுக்கு?''
""அங்க இருபது வருஷத்துக்கு முன்னே மூலவர் கெடையாது, பூஜை ஏதும் கெடையாது. தெரியுங்களா உங்களுக்கு?''
♥""தெரியுமே. அதுக்கு முன்னமே நான் நிறையதரம் கோயில் போய் பார்த்திருக்கேனே''
""அந்தக் கர்ப்பக்கிரகத்துலே ஒரு நிலவறை இருக்கும். கோயிலைச் சுத்தம் பண்ணி புதுசா மூலவரை அங்க வைக்கும்போது, அந்த நிலவறையிலே ஒரு சின்ன அம்மன் சிலை இருந்ததைக் கண்டுபிடிச்சாங்க. ஆனா அந்த சிலை அப்பவே கவர்ன்மெண்ட் கிட்ட போகாம கை மாறிடிச்சி''
♥""என்ன சொல்றீங்க ராஜதுரை? இதுலே நாம என்ன செய்யப் போறோம்''
""அதான் சார். இப்போ அந்த அம்மன் சிலை மார்க்கெட்டுக்கு வந்திருக்கு. இதை எப்படியோ தெரிஞ்சிகிட்டு ஒரு மும்பை பார்ட்டி என் பிரண்டு மூலமா என்னை காண்டேக்ட் பண்ணாங்க. நீங்க ஹெல்ப் பண்ணிங்கன்னா, சுளையா கொஞ்சம் காசு பார்க்கலாம். சொல்லுங்க சார்''
""தெய்வக்குத்தம் ஆகுமே ராஜதுரை''
""சார். நான் எத்தனை முறை சொல்லியிருக்கேன். நிலம் வாங்கி விக்கற மாதிரிதான் இதெல்லாம்.
♥முன்னே செஞ்சது மாதிரி ஒரே நாள்ளே வாங்கி கொடுத்திடுவோம். ரெண்டு சைட்லேயும் பார்ட்டி ரெடியா இருக்காங்க''
♥""என்னமோ எனக்கு மனசு வேணாங்குது ராஜதுரை. தவிர விலை எவ்ளோ? ஒரு நாலஞ்சி லட்சம் போகுமா?''
ஒரு மெல்லிய சிரிப்புடன் ராஜதுரை பதில் கூறலானார்: ""சார், இது சோழர் காலச் சிலை. ரொம்ப அபூர்வ
மான அம்மன் சிலை. இரண்டு அடிதான் உயரம். இருந்தாலும் இன்னிக்கி ரேட்டுக்கு கோடி போவும். ஆனா நாம வாங்கப்போற விலை 50 லட்சம், விக்கப்போற விலை 1 கோடி''
கோடி என்ற வார்த்தையைக் கேட்டதும் நல்லமுத்து, ""கோடியா? அதெல்லாம் நமக்கு ஆகாது ராஜதுரை. கௌம்புவோம். அதுவும் சாமி சிலை வேற. வம்பே வேணாம்'' என்று கூறிய வண்ணம் எழுந்தே விட்டார்.
♥அதற்குமேலும் ராஜதுரை பேச்சை வளர்க்கவில்லை என்றாலும், காரில் மீண்டும் அவரது கடையில் விட்டுச்செல்லும்போது, ""நல்லா யோசிங்க சார். இந்த மாதிரி எல்லாருக்கும் கெடைக்காது. வாங்கற பார்ட்டியும் ரெடியா இருக்கு. நீங்க வேணாம்னா நான் அந்த பார்ட்டியையே கூட்டிட்டு வந்து முடிச்சிடுவேன். நீங்க ஹெல்ப் பண்ணீங்கன்னா ரெண்டு பேருமே கொஞ்சம் காசு பார்க்கலாம். உங்களுக்கு இதுலே என்ன சார் ரிஸ்க்? ஒரு நாளைக்கி உங்க பைசாவ சர்க்குலேட் பண்ணப் போறீங்க, அவ்வளவுதானே?'' என்று நல்லமுத்து விடம் மெல்லிய குரலில் சொல்லிவிட்டுத்தான் காரின் கதவைத் திறந்தார். பலமாக வேண்டாம் என்று தலை ஆட்டிவிட்டு, விட்டால் போதும் என்று காரிலிருந்து இறங்கினார் நல்லமுத்து.
♥மூன்று நாட்கள் ஆகியும் ராஜதுரையின் ""நாமளும் காசு கொஞ்சம் பார்ப்போம் சார்"" என்ற வார்த்தைகளை நல்லமுத்துவைத் துளைத்துக்கொண்டே இருந்தன. ""சே! என்னடாயிது! விடவும் மாட்டேங்குது! செய்யவும் முடியாது!' என்று தன்னையே நொந்துகொண்டார் நல்லமுத்து. ""ஒருவேளை ராஜதுரை தன்னை அதில் இழுக்காது நேரடியாக அந்த மும்பை பார்ட்டியையே வாங்கச் செய்துவிட்டால்?' இப்படிவேறு அவர் எண்ணத்தில் அவ்வப்போது அலாரம் அடித்தது. ""50 லட்சம் எங்க போறது? ஐஞ்சி லட்சத்துக்கு மேலே ஒரு பைசா தேறாது' இப்படியாக சில சுய பச்சாதாப எண்ணங்கள் வேறு. ""சே! ஒரு நாள்... ஒரு நாள் கையில் 50 லட்சம் தேவை. ராஜதுரை சொன்னதுபோல் ஒரு நாள் சர்க்குலேட் பண்ணனும், அவ்வளவுதான். நம்பளை நம்பி எவன் 50 லட்சம் தருவான்? அதுவும் கேஷா?''
♥எண்ணுபவர்க்கே பாதைகள் தெரியும் என்பார்களே அதுபோல நல்லமுத்து மேலும் மேலும் யோசிக்க இறுதியாக தன்னுடைய வீட்டையும் கடையையும், சேட்டுக்கடையில் அடமானம் வைத்தால் 50 இலட்சம் தேறும் என்ற எண்ணம் தோன்றி அதுவே நிறைவேறியும் விட்டது. இந்தமுறை கையில் உள்ள பெரிய பையில் இருந்த 50 இலட்சம் கனத்தது. அதைவிட அவர் மனத்துக்குள் இன்னும் அதிகமாகவே கனம். தேவையில்லாமல் அவருடைய குழந்தைகளின் முகங்கள் வேறு வந்து வந்து போயின. ""ஒன்னுமில்லே சார். இரண்டு மணி நேர சமாசாரம்'' என்று சொல்லிய வண்ணம் ராஜதுரை வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார்.
♥இம்முறையும் பரிமாற்றம் நடக்கும் இடம் ஊரின் வெளியே உள்ளது. கார் சீரான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. ஊர் எல்லையில் உள்ள டோல் கேட்டைத் தாண்டும் நேரம் ராஜதுரையின் தொலைபேசி ஒலித்தது. அதை எடுத்துப் பேசிய ராஜதுரை, வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு, சற்று தூரம் சென்று பேசிக்கொண்டிருந்தார். டோல் கேட்டிலிருந்து நாலைந்து போலீஸ் வண்டிகள் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து திடீரென அங்கே பதட்டம் நிலவியது. கார் கண்ணாடியைக் கீழே இறக்கிவிட்டு, நல்லமுத்து ஒருவரை விசாரித்தார்.
""என்னங்க ஒரே கூச்சலும் குழப்பமுமா இருக்கு?''
♥""என்னமோ ஒரு பாத்திரக்கடையிலிருந்து சிலையைத் திருடிட்டு வந்துட்டாங்களாம்.''
""பாத்திரக்கடையிலா?''
""ஆமாம் சார். அம்மன் சிலை போல. சின்னதுதான்''
""எங்க எங்க? நீங்க பார்த்தீங்களா?''
""பார்த்தேன் சார். ஊர் எல்லையிலே போலீஸ் கண்டு
பிடிச்சிடிச்சி. சிலையை விட்டுட்டு ரெண்டு பேரும் ஓடிட்டாங்களாம். அதுலே ஒருத்தன் லாரிலே அடிபட்டுச் செத்துட்டான்''
சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.
சட்டென்று பொறிதட்டியது நல்லமுத்துவுக்கு.
♥போன் பேசிக்கொண்டு ராஜதுரை நின்று கொண்டிருந்த திசையைப் பார்த்தார். அவரைக் காணோம். நல்லமுத்துவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. தன் பையை எடுத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கினார். ராஜதுரை நின்றிருந்த திசையை மீண்டும் பார்த்தார். கண்ணுக்கெட்டியவரை அவர் இல்லை. நல்லமுத்துவின் உள்மனது எதையோ உணர்த்த, சாலையின் எதிர்புறத்துக்கு வந்து அந்த வழியில் ஓடும் ஆட்டோக்களை நிறுத்த எத்தனித்தார். எந்த ஆட்டோவும் நிற்கவில்லை. கலவரம் நடந்துவிடுமோ என்ற எண்ணத்தில் வாகனங்கள் எல்லாம் பறந்தன. ராஜதுரையின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்ததில் அந்த எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்ற தகவலே வந்தது.
♥வரும் ஆட்டோக்களை, கையை நீட்டி நிறுத்திக்கொண்டிருந்த நல்லமுத்து திடீரென சற்று தூரத்திலிருந்து தன்னை யாரோ அழைப்பதை உணர்ந்தார். ""ஓ!
இவன் நம்ம கடையில் எண்ணெய் டின் எடுத்துவைக்கும் பையன் முத்து இல்லை! இவன் எங்கே இங்கே?' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பையன், தான் நின்று கொண்டிருந்த சின்ன டிரக் வண்டிக்குப் பின்புறத்திலிருந்து அவரை அழைத்து, ""என்ன ஐயா? இங்க எங்க? நம்ம வண்டிதான் வாங்க'' என்றான். வண்டிக்கு அருகே சென்றதும் அந்த வண்டியின் டிரைவர் முகம் தெரிந்தது.
""வாங்க சார். இப்ப எந்த ஆட்டோவும் நிறுத்த மாட்டான். வண்டிலே ஏறிக்குங்க நான் இறக்கி விட்றேன். இங்கே போலீஸ் ஜாஸ்தியா இருக்கு''
என்றார். அந்த வண்டி டிஸ்ரிபியூட்டரோட வண்டிதான். அவருக்கு வரும் சரக்கையெல்லாம் இந்த டிரைவர் தான் கொண்டுவந்து தருவார்.
♥இந்த நேரத்தில் வேறு எந்த உபாயமும் இல்லை என்பதால், நல்லமுத்து சட்டென்று அந்த வண்டியில் ஏறி விட்டார்.
வண்டியில் உட்கார்ந்த பிறகே நல்லமுத்துவுக்கு சற்று நிம்மதி வந்தது. தெளிவும் பிறந்தது. ""பாத்திரக்கடையிலிருந்து திருடு போன அந்தச் சிலையைத்தான் 50 லட்சம் கொடுத்து வாங்குவதற்காகச் சென்றுகொண்டிருந்தோமா? அந்தச் சிலை என்ன 4000 ரூபாய் இருக்குமா?' என்று நினைத்தார் அவர். எங்கேயோ மலையிலிருந்து விழுந்து புரண்டு எழுந்து நடப்பது போன்று இருந்தது நல்லமுத்துவுக்கு.
அடுத்த அரை மணி நேரத்தில் நல்லமுத்துவின் கடைக்கு எதிரில் வண்டி நின்றது. ""இறங்கிக்குங்க சார்"" என்றார் டிரைவர். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்கினார். பிற்பகல் நேரத்து சூரிய வெளிச்சத்தில், எதிரே தனது எண்ணெய்க் கடையின் பெயர்ப்பலகை பளிச்சென்று தெரிந்தது: ""மாரியம்மாள் எண்ணெய்க் கடை'. கடையில் வேலை செய்பவன் வண்டியிலிருந்து இறங்கும் முதலாளியைப் பார்த்துவிட்டு ஓடி வந்தான்.
♥எந்தப் பேச்சும் இல்லாமல் கடைக்குள் சென்று தன்னுடைய கல்லாவில் அமர்ந்தார் நல்லமுத்து. ""தம்பி போய் ஒரு சாத்துக்குடி ஜூஸ் ஐஸ் போடாம வாங்கிட்டு வா'' என்று கடையில் வேலை செய்பவனை அனுப்பிவிட்டு, சேட்டின் நம்பருக்கு டயல் செய்தார்.
""ஹல்லோ கோன் ஹை?''
""சேட்டு! நான் தான் எண்ணெய்க் கடை நல்லமுத்து பேசறேன்''
""ஓ நெல்லமொத்து சார்! கியா ஹோகயா ஆப்கா காம்? வேலை நல்லா ஆயிடிச்சா?''
""இல்லே சேட்டு. அது நடக்காது. அதான் வாங்கின பணத்தைத் திரும்ப தரணும். கடையிலேதானே இருப்பீங்க?''
""கியா சாப்? நம்பள் கிட்டே பணம் வாங்கினா நல்லாத்தானே நடக்கும். இல்லே சொல்றே நீ?''
""நடக்காததும் நல்லதுதான் சேட்டு.
♥கடையிலே இருக்கீங்களா சொல்லுங்க''
""கடையிலே தான் இருக்கான். ஆனா இந்த சேட்டு வட்டி வாங்காம கொடுக்க மாட்டான். நம்பள்கி நிம்பள் ஒரு நாள் வட்டி கொடுக்கறான்''
""சரி. இருங்க இதோ அரை மணி நேரத்தில் வந்து கொடுத்துடறேன்''
தொலைபேசியை வைக்கும்போது ""போகும்போது பேங்கிலிருந்து வட்டிக்குப் பணம் எடுக்கணும். அந்த ஒரு லட்சம் இன்னும் அப்படியே தான் இருக்கும்'' என்று நினைத்துக்கொண்டார் நல்லமுத்து.
சட்டென்று மின்சாரம் நின்றுவிட்டது; கூடவே
சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியும் நின்றுவிட்டது. குப்பென்று, பலவித எண்ணெய்களின் மணம் அவர் மூக்கைத் துளைத்தது. இப்போது அது நாற்றமாகத் தெரியவில்லை நல்லமுத்துவுக்கு.
0 Comments
Thank you