♥#சுயத்தை_தொலைத்த_தோழி!
சில ஆண்டுகளுக்கு பின், என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். அவள் புகுந்த வீடு, நல்ல வசதியானது. அவள் கணவர், சொந்த தொழில் செய்கிறார்; நல்ல சம்பாத்தியம். எல்லா வசதிகளோடு அவள் வாழ்வதை பார்த்து, மிக மகிழ்ச்சியடைந்தேன்.
♥ஆனால், அவளுடன் பேசும் போது தான் தெரிந்தது, அவள் தன் சுயத்தை தொலைத்தவள் என்பது! படிக்கும் போதே, கைவினை பொருட்கள் செய்வது, தையற்கலை என்று பல்வேறு திறமைகள் அவளுக்கு உண்டு. புதுப் புது விஷயங்களை கற்கும் ஆர்வம் கொண்டவள்; அது சம்பந்தபட்ட வகுப்புகளுக்கும் செல்வாள்.
♥தற்போது, அவள் கணவன், 'நமக்கு இருக்கற வசதிக்கு, நீ இதையெல்லாம் செய்து சம்பாதித்து தான் ஆகணும்ன்னு இல்ல...' என்று கூறி, எதற்கும் அனுப்புவதில்லையாம்.
சினிமாவுக்கு போக வேண்டும் என்றால் கூட, நேரமில்லை என்று கூறி, 'வீட்டில, 'சிடி'யில பாரு...' என்கிறாராம்.
♥'வெளி உலகத்தை பார்த்தே, ரொம்ப நாளாச்சு; வீட்டுக்குள்ளேயே இருப்பது பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு...' என்று கண் கலங்கியவளை, எப்படி தேற்றுவது என்று தெரியாமல் விழித்தேன்.
♥கணவன்மார்களே... உங்கள் மனைவியருக்கும் சில ஆசைகள், ஆர்வங்கள் உண்டு என்பதை புரிந்து, அவளுடைய ஆர்வம் மற்றும் தனித் திறமைக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள். பணம் சம்பாதிக்க மட்டுமே இது போன்ற வகுப்புகளுக்கு பெண்கள் போவதில்லை.
♥அதில் ஒரு மன திருப்தியும், சந்தோஷமும் கிடைப்பதாலேயே செல்கின்றனர். எனவே, அவளை சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அதே மிகழ்ச்சியை, அவள் வீட்டிற்குள்ளும் பரவச் செய்வாள்.
சிந்திப்பீரா கணவர்மார்களே!
— உமா செந்தில், கோவை.
0 Comments
Thank you