சுகம் மறந்த சுவாசமாய் போனாலும்
மீண்டும் துளிர்க்கும் பண்பாடு சுகமே...
கொரனோவே நீ...!
மலராத மொட்டுக்கும் கூட
முடிவுரைக்கு விண்ணப்பம்
அனுப்பி வைக்கிறாய்.....!
பழுத்துப்போய் தானாக உதிரும்
இலைகளைக் கூட உலுக்கியெடுத்துவிடுகிறாய்....!
சீனாவின் பிள்ளை நீ
நாடு நாடாய் அகதியாய் அலைந்து
கைதியாய் எங்களை வீட்டினுள்
முடக்கி வைக்கிறாய்....!
நிமிடங்களை யுகங்களாக்கி
யுத்தம் செய்கிறாய்.....!
கடைவீதிப் பக்கம் போனால்
விரல் பிடித்து வந்துவிடுவாயோவென
உயிரினில் பீதியை நிரப்புகிறாய்...!
உன் வரவால்
வேரறுக்கப்பட்டன இன்பங்கள்..
உன் பேரைச்சொல்லியே துன்பத்தில்
உருளுது உலகு...!
உனக்கொரு முடிவுக்கு நாள் குறிக்க
முடியாது பதறுகின்றது விஞ்ஞானம்.
ஆதித்தமிழன் பண்பாடு மருத்துவம்
பார் போற்றும் நிலையானது...
மின்னல் வேகத்தில்
உடல் வலித்து உயிர் பருக வரும்
உனக்கு அரிதாரம் பூசுக்கொள்ள
மஞ்சளில் நீராட வைக்கிறது...
உணவே மருந்தாக உண்ட
அந்தநாட்கள் மீண்டும்
மெச்சுதலுக்குரிய நாட்களாய்..
புத்துயிர் பெறுகின்றது...
சுகம் மறந்த சுவாசமாய் போனாலும்
மீண்டும் துளிர்க்கும் பண்பாடு சுகமே....
அன்புடன் ✍
சங்கரி சிவகணேசன்
புத்தூர்
யாழ்ப்பாணம்
0 Comments
Thank you