♥#என்_கணவர்_என்னோடுதான்.
♥பள்ளி முடிந்ததும் வகுப்பிலிருந்து வெளியே வந்த தன் மகனை அழைத்துக் கொண்டு கீதா பின்னால் திரும்ப, அவளின் கல்லூரித் தோழி மீனா தன் மகளை அழைப்பதற்காக அங்கு காத்திருந்தாள்.
♥நீண்ட வருடங்கள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் தோழிகள் இருவரும் உரையாடிக் கொள்ள, மீனு நினைச்சே பாக்கல நாம இப்படி மீட் பண்ணுவோம்னு. நடந்து போற தூரம் தான் என் வீடு. வீட்டுக்குப் வந்துட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு போயேன் என்றாள் கீதா.
♥சரி கீது போகலாம். ஆறு மணிக்கு கோயில்ல ஒரு பூஜை இருக்கு. நான் உன் வீட்டுல இருந்து நேரா கோவிலுக்குப் போயிடுறேன் என கீதாவின் வீட்டிற்குச் சென்றனர்.
♥வாசலில் நுழைந்ததும் பெரிய அளவில் ஒரு புகைப்படத்தில் ராணுவ உடையில் கம்பீரமாக ஒரு ஆண் இருந்தார்.
♥ஹே யாருடி இது என்றாள் மீனா ஆச்சரியத்துடன்.
♥யாரா!! அவர் தான்டி என் ஹஸ்பண்ட்.
♥ஹஸ்பண்ட்டா மிலிட்டரி மேனா அவரு. கல்யாணத்துக்கு அழைக்குறப்போ வேற வேலையில இருக்குறதா சொன்ன.
♥ஆமாம் மீனு அப்போ ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருந்தாரு. ஆனா சின்ன வயசுல இருந்தே அவரோட எய்ம் மிலிட்டரி மேன் ஆகனும்ங்குறது. அதால மிலிட்டரில சேர்ந்துட்டாரு. எங்க கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துலயே அவருக்கு எல்லைப்பாதுகாப்புக்கு அழைப்பு வந்துச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணி அவர் அங்க போய்ட்டாரு.
♥அப்படியா நான் நீ எங்கயாவது வெளிநாட்டுல செட்டில் ஆகியிருப்பனு நினைச்சேன் கீது. இது கஷ்டமா இல்லையா நீயும் குழந்தையும் ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் எத்தனை நாளுக்கு ஒரு தடவை வருவாரு.
♥ஒரு வருஷத்துக்கு ஒரு முறை இருபது நாள் இல்ல ஒரு மாச லீவுல வருவாரு மீனு.
♥ஏண்டி அவர் தான் பெரிய வேலையில தான இருந்தாரு ரெண்டு பேரும் இங்கேயே சந்தோசமா இருக்கலாமே.
♥நீ சொல்றது சரி தான் மீனு ஆனா இது அவரோட கனவு. அதுவும் இல்லாம இதுல கஷ்டங்கள விட சுகம் தான் அதிகமா இருக்கு.
♥அப்படியா என் ஹஸ்பண்ட் டாக்டரா இருக்காரு ஒரு நாள் அவர் வீட்டுக்கு வரலேனாக் கூட எனக்கு என்னவோ மாதிரி இருக்கு. நீ இப்படி சொல்ற.
♥நிஜம் தான் மீனு நாங்க வேற வேற இடத்துல இருக்குற காதலர்கள் மாதிரி. முடியுறப்போலாம் போன்ல பேசிக்குவோம். அவர மிஸ் பண்றப்போலாம் அவருக்கு கடிதம் எழுதி வச்சிருப்பேன். அவரும் எங்கள மிஸ் பண்றப்போ கடிதம் எழுதிருப்பாரு. பத்து மாசம் ஒரு வருஷம் கழிச்சு அவர் வந்து குடுக்குற முத்தத்துலயும் கண்ணீர் துளியிலையும் நூறு வருஷக் காதல் இருக்கும். ஊருக்குப் போறப்போ கடிதங்களை மாத்திக்குவோம். அது தான் எங்களுக்கும் அவருக்கும் அடுத்த பத்து மாசத்துக்கு துணை.
♥டெய்லி குடும்பமா நேரம் செலவழிக்குறது இன்பம்னா இது பேரின்பம் மீனு. பத்து மாசம் அவர் கடும் பனில தூக்கம் இல்லாம கஷ்டப்பட்டு வருவாரு. ஆனா இங்க வந்து ஒரு நாள் கூட ஓய்வெடுக்கனும்னு எங்கள பிரிஞ்சது இல்ல. அவரால எவ்ளோ முடியுமோ அந்த அளவுக்கு வெளியில அழைச்சுட்டுப் போவாரு. இந்த ஒரு மாசத்துக்கு காத்திருக்குற பத்து மாசமும் காதல் பாசம் நிறைஞ்சு இருக்கும். இந்தக் காத்திருப்பு ஏக்கம் எல்லாமே வலியா இருந்தாலும் அது நடக்குறப்போ இருக்குற சந்தோசத்த அளக்க முடியாது.
♥ஆனா ஒரு அவசரம்னா வாரது கஷ்டம்ல கீது.
♥ஆமா மீனு என் பையன் பிறந்தப்போக் கூட பார்டர்ல தீவிரவாதிங்க பிரச்சனை நடந்துட்டு இருந்தது. எல்லாப் பொண்ணுங்கள மாதிரி கணவர் பக்கத்துல இருக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு. ஆனா பையன் பிறந்து நாழு மாசம் கழிச்சு தான் என் கணவர் வந்தாரு. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. கொஞ்சம் கோபம் கூட இருந்துச்சு. ஆனா கை கால்ல நிறைய குளிர் காயங்களோட அத மறைச்சிக்கிட்டு அவர் கண்கலங்க பையனத் தூக்கி ஆசை ஆசையா கொஞ்சினப்போ என் கஷ்டம் பெரிசா தெரியல.
♥கீதா இது எல்லாம் சரி தான். ஆனா நிம்மதியா வாழ வாய்ப்பு இருந்தும் ஏன் ஆபத்தத் தேடிப் போனும்.
♥நீ சொல்றது சரி தான் மீனு. ஆனால் எல்லோரும் இப்படியே நினைச்சுட்டா நம்ம யாருமே இந்த நாட்ல நிம்மதியா இருக்க முடியாது இல்லையா. உன் ஹஸ்பண்ட் ஏதாவது சிக்கலான ஆபரேசன் பண்ணி காப்பாத்தவே முடியாதுங்குற ஒருத்தர காப்பாத்திட்டா நீ எப்படி பீல் பண்ணுவ.
♥இது என்ன கேள்வி ரொம்ப ரொம்ப சந்தோசப்படுவேன். ரொம்ப பெருமையா பீல் பண்ணுவேன்.
♥அதே தான் மீனு. முகம் கூட தெரியாத மக்களுக்காகத் தன்னொட உயிரப் பணயம் வச்சு எல்லாரையும் காப்பத்துற என் கணவனை நினைச்சு ஒவ்வொரு நொடியும் நான் சந்தோசப்படுறேன் பெருமைப்படுறேன்.
♥எங்க வாழ்க்கையில கண்ணீர் துளிகள் அதிகம் தான் ஆனா அத விட அதிகமா காதலும் பாசமும் நிறைஞ்சிருக்கு.
♥உனக்கு அவருக்கு எதும் ஆயிடுமோனு பயமா இல்லையா கீது.
♥ஒவ்வொரு நாளும் டிவியில முக்கியச் செய்தி முடியுற வரைக்கும் உயிர கையில புடிச்சுட்டு தான் இருப்பேன். ஆனால், அவருக்கு இந்த மண் மேலையும் என் மேலையும் அளவு கடந்த காதல் இருக்கு மீனு. ரெண்டுல எதுக்கு சொந்தமானாலும் மனசார ஏத்துக்குற தைரியத்த என் கணவர் எனக்கு கத்துக்கொடுத்துருக்காரு.
♥கேட்கவே அழகா இருக்குடி உங்க காதலும் நாட்டுப்பற்றும். அடுத்து உன் ஹஸ்பண்ட் வரப்போ சொல்லு கண்டிப்பா அவரப் பாத்து ஒரு சல்யூட் பண்ணணும்.
♥கண்டிப்பா மீனு நான் போன் பண்றேன் என்றாள் கீதா.
♥அவள் சொல்லி முடிக்க அம்மா! அப்பா தான் நம்மள காப்பாத்துரதுக்காக சாமி கிட்ட போய்ட்டாரே எப்படி வருவாரு என்றான் கீதாவின் மகன்.
♥அவன் கூறியதைக் கேட்டு மீனா மிரண்டு விழிக்க,
♥தயங்கியபடி சாரி மீனு போன வருஷம் எல்லையில் நடந்த துப்பாக்கி சமர்ல ........
என் கணவர்.....இறந்துட்டாரு.
நீ நல்ல விஷயத்துக்காக போறேனு சொன்ன. அதான் உன்கிட்ட சொல்லாம மறைச்சேன்.
♥ஐய்யோ என்ன சொல்ற கீது இந்த சின்ன வயசுல என மீனாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
♥பரவாயில்லை மீனு என்னைக்கும் என் கணவர் என்னோட தான் இருக்காரு. இன்னைக்கும் அவர் எழுதின கடிதங்கள் எனக்குத் துணையா இருக்கு. அவரோட மிலிட்டரி டிரஸ்ஸ தொட்டுப்பாக்குறப்போ அவர நிஜத்துல தொடுற மாதிரியே இருக்கும். இவ்ளோ நாள்ல லீவு முடிஞ்சு பார்டர்க்கு போன ஒரு நாள் கூட பையைன பத்திரமா பாத்துக்கனு அவர் என்கிட்ட சொன்னது இல்ல. ஏன்னா அவருக்குத் தெரிஞ்சிருக்கு நான் அவரோட இடத்தையும் சேர்த்து என் பையன வளர்ப்பேன்னு என்றாள் அழுகையை அடக்கியபடி.
♥சிறிது நொடி மெளனத்திற்கு பிறகு, உண்மையிலே நீ பெரிய மனுசி கீது. உன் கணவர் மட்டுமில்ல நீயும் பெரிய வீராங்கனை தான். இந்த வாழ்க்கையெல்லாம் வாழ நிறைய தியாக மனசும், தைரியமும் வேணும். என்ன மாதிரி ஒரு சாதாரண பெண்ணால இதெல்லாம் நினைக்கக் கூட முடியாது. உன்னை நினைச்சா பெருமையா இருக்கு என எழுந்து நின்று கீதாவிற்கும், அவளின் கணவரின் புகைப்படத்திற்கும் சேர்த்து ஒரு சல்யூட் வைத்தாள் மீனா கண்கள் கலங்கியபடி.
♥முன்னால் வந்த கீதாவின் மகன் அம்மா மீனா ஆண்டிய எனக்கும் சேர்த்து சல்யூட் பண்ண சொல்லுங்க இன்னும் கொஞ்ச நாள் தான இருக்கு அப்பா விட்டுட்டுப் போன பார்டருக்கு நான் போக என்றான் புன்னகையுடன்.
0 Comments
Thank you