♥மருமகள், குழந்தைகள் உங்கள் மகனின் சொத்து... இன்றைய பெற்றோர்களுக்கு!
♥'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் கிளைமாக்ஸ் பலருக்கும் மறந்திருக்காது. மனம் கசந்து தனிக்குடித்தனம் போக முடிவெடுப்பார், மூத்த மருமகளான நடிகை லட்சுமி, தன் புகுந்த வீட்டாரைப் பார்த்துப் பேசும்போது, ''நீங்க நல்லாயிருக்கீங்களா; நாங்க நல்லா இருக்கிறோமா என்று கேட்டுட்டு தள்ளித் தள்ளியே இருப்போம்' என்பார்.
♥அதன் லேட்டஸ்ட் வெர்ஷன்போல கடந்த ஒரு வாரமாக வாட்ஸப் வைரல் இந்த டிப்ஸ்தான்! அதாவது இந்தக் கால மகன்களையும் மருமகள்களையும் எப்படிக் கையாண்டால் உறவில் கடைசி வரை விரிசல் வராமல் இருக்கும் என்று ஒரு நீதிபதி சொன்னதாக வாட்ஸப்பில் உலா வருகிறது இந்த டிப்ஸ்... முதலில், அந்த நீதிபதி சொன்னதாக வரும் டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள்.
♥மருமகள்
உங்கள் மகன் மற்றும் மருமகளுடன் ஒரு கூரையின்கீழ் வாழ ஆசைப்படாதீர்கள். வாடகை வீடு எடுத்தாவது அவர்களைத் தனியே வையுங்கள். வீட்டையும் அவர்கள் வசதிக்கேற்ப அவர்களையே தேடச் சொல்லுங்கள். அது மகனோ, மகளோ, உங்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் எந்த அளவுக்கு இடைவெளி இருக்கிறதோ, அந்தளவுக்கு உங்களுக்கிடையில் நல்ல உறவு நிலவும்.
♥மருமகளை உங்கள் மகனின் துணையாக மட்டுமே பாருங்கள். உங்கள் மகளாகப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் ஒரு தோழிபோல பார்க்கலாம். உங்கள் மகன் எப்போதும் உங்கள் ஜூனியர்தான். அதற்காக, மருமகளையும் அதே ரேங்கில் பார்க்க வேண்டும் என்பதோ, மகனைத் திட்டுவதுபோல மருமகளைத் திட்டலாம் என்பதோ நிச்சயம் கூடாது. உங்கள் மருமகளைத் திட்டுவதற்கும், அவள் தவறுகளை சரிசெய்வதற்கும் முழு உரிமைப் பெற்றவர், அவளைப் பெற்ற அம்மா மட்டுமே.
♥உங்கள் மருமகளிடம் இருக்கும் குணங்கள் அல்லது விருப்பங்கள் என்பது, உங்கள் மகனுடைய பிரச்னைதானே தவிர உங்களுடையது அல்ல.
♥ஒருவேளை ஒரே வீட்டில் வசித்தாலும், அவர்களின் துணிகளை துவைப்பது, அவர்களுக்கும் சேர்த்துச் சமைப்பது, அவர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். ஆனால், இந்த உதவிகளை உங்கள் மருமகள் கேட்டு, உங்களால் முடியுமென்றால் செய்யுங்கள். அந்த உதவிகளுக்குப் பிரதிபலனாக மருமகளிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
♥மகனுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் சண்டை நடந்தால், கண்ணும் தெரியவில்லை; காதும் கேட்கவில்லை என்று இருங்கள். பொதுவாக, இளம் தம்பதியர் தங்கள் பிரச்னையில் பெரியவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள்.
♥குடும்பம்
உங்கள் பேரப் பிள்ளைகள், உங்கள் மகன் மற்றும் மருமகளுக்கு உடையவர்கள். அவர்கள் பிள்ளையை அவர்கள் எப்படியும் வளர்த்துக்கொள்ளலாம். அது, அவர்கள் பாடு. அவர்கள் வளர்ப்பால் வரும் நன்மையும் தீமையும் அவர்களைச் சார்ந்தது.
♥ உங்கள் மகனின் மனைவி உங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். உங்களுக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. அது, உங்கள் மகனுடைய வேலை மட்டுமே. நீங்கள் உங்கள் மகனைச் சரியான நபராக வளர்த்திருந்தால் மட்டுமே, உங்களுக்கும் உங்கள் மகனுடைய மனைவிக்கும் இடையில் நல்ல உறவு நிலவும்.
♥உங்கள் ஓய்வுக் காலத்தில் உங்கள் மகனைச் சார்ந்திருக்காதீர்கள். ஏனென்றால், உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் வெகுதூரம் கடந்துவிட்டீருப்பீர்கள். ஆனால், உங்கள் பிள்ளைகளோ அப்போதுதான் வாழ்க்கையின் புதுப்புது அனுபவங்களைப் பெற ஆரம்பித்திருப்பார்கள். தவிர, ஓய்வுக் காலத்தை உங்கள் விருப்பப்படி என்ஜாய் செய்யுங்கள். இறப்பதற்கு முன்னால், அத்தனை சந்தோஷங்களையும் அனுபவித்துவிடுங்கள்.
♥பேரப் பிள்ளைகள் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல; அவர்கள், அவர்களுடைய பெற்றோர்களின் விலைமதிப்பில்லாத சொத்து.
♥ஒரு சாக்லேட் விளம்பரத்தில் மருமகளும் மாமியாரும் டான்ஸ் ஆடுவார்கள் இல்லையா? அதுபோல விளம்பரத்தில் மட்டுமே நடக்கும்.
♥'என் மருமகளை மகள்போல பார்த்துக்கொள்கிறேன்' என்பதும், 'மாமியார் என் இன்னோர் அம்மா' எனச் சொல்வதும் இயல்பான விஷயம் கிடையாது. மாமியார்களே... மகனின் மனைவியை மருமகளாக மட்டுமே பாருங்கள். அதேபோல, மருமகள்கள் தங்கள் மாமியார்களுக்கு அத்தைக்கான மரியாதையைக் கொடுங்கள் போதும். அதுதான் இயல்பானது. இப்படி மரியாதையைக் கொடுத்து மரியாதையை வாங்கும் வழக்கம், இனி வரும் காலகட்டங்களில் பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கும் தேவைப்படும்.''
0 Comments
Thank you