♥மருமகள் – ஒரு பக்க கதை
♥கோமதிக்கு கண்ணம்மாவிடமிருந்து ஒரு போன் கால் அன்று வந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த மருமகள் சிந்து தன் பேச்சைக் கேட்பதில்லை, வீட்டில் அவள் ஆட்சிதான், மகன் மனைவிக்குத்தான் பக்கபலமாக இருக்கிறான், இதனை நல்லவிதமாக முடித்து வைக்க கோமதி நேரில் வரவேண்டும் என்று போனில் அழாக்குறையாகச்
சொன்னாள் கண்ணம்மா.
♥நான்கு வருடங்களுக்கு முன் திண்டுக்கல்லில் அடுத்தடுத்து வீட்டில் குடியிருந்த பழக்கம்
கோமதியின் மகனுக்கு திருமணம் நடந்த ஆறே மாதத்தில் மருமகள் லட்சமி , கோமதியிடம் அடிக்கடி தகராறு செய்துபோது, மேலுக்கு கோமதிக்காக பேசினாலும் லட்சுமியை ஆதரித்தாள் கண்ணம்மா. இது கோமதிக்கும் தெரியும்… பலன்? மகன் தனிக்குடித்தனம் போய் விட்டான்.
♥கணவனின் பணி மாறுதல் காரணமாக கோமதி மதுரை வந்துவிட்டாள்.
கண்ணம்மாவைப் பழி தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் , கோமதிக்கு. உள்ளூர மகிழ்ச்சி. மறுநாளே திண்டுக்கல்லுக்கு விரைந்தாள்
அவளை வரவேற்றார்கள் கண்ணம்மாவும் சிந்துவும். சற்று நேரம் கழித்து சிந்து ஆரம்பித்தாள்.
♥”என்னைப் பத்தி அத்தை புகார் செஞ்சிருப்பாங்களே? தெரியும் எனக்கு, பாருங்கம்மா! வயசானதால, ஓய்வெடுங்க…சமைக்கறது, தண்ணி எடுக்குறது, மாவாட்டுறது, துணி துவைக்கிறது எதையுமே அத்தை செய்ய வேண்டாம்கிறேன். அத்தை எல்லாத்தையுமே மறுக்குறாங்க.
உன் இஷ்டத்துக்கு ஆடாதேன்னு அடம்புடிக்கிறாங்க, அத்தைக்கு நீங்கதான் சொல்லணும்மா…”
பாதி கேட்டுக்கொண்டிருந்தபோதே கோமதிக்கு மயக்கம் மேலிட்டுவிட்டது…!
- மு.திருஞானம்
0 Comments
Thank you