♥அவள் பிறந்த சில வருடங்களிலேயே அவளது தந்தை இறந்து போனார். ஓரளவு படித்திருந்த தாயார் அதன் பின்பு குடும்ப வருமானத்திற்காக வேலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். அப்போது அவளுக்கு மறுமணம் செய்துவைக்க உறவினர்கள் விரும்பியபோதும், அவள் மறுத்துவிட்டாள்.
♥மகள் வளர்ந்து பள்ளிக்கு செல்லத் தொடங்கிய காலகட்டத்தில் அவள் வேலையில் இருந்து விலகி, சுயதொழில் பயிற்சி பெற்று, புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்தாள். கடுமையாக உழைத்தாள். அது அவளுக்கு மிகுந்த வளர்ச்சியையும், சமூக அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது. தொழில் வேகமெடுத்தாலும் மகளுக்கு அதிக நேரம் ஒதுக்கிய அவள், மகள் மீது அளவற்ற அன்பும் செலுத்தினாள்.
♥மகளுக்கு 13 வயதான நிலையில், தங்கள் எதிர்காலத்திற்கு ஆண் துணை ஒன்று அவசியம் என்ற முடிவுக்கு தாயார் வந்தாள். அவள் விரும்பியது போன்ற அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் அவளை மறுமணம் செய்துகொள்ள முன்வந்தார். அவர் ஏற்கனவே திருமணமாகாதவர்.
♥ஆனால் தாயார் மறுமணம் செய்துகொள்வது மகளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. தனது தாயின் வாழ்க்கைக்குள் இன்னொருவர் வருவதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லை. அதனால் தாயாரிடம், ‘மறுமணம் செய்துகொள்ள வேண்டாம்’ என்று அடம்பிடித்தாள். ஆனால் உறவினர்கள் சிலர் தலையிட்டு, அவளை சமாதானப்படுத்தி, எளிமையாக நடந்த மறுமண நிகழ்வில் அவளையும் பங்குகொள்ளச் செய்தார்கள். புதிய தந்தையான அவர், மகளான அவள் மீது அதிக பாசம்காட்டவே செய்தார்.
♥மறுமணம் நடந்து ஒரு வருடம் கடந்த நிலையில் தாயார் மீண்டும் கர்ப்பமானாள். அவள் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். தனது தம்பியை அவளுக்கு பிடித்திருந்தாலும் தாயும், தந்தையும் அந்த குழந்தை மீது அதிக பாசம்காட்டி பராமரித்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குழந்தையை இருவரும் கொஞ்சுவதை காண சகிக்காமல், தன்னை தனது பாட்டி வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறும்- அங்கிருந்தே படிக்கிறேன் என்றும் சொன்னாள். இறந்துபோன அப்பாவின் அம்மா (பாட்டி) வீட்டிற்கு செல்ல அவள் ஆசைப்பட்டாள். அதற்கு தாயார் சம்மதிக்கவில்லை. அதனால் தாய்- மகள் இடையே மோதல் ஏற்பட்டது.
♥இ்ந்த நெருக்கடியான நேரத்தில்தான் அவள் மோசமான அந்த பொய்யை சொன்னாள். புதிய தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு தருவதாக அவள் பொய் சொன்னாள். அதை கேட்டு தாயார் நிலை குலைந்து போனாள். உடனே, மகள் விரும்பியது போலவே அவளை பாட்டி வீட்டிற்கு அனுப்பிவிட்டாள்.
♥அவள் பாட்டி வீட்டில் தங்கியிருந்து படித்தாள். வருடங்கள் சில கடந்த நிலையில் அங்குள்ள உறவுக்கார இளைஞருடன் அவளுக்கு காதல் ஏற்பட்டது. காதல் எல்லைமீறிய நிலையில் போய்க்கொண்டிருந்தபோது அவர்களை பாட்டி ஒருநாள் கையும் களவுமாக பிடித்து, கண்டித்தார். ‘தவறு நடந்துவிட்டது.. இதை அப்படியே விட்டுவிட முடியாது. அவளை நீதான் திருமணம் செய்துகொள்ளவேண்டும்’ என்று பாட்டி இளைஞனிடம் சொல்ல, அவனோ, ‘இவள் சுத்தமானவள் இல்லை! ஏற்கனவே சொந்த வீட்டிலே கறைபட்டவள். இவளுக்கு எனக்கு மனைவியாகும் தகுதியில்லை. இவளை நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன்..’ என்று அவன் பதில் சொல்ல, அவள் அதை கேட்டு நொறுங்கிப்போய்விட்டாள்.
♥தாய்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாய், அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லவில்லை. முதலில் படித்த பள்ளியில் இருந்து டி.சி.யை வாங்கி, இன்னொரு பள்ளியில் கொண்டு போய் சேர்த்தாள். அங்கு ஆஸ்டலில் தங்கவைத்துவிட்டாள். அடுத்து கல்லூரி படிப்பிலும் அவளுக்கு ஆஸ்டல் வாழ்க்கைதான்.
♥“நான் சொன்ன பொய்யால் பெற்ற தாய் வீட்டிலே எனக்கு இடமில்லாமல் போய்விட்டது. தாயார் மட்டும்தான் ஆஸ்டலுக்கு வந்து என்னை பார்க்கிறார். புதிய தந்தையோ, தம்பியோ என்னை வந்து சந்திப்பதில்லை. நான் கல்லூரி விடுமுறை நாட்களில் யாராவது ஒரு உறவினர் வீட்டிற்கோ அல்லது வெளிநாட்டு சுற்றுலாவுக்கோ அனுப்பப்படுகிறேன். தனிமையில் வேதனையோடு வாழ்கிறேன்..” என்று கண்ணீர் வடிக்கிறாள், அந்த பெண்!
♥ஒரு பொய் எப்படி எல்லாம் பேயாட்டம் ஆடுகிறது பார்த்தீர்களா?!
0 Comments
Thank you