பெண்ணே..
தயக்கமும் மயக்கமும்
உன்னை தனிமைப்படுத்தவே செய்யும்.
நீ கூட்டத்தில்
ஒருத்தியாக வேண்டாம்.
உன் ஒருத்தியால்..
கூட்டமாகட்டும்.
யாரோடும்..
சேர்ந்த பெண்ணாக இரு
எவரோடும்..
சார்ந்த பெண்ணாக இருக்காதே
அனுதாபத்திற்கு
மயங்கிவிடாதே
அக்கறையை போர்த்திவிட்டு
அடிமைத்தனத்தில்
குளிர்காயும் கூட்டமுண்டு.
ஆறுதலாய் வார்த்தைகளில்
வசப்படுத்துபவர்கள்
தவறுதலாய் தோளில்
கை போடுபவர்களே.
அழகிற்கு மயங்கிவிடாதே
புகழ்ச்சியின் நிழலில்
நிற்க வைத்து
மகிழ்ச்சியின் நிலையில்
சொக்க வைத்து
உன் முகம் வருடியே
அகம் திருடும்.
கவிதைகளுக்கு மயங்கிவிடாதே
கற்பனைகள்..
கடை விரிக்கும் மேடையில்
நீ விற்பனைக்குரியவளென
சர்க்கரை தடவிய
வார்த்தைகளை
சந்தைப்படுத்துவது
கவிஞர்களுக்கு கலை.
காதலுக்கு அது வலை.
காமத்திற்கு காதல் விலை.
அதிகாரத்திற்கு அடிபணியாதே
வழிமறிக்கப்படும் பூனை
புலியாகுமென்பதை புரியவை
தீர்வை தேடிச்செல்லாதே
பிரச்சனையை..
பார்வையால் கொளுத்திவிடு.
வக்கிரங்களால் நிறைந்த
ஆண்களுக்கு மத்தியில்..
தொட்டால் சுடும் தீயாகவே இரு
உடைகளுக்குள்
ஒளிந்திருப்பது உடலல்ல
உக்ரமென்பதை காட்டு.
அவை உணர்ச்சிகளும்
உணர்வுகளும் நிறைந்த
உன்னதம் என்பதை
பிரகடனப்படுத்து..
அது கூக்குரலாக அல்ல..
கொக்கரிப்பாக இருக்கட்டும்.
💢💢💢💢💢💢💢💢💢💢
நயினாரின் உணர்வுகள்.
0 Comments
Thank you