♥உறவுகள்!
♥மின்னொளியில், தங்க கோபுரம் தகதகக்க, மனம் நெகிழ, கையெடுத்து கும்பிட்டார், ராஜவேலு.
''தாத்தா... நீங்க திருப்பதிக்கு நிறைய முறை வந்திருக்கீங்களா...'' என்று கேட்டான், பேரன்.
''ஆமாண்டா செல்லம்.''
''இந்த சாமிய பாக்க மட்டும், ஏன் தாத்தா இவ்வளவு கூட்டம்?''
''மனுஷனுக்கு நிம்மதிய தர்ற ஒரே இடம், கோவில் தானேப்பா. அதுவும், இந்த ஏழுமலையானை, சகலமும் நீதான்னு அடிபணிஞ்சிட்டா, மனசுக்கு நிம்மதியும், நடப்பவற்றை அவன் பாத்துப்பான்னு தெளிவு வரும்,'' என்றார்.
♥முன்னால் நடந்த மகன் பரத், ''அப்பா... சாமி தரிசனம் நல்லபடியா முடிஞ்சது; கடைத்தெருப் பக்கம் ஒரு ரவுண்டு போய்ட்டு வருவோம். உங்க மருமகள், என்னென்னமோ வாங்கணும்ன்னு சொல்றா,'' என்றான்.
''நான் வரலப்பா... இப்படி படிக்கட்டில் உட்காந்து, எதிரே தெரியுற கோபுரத்த, தரிசனம் செய்துட்டு இருக்கேன்; நீங்க போய்ட்டு வாங்க,'' என்றார்.
''சரிப்பா... பத்திரமா உட்காந்திருங்க; நாங்க ஒரு மணி நேரத்தில் வந்துடுறோம்.''
பேரனின் கை பிடித்தபடி, மகனும், மருமகளும் போக, 'பெருமாளே, ஏழுமலைவாசா...' என்றபடி, படிக்கட்டில் கை ஊன்றி, உட்கார்ந்தார்.
♥கோபுரத்துக்கு முன், பல தரப்பட்ட மக்கள், கையில் லட்டு பிரசாத பையுடன் போனபடியும், வந்தபடியும் இருக்க, எதிரில் இருந்த நீண்ட படிக்கட்டில், இவரை போல் நிறைய பேர் உட்கார்ந்திருந்தனர்.
அவருக்கு முன் உள்ள படியில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன், மொபைல் போனில் பேசியபடி இருந்தான்.
அருகில் இருந்ததால், அவன் பேசியது, அவருக்கு தெளிவாக கேட்டது.
''அமுதா... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல; நீ இல்லாத வாழ்க்கைய, நினைச்சு கூட பாக்க முடியல. புரியுது... உன்னை சங்கடப்படுத்த விரும்பல. இனி, இப்படி பேசி, உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.
♥இதுவே, நான் உன்கிட்டே பேசுற கடைசிப் பேச்சு. நீ நல்லா இரு; உன் திருமணத்துக்கு, 'அட்வான்ஸ்' வாழ்த்துகள்; பை, வச்சுடறேன்.''
மொபைல் போனை சட்டை பையில் வைத்தவன், முழங்காலை கட்டி, முகத்தை நுழைத்து, முதுகு குலுங்க அழுவது, தெரிந்தது; ஐந்து நிமிடம், அவன் அழுகை நிற்கவில்லை.
மெல்ல, அவன் தோள் மீது கை வைத்து, ''என்னப்பா பிரச்னை... இப்படி மனசு வருந்த அழறியே... முன்பின் அறிமுகம் இல்லாதவன் தான் நான்... இருந்தாலும், மனசு கேட்கலை,'' என்றார் கனிவாக!
♥அவர் ஸ்பரிசத்தில் தெரிந்த அன்பு, குரலில் இழையோடிய பாசத்தில், கண்ணீருடன் நிமிர்ந்தவன், அவர் கையைப் பிடித்து, ''என்னை விட்டு எல்லாமே போச்சுங்க ஐயா... எனக்குன்னு யாருமில்ல; நான் அனாதை; காப்பகத்தில் வளர்ந்தவன். படிச்சு, ஒரு கம்பெனியில வேலையில் இருக்கேன். அன்புக்காக ஏங்கின எனக்கு, வரமா என் அமுதா கிடைச்சா. ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் உயிராக நேசிச்சோம்; ரெண்டு வருஷ காதல்; கனவாக முடிஞ்சுப் போச்சு. அமுதாவின் வீட்டுல எங்க காதலை ஏத்துக்கல.
♥''அனாதையான என்னை, அவங்க நிராகரிச்சுட்டாங்க. அவளாவது நல்லபடியா வாழட்டும்ன்னு, நான் ஒதுங்கிட்டேன். ஆனா, எனக்கு இந்த உலகத்தில் வாழவே பிடிக்கல. அதான், கடைசியாக என்னை படைச்ச அந்த ஆண்டவனை, தரிசனம் செய்துட்டு போக வந்தேன்,'' என்றான், உடைந்த குரலில்!
''உன் நிலைம எனக்கு புரியுது; ஆனா, அந்த அமுதாவை விட்டா, உலகமே இல்லன்னு நீ நினைக்கிறது தப்பு. உன்னை பெத்தவங்க, உன்னை, இந்த உலகத்துக்கு அடையாளப்படுத்தாம போயிட்டாங்கப்பா; உன் மனசில் அன்பை விதைச்சவ, அறுவடை செய்யாம போயிட்டா.
♥அதுக்காக நீ உடைஞ்சு போயிட கூடாது. உன்னால் ஒரு அன்பான உலகத்தை உருவாக்க முடியும். கடவுள், உனக்கான ஒருத்திய நிச்சயம் படைச்சிருப்பாரு. உன்னை பெத்தவங்க செய்யாததை எல்லாம் நீ செய்யலாம். உன் மகனை, இந்த உலகுக்கு அடையாளப்படுத்து; உன் குடும்பம், உன் மனைவி, மகன்னு அன்போடு, பாசத்தோடு வாழ்ந்து பாரு; உறவுகளின் அருகாமை, உன்னை சந்தோஷப்படுத்தும்.
''இதோ என்னை மாதிரி வயசான காலத்தில், பேரன், பேத்தின்னு, நீயும் இந்த ஏழுமலையானை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். நானும், உன் நிலைய அனுபவிச்சவன் தான். உனக்கு ஏற்பட்ட அதே நிலை, எனக்கும் ஏற்பட்டது.
♥நான் ஒரு அனாதை; ஆனா, இப்ப, அப்படி சொல்ல முடியாது. ஏன் தெரியுமா... எனக்கான குடும்பம் விருட்சமாக வளர்ந்திருக்கு. மகள், மகன், மருமகள், மருமகன், பேரன், பேத்தி, அவர்களை சார்ந்த உறவுகள், நண்பர்கள்ன்னு என்னை சுற்றி, இப்ப எத்தனை பேர் தெரியுமா?
''அதனால் தான் சொல்றேன் தம்பி... காலங்கள் மனக் காயத்தை நிச்சயம் ஆற வச்சுடும். உன் வம்சம் உருவாகணும்; நீயும், என்னை போல வாழனும்ன்னு, அந்த ஏழுமலையானை மனசார வேண்டிக்கப்பா. நல்லது நடக்கும்,'' என்றார்.
♥அவர் பேசியதைக் கேட்டதும், மனதின் ஓரத்தில் வாழ்வின் மீதான நம்பிக்கை துளிர்விட, 'இந்த பெரியவர் சொல்வது உண்மை தான்; எனக்கான வாழ்க்கைய, நான் வாழணும்; அந்த இறைவன் என்னை வழி நடத்துவான்... என்னைப் போல அனாதையாக நின்றவர், இன்று உறவுகள் சூழ வாழ்கிறார். தேடலில் தான், வாழ்க்கையின் சுகமே இருக்கு. எப்படியொரு முட்டாள்தனமான முடிவுக்கு வர இருந்தேன். அந்த ஏழுமலையானே, இவர் உருவில் வந்து, என்னை காப்பாற்றி இருக்கிறார்...' என்று நினைத்தவன், மனம் தெளிவடைய, கண்களை அழுந்த துடைத்தான்.
♥அவர் காலை, தொட்டு, கண்களில் ஒற்றி, ''நன்றி ஐயா... இப்ப என் மனசு லேசான மாதிரி இருக்கு. நான் கிளம்புறேன்; கம்பெனியில் லீவு சொல்லாமல் வந்துட்டேன்; பஸ் பிடிச்சு, ஊருக்கு போகணும்,'' என்றான்.
''போய்ட்டு வாப்பா; நல்லா இரு.''
அவன் கிளம்பிச் சென்றதும், ''பெருமாளே, உன் சன்னிதியில் சின்னதா பொய் சொல்லிட்டேன். என்னை பெத்தவங்களுக்கு ஒரே மகனாக ராஜ வாழ்க்கை வாழ்ந்தவன் நான். கலங்கிய மனசுக்கு, ஆறுதல் சொல்ல, எனக்கு வேறு வழி தெரியல; என்னை மன்னிச்சுடு,'' என்று, மனமுருகி மன்னிப்பு கேட்க, பின்புறமாக கட்டிப் பிடித்த பேரன், ''தாத்தா... எனக்கு நிறைய பொம்மை வாங்கியிருக்கு. அப்பா உங்களுக்கு தொப்பி வாங்கினார். நிறைய கடைகள்; ஜாலியா இருந்துச்சு. நீங்க தான் எல்லாத்தையும், 'மிஸ்' செய்துட்டிங்க,'' என்றான்.
''இல்லப்பா, இந்த உலகத்துக்கு வரவேண்டிய உறவுகள, 'மிஸ்' ஆகாமல் காப்பாத்திட்டேன்,'' என்று கூறி, புன்னகையுடன் பேரனை கட்டியணைத்தார், ராஜவேலு.
பரிமளா ராஜேந்திரன்
0 Comments
Thank you