ஒரு கிராமத்துக் காதல்
*********************
மாடுமேய்க்கும்
சாக்கில்
நானும்
ஆடுமேய்க்கும் சாக்கில்
நீயுமாய்
கூடுவிட்டு பறக்கும்
குருவிகளாய்
வீடுவிட்டு பறப்போம்......
ஆத்தங்கரையிலும்
ஆவாரங்காட்டிலும்
ஆடுமாட்டை மேயவிட்டு
ஓடைக்கரை மதகுக்குள்
ஒரு கணத்தில்
நாம் மறைவோம்......
மடிநிறைய எலந்தைப்பழம்
மாராப்பில் கைமுறுக்கு
மாவடு கேப்பைக்கூழு
மதியம்வரை
எள்ளுருண்டை
குதிரைவாலி அரிசிக் கஞ்சி
கொத்துக்கொத்தா
கொடுக்காப்புளி என
எடுத்துவந்து நாம் ருசித்த
இளமைக்காலம்
தொலைத்துவிட்டோம்.......
தூண்டில்போட்டு
மீன்பிடிச்சோம்
தூக்கம் விட்டுக்
கூத்துபார்த்தோம். .....
எக்குத்தப்பா எறிஞ்சகல்லு
ஈச்சங்காயை
உதிர்த்துப்போகும்
உண்டிவில்லால் அடிச்ச மாங்கா
உப்புச் சேர்க்க
அமுதமாகும்.......
தும்பைப்பூவால்
தொடுத்தமாலை
துண்டுநூலில்
கோர்த்தமஞ்சள்...
கொன்றைப்பூவால்
போட்ட மஞ்சம்....
கொஞ்சிக்கொண்ட
காலம் சொர்க்கம்.....
அன்றாடம் தாலிகட்டி
அழகுபார்த்த
உன் கழுத்து.....
சண்டாளச் சாதியில்லை
சச்சரவும் ஏதுமில்லை
சொப்புவைத்து
நீ சமைப்பாய்
சோறுபோட்டு
நீ சிரிப்பாய்.....
புகையிலைத்தாள்
பணம்கொடுப்பேன்
பூவாக நீ சிரிப்பாய்.......
கம்மாக்கரைக் காத்துவாங்கி
காலாற
நாம் நடப்போம்
ஒப்பனைகள் ஏதுமின்றி
ஒயிலாக
நீ இருப்பாய்.......
கற்பனைகள் கோடிகோடி
கண்களுக்குள்
பொத்திவைப்பாய்......
தப்பாக நடந்ததில்லை
தாயைப்போல நீயிருந்தாய்
எச்சிலும் அமுதமாச்சு
எப்போதுமே
கவிதையாச்சு
இத்தனை நாள்கழித்தும்
மறக்கவில்லை
உன் நினைப்பை
எப்படி மீட்டெடுப்பேன்
இப்படி ஓர்
பேரிழப்பை...........!
0 Comments
Thank you