#தூர்வாரல்
சித்திரை மாசம் வெயில் - நிசி
நித்திரையில் கூட உடல் பிசுபிசுக்கும்
ஆழக்கிணறுகள் தவிர- மிச்சம்
அனைத்தும் அடிவரை வற்றி ஆட்டம் காணும்
ஆண்டுக்கொருமுறை திருவிழா போல் அப்பா கிணறை
நோண்டித்தூர்வாரல் வழக்கம் - பல
அதிசயங்கள் வெளிவரும்.
பூக்கண்டு, மரவள்ளி, கொய்யா
பாக்கு மரப்பாதை கூட நீர் நிரம்பி வழியும்
அம்மாவின் அதட்டல்கள்
அடிக்கடி வந்து போனாலும்
படி தெரியுதெண்டால் போதும் அடிவிழுந்தாலும் பரவாயில்லை
சேறு அள்ளும் நேரம் இவ்வருடம் நாம் செய்த
பேறு எல்லாம் வெளிய வரும்.
அம்மாவின் கிளிப்பு
அக்காவின் அலிஷ்பாண்ட்
தம்பியின் நீல களுசான்
சின்னப்பந்து, சிவத்தச்சீப்பு
கப்பீஷ், ஏழுகலர் -மலேரியாக்காரர் விட்ட
கறுத்த பெரிய குளத்து மீன்
படிக்கவில்லையென்று அப்பா
பறிச்சு கொட்டிய மாபிள்கள்.
யாசகம் கேட்க வந்த கிழவி
யாருக்கும் தெரியாமல் திருடி சென்றதாய்
வீட்டுவாசல் மிதிக்க வேண்டாமென்று
விரட்டி விட்டோமே அந்த பித்தளைச்செம்பு!
ஆண்டுக்கொருமுறை தூர் வாரினால் போதும் கிணறு.
அடிக்கடி தூர் வார வேண்டியது
நம்மனது.
0 Comments
Thank you