♥அவள் வயது 28. தாயாரின் சில தவறான செயல்பாடுகளால், மகளான அவள் வாழ்க்கையும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது.
♥தாயார், கணவரை கைவிட்டுவிட்டு இன்னொருவரோடு சேர்ந்து வாழ்ந்தாள். முதல் கணவரின் மிரட்டலுக்கு பயந்து தூரப்பகுதி ஒன்றில் அவள் பதுங்கி வாழவேண்டிய சூழ்நிலை உருவானது. தாயாரோடு இவளும் சென்றுவிட்டதால், இவளது படிப்பு பாதிக்கப்பட்டது. எதிர்காலமும் கேள்விக்குறியானது.
♥தாயார் புதிதாக குடியேறிய அந்த பகுதியில் உள்ள ஒருசில வீடுகளில் வேலை தேடிக்கொண்டாள். இரண்டாவது கணவர் கூலி வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். ‘தன்னைபோல் மகளும் ஆண்கள் விஷயத்தில் தடுமாறிவிடக்கூடாது’ என்ற சந்தேகமும், பயமும் தாயாரை பீடித்திருந்தது. அதனால் அவளை வெளி நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பாமல் தன்னுடனே வீட்டு வேலைகளுக்கு அழைத்துச் சென்றாள். பின்பு அவளுக்கு வசதிபடைத்த சில வீடுகளில் வேலை வாங்கிக்கொடுத்தாள். காலப்போக்கில் தனியாகவே அவள் அங்கு சென்று வேலைபார்க்கத் தொடங்கினாள். அதில் அவளுக்கு ஓரளவு வருமானம் வந்துகொண்டிருந்தது.
♥அவள் பார்க்க ஓரளவு அழகாக இருந்தாலும், தாயாரின் பழைய நடவடிக்கைகளால் அவளுக்கு வரன் அமையவில்லை. முதிர்கன்னியாகவே வாழ்ந்துவிடுவாளோ என்ற அச்சம் தாயாருக்கு ஏற்பட்டு, கவலைக்குள்ளாக்கியது. மகளும், ‘உன்னால்தான் என் எதிர்காலம் நாசமானது..’ என்று அடிக்கடி குத்திக்காட்டிப் பேசினாள்.
♥இந்த நிலையில் தாயாருடன் வாழும் நபரே, தன்னோடு வேலைபார்க்கும் இளைஞன் ஒருவனை அழைத்து வந்தார். ‘இவன் நல்ல பையன். நம்ம பொண்ணுக்கு பொருத்தமானவனாக இருப்பான். நம்மிடம் இருக்கும் ஐந்தாறு பவுன் நகையை போட்டு கோவிலில்வைத்து சிம்பிளாக கல்யாணத்தை நடத்திவைத்துவிடலாம்’ என்றார்.
♥தாய், மகளிடம் ‘இ்ந்த வாய்ப்பையும் நழுவவிட்டால் கல்யாணமே நடக்காமல்போய்விடும். இவன் நம்ம குடும்பத்தின் உண்மைகளை எல்லாம் தெரிந்தவன். அதனால் இவனுக்கே உன்னை திருமணம் செய்துவைத்துவிடுகிறேன்’ என்றாள். அவளுக்கும் அது சரியான முடிவாகத்தான் தெரிந்தது. அவர்கள் திருமணம் சிம்பிளாக நடந்தது. தாய் வீட்டில் இருந்து சற்று தொலைவில் ஒரு வாடகை வீட்டில் புது வாழ்க்கையை தொடங்கினார்கள். அவர்கள் வாழ்க்கை சுமுகமாக சென்று கொண்டிருந்தது.
♥புதுப்பெண்ணான அவளிடம் பிரச்சினைக்குரிய பழக்கம் ஒன்று இருந்துகொண்டிருந்தது. அவள் மிக வசதிபடைத்த வீடுகளில் வேலைபார்த்தாள். அந்த வீடுகளில் சில நேரங்களில் விலை உயர்ந்த பொருட்கள் ஆங்காங்கே கேட்பாரற்று கிடக்கும். அவைகளில் சிலவற்றை எடுத்து முதல் இரண்டு நாட்கள் அந்த வீட்டிற்குள்ளே ஏதாவது ஒரு இடத்தில் மறைத்துவைப்பாள். வீட்டில் உள்ளவர்கள் யாரும் அந்த பொருட்களை தேடவில்லை என்றால், அப்படியே அதை மறைத்து தனது வீட்டிற்கு எடுத்து வந்துவிடுவாள். அது தவறு என தெரிந்ததால், அந்த பொருட்களை கணவரிடம்கூட காட்டாமல் அப்படியே வீட்டின் ஒருபகுதியில் மறைத்து வைத்திருந்தாள்.
♥அன்று அவள் வேலைக்கு சென்றிருந்த நேரம், கணவர் மட்டும் வீட்டில் இருந்தார். அவர் பழைய பொருட்கள் எதையோ தேடியபோது, மனைவி திருடி வீட்டிற்குள்ளே மறைத்துவைத்திருந்த பொருட்கள் கண்களில் பட்டுவிட்டன. அதில் தங்கத்திலான காது திருகாணிகள், சிறிய பொட்டு கம்மல்கள், வெள்ளிக் கொலுசுகள் போன்றவை இருந்தன.
♥அன்று இரவு வேலை முடிந்து திரும்பியவள் வீட்டிற்குள் நுழைந்ததுமே, தான் பொருட்களை மறைத்துவைத்திருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததை அறிந்துவிட்டாள். கணவர் தன்னை திட்டி அடிக்கப்போகிறார் என்று பயந்த அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆதரவாக மனைவியை அணைத்த அவன், அவளது பலவீனத்தை பயன்படுத்தி அடுத்து பெரிய திட்டம் ஒன்றை தீட்டிவிட்டான்.
♥அவள் வேலைபார்க்கும் குறிப்பிட்ட செல்வந்தர் வீட்டில் உள்ள நகைப்பெட்டியில் இருப்பதை எல்லாம் சுருட்டிக்கொண்டு வரும்படி அவன், மனைவியை நிர்பந்தித்தான். திருடினாலும் கண்டுபிடிக்கவே முடியாது என்று அவளுக்கு தைரியமூட்டினான். அவளும் வேறுவழியின்றி நகைகளை திருடிவிட்டாள்.
♥அவள் நகையோடு வீட்டிற்கு வந்ததும், அதில் ஒருபகுதியை எடுத்துக்கொண்டு, ‘இதோ வருகிறேன்..தைரியமாக இரு..’ என்று கூறிவிட்டு அவன் எங்கேயோ தப்பிவிட்டான். செல்வந்தர் அலமாரியை வைத்திருக்கும் வீட்டில் ரகசிய கேமரா வைத் திருப்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. கேமரா மூலம் துப்புதுலங்க, அவள் வசமாக சிக்கிக்கொண்டாள்.
♥இப்போது அவள் தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கிறாள். பெருமளவு நகை கைப்பற்றப்பட்டதாலும், அவன் போன இடம் தெரியாததாலும் போலீசும் அவனை தேடவில்லை..!
♥பலவீனமான செயல்பாடுகள் கொண்ட பெண்களை, ஆண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிஞ்சுக்குங்க.
0 Comments
Thank you