♥தந்தை, அண்ணன் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்து விட்டதால் அவள் நொறுங்கிப்போயிருந்தாள். அவளுக்கு 28 வயது. சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.
♥அவளால் வேலையில் முழுமனதோடு ஈடுபடமுடியவில்லை. உணவிலும் ஆர்வ மில்லை. நன்றாக உடை உடுத்தக்கூட மனமின்றி, எப்போதும் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியிருந்தாள். அலுவலகத்தில் அவளது அருகில் இருந்து வேலைபார்க்கும் இளைஞன், ‘நீ இப்படியே எப்போதும் இருந்து கொண்டிருந்தால் உன் எதிர்காலம் பாதிக்கும். நடந்த சோகங்களை மறந்து இயல்புநிலைக்கு திரும்பவேண்டும்’ என்றார். அதற்காக அவளை புதுவித ‘ஆராதனை’ பாதைக்கு அழைத்துச் செல்வதாக கூறினார். அவளும் சென்றாள்.
♥அவர்கள் இருவரும் நள்ளிரவு நேரத்தில் அங்கு சென்றார்கள். அங்கு பத்து பதினைந்து பேர் இருந்தார்கள். ஒரு சிலர் நடுத்தர வயது பெண்கள். அறை முழுவதும் திகிலை பரப்பும் விதத்தில் கறுப்பு திரைச்சீலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. லேசான வெளிச்சம். கறுப்பு போர்வை விரிக்கப்பட்டிருந்த மேஜைக்கு மேல் ஒரு பெண் நிர்வாணமாக படுக்க வைக்கப்பட்டிருந்தாள். அவள் முகம் சரியாக தெரியவில்லை. அவள் தலையின் இருபக்கமும் இரண்டு மண்டை ஓடுகள் இருந்தன. காலடியில் ரத்தம் போன்ற அடர்நிற திரவம், ஒரு அகன்ற மண்பாண்டத்தில் இருந்தது.
♥அவைகளை பார்த்ததும் அவள் மனதில் திகில் பரவி, உடல் நடுங்கத் தொடங்கியது. உடனே அருகில் நின்றிருந்த அவளது அலுவலக தோழன் அவள் கையை இறுக பற்றிப்பிடித்து மெதுவாக, படுத்துக்கிடந்த நிர்வாண பெண் அருகில் அழைத்துச் சென்றான்.
♥கண்கள் செருகிய நிலையில் கிடந்த அவள் ஈனஸ்வரத்தில், ‘கடவுளை நம்பாதே. அவன் அழிவுகளின் அதிபதி. சாத்தானை நம்பு. அவன்தான் நமக்கு நிம்மதியை தருவான்’ என்று கூறினாள்.
♥இந்த இளம்பெண்ணின் அருகில் நின்றிருந்த இளைஞன், ‘ஆமாம். அதை நாங்கள் நம்புகிறோம். அதற்காகத்தான் இந்த ஆராதனைக்கு வந்திருக்கிறோம்’ என்றான். அப்படி சொல்லும்படி அவளை, அவன் வற்புறுத்த அவளும் பயந்தபடி சொன்னாள்.
♥அங்கிருந்து தப்பினால் போதும் என்ற நிலையில் இருந்த அவளை, கையை பற்றிப்பிடித்த நிலையிலே பக்கத்து அறைக்கு அழைத்துச்சென்றான் அந்த இளைஞன். அங்கு ஒரு நீளமான ஒரு வெள்ளை பேப்பரை அவளிடம் கொடுத்து, அவளது பிரச்சினைகள், கவலைகளை எல்லாம் எழுதும்படி கூறினான். அவளும் பெரிய எழுத்துக்களில் அவசர அவசரமாக அரைகுறையாக எழுதினாள்.
♥எழுதி முடித்ததும், ரத்த நிறத்தில் உடை அணிந்திருந்த ஒருவர் பெரிய கறுப்பு மெழுகுதிரியை கையில் ஏந்தியபடி வந்தார். அவர் அதை அவள் கையில் கொடுத்து, அந்த பேப்பரை எரிக்கசொன்னார். அவளும் எரித்தாள்.
♥அந்த வெளிச்சத்தில் அவள் அங்கும் இங்குமாக பார்த்தாள். அங்கு கூட்டம் கூட்டமாக சிலர் நின்று ஏதோ ஆராதனை செய்துகொண்டிருப்பது அவள் கண்களில்பட்டது. பயமும், நடுக்கமும் தீராமல் அவள் பார்த்துக்கொண்டிருக்க, அந்த இளைஞன் அவளை விட்டு சற்று விலகி, அடுத்த ஒரு நிமிடத்தில் இரண்டு சிறிய கோப்பைகளுடன் வந்தான்.
♥ஒன்றை அவள் கையில் கொடுத்த அவன், ‘உன் கவலைகள், துக்கங்கள் அனைத்தும் அந்த பேப்பரோடு பொசுங்கிப்போய்விட்டது. சாத்தான் உன்னை காப்பாற்றிவிட்டார். இதை குடி. உன்னிடம் இருக்கும் பயமும், பதற்றமும் ஒரு நொடியில் காணாமல் போய்விடும்’ என்றான்.
♥அவளை, அவன் யோசிக்கவிடவில்லை. குடிக்க வைத்து விட்டான். அது ஒருவித போதைத் திரவம். ஒருசில வாரங்களிலே அந்த ஆராதனைக்கும், போதைக்கும் அவள் அடிமையாகிவிட்டாள். இப்படி அடிமையாகிவிட்டவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை எல்லாம் அங்கு கொண்டுபோய் சேர்த்துக் கொண்டிருக் கிறார்கள்.
♥இதில் மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக கொன்று குவித்த ஒருவர், தன்னை அந்த சாத்தான் ஆராதனையாளர் என்று கூறி கிலியடைய செய்திருக்கிறார்.
♥தன்னம்பிக்கை குறைந்து மனது பலகீனமானவர்களே, இப்படிப்பட்ட கூட்டம் எதிலும் போய் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
0 Comments
Thank you