♥பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்
♥கர்ப்பப்பை வாய் புற்று நோய் (Cervical Cancer) என்றால் என்ன?
கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில், பிறப்புறுப்பு இணைகிற இடத்தில், கர்ப்பப்பை வாய் உள்ளது. 'ஹீயூமன் பாப்பிலோமா' எனும் வைரஸ், இந்த இடத்தை தாக்கும் போது, கர்ப்பப்பை வாய் பாதிக்கப்பட்டு புற்று நோய் வருகிறது.'
♥ஹீயூமன் பாப்பிலோமா' வைரஸ் எவ்வாறு பரவுகிறது?
பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற உடலுறவு மூலம், இவ்வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் கிருமி, கர்ப்பப்பை வாயில் உள்ள திசுக்களை தாக்கி, புற்று நோயை உருவாக்குகிறது.
♥கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான அறிகுறிகள்?
மாதவிடாயின் போது, வலியுடன் கூடிய ரத்தப்போக்கு, கட்டி கட்டியாக ரத்தப் போக்கு, அடிவயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, தாம்பத்ய உறவின்போது, அதிக வலி போன்றவை ஆரம்ப அறிகுறிகள். துர்நாற்றத்துடன் வெள்ளை படுதல் பாதிப்பு முற்றியுள்ளதற்கான அறிகுறி.
♥இந்நோய்க்கான பரிசோதனைகள் என்னென்ன?
பாப் ஸ்மியர் பரிசோதனை. 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் இதைச் செய்து கொள்வது நல்லது. மாதவிடாய் முடிந்து இரண்டு வாரங்களுக்குள் இதை செய்து கொள்ளலாம்.
♥கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுக்க முடியுமா?
'குவாட்ரிவேலண்ட், பைவேலண்ட்' என, இரு தடுப்பூசிகள் உள்ளன. இது வைரஸ் பாதிப்பிலிருந்து, 70 சதவீதம் பாதுகாப்பு தரும்.
♥'குவாட்ரிவேலண்ட்' தடுப்பூசியை எவ்வாறு போட்டுக் கொள்ள வேண்டும்?
10 வயது முடிந்த சிறுமியர் முதல் தவணை ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். முதல் ஊசிக்கு பின், இரண்டு மாதம் கழித்து இரண்டாவது முறையும், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது ஊசியும் போட்டுக் கொள்ள வேண்டும்.
♥'பைவேலண்ட்' ஊசியை எவ்வாறு போட்டுக் கொள்ள வேண்டும்?
பைவேலண்ட் போடுவதாக இருந்தால், முதல் ஊசிக்குப் பின், ஒரு மாதம் கழித்து இரண்டாவது ஊசியும், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது ஊசியும் போட்டுக் கொள்ள வேண்டும்.
♥யார் யாருக்கெல்லாம் கர்ப்பப்பை வாய் புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது?
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன், தாம்பத்ய உறவு வைத்து கொள்ளும் பெண்களுக்கும், சுய சுகாதாரம் இல்லாதவர்களுக்கும் வரலாம்.
♥கர்ப்பப்பை வாய் புற்றுக்கான தடுப்பூசியை யாரெல்லாம் போடக்கூடாது?
கர்ப்பிணிகள் கர்ப்ப காலம் முடியும் வரை, இத்தடுப்பூசியை போட்டுக் கொள்ளக் கூடாது.
♥நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகள் என்ன?
ஆரம்ப கட்ட நோய் என்றால், அறுவை சிகிச்சை அல்லது கதிர் வீச்சு சிகிச்சை. மிகவும் முற்றிய நிலையில் கதிர்வீச்சு சிகிச்சையோடு, அறுவை சிகிச்சையும் கொடுக்க வேண்டும்.
0 Comments
Thank you