♥குழம்பு மணம் இங்கே வரை வீசுது...
♥குழந்தைங்க அவங்க அப்பாக்கிட்டே பாசமா பழகுறதை பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்
♥வீடு, வார விடுமுறை நாளான அன்று உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தது. காயத்ரி சமையல் அறைக்கும்- மொட்டை மாடிக்குமாக ஓடிஓடி வேலைபார்த்துக்கொண்டிருந்தாள். இன்றுதான் அவளது கணவர் வீட்டில் இருக்கிறார். மற்ற நாட்களில் அலுவலகம் செல்லும் அவருக்கு காலையிலே சாப்பாடு தயார் செய்து கொடுத்து அனுப்பி விடுவதால் ஆறிய உணவைத்தான் உண்பார்.
♥இன்று தேவையானதை சமைத்துக்கொடுத்து சூடாக பரிமாறவேண்டும் என்ற ஆசையில் இறைச்சி குழம்பு, வறுவல் என சிறப்பு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாள். வாஷிங்மெஷின் துவைத்த துணிகளை சமையலுக்கு இடையே அவ்வப்போது மொட்டைமாடிக்கு கொண்டு சென்று உலரவைக்கும் வேலையையும் செய்துகொண்டிருந்தாள்.
♥கணவர் மூர்த்தி மின்விசிறியில் உள்ள அழுக்கு, சுவர்களில் இருந்த ஒட்டடையை நீக்கிக்கொண்டிருந்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த நான்கைந்து குழந்தைகள் இவர்களது மகள் சுஷ்மிதா, மகன் சந்துருவுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதனால் வீடே கலகலப்பாக இருந்தது.
♥மகன் சந்துரு திடீரென்று மூர்த்தியை நோக்கி ஓடிவந்தான். அவரை கட்டியணைத்து மடியில் சாய்ந்தவாறு ஏதோ சந்தேகம் கேட்டான். அவனிடம் அன்பாக பேசிக்கொண்டிருந்தவர் சில நிமிடங்களில் சட்டென்று அவனை தள்ளிவிட்டு கோபத்தில் கொந்தளித்துவிட்டார். அதை பார்த்து பக்கத்து வீட்டு சிறுவர்கள் கேலியாக சிரித்தார்கள்.
♥அவர்கள் முன்னால் அவமானப்பட்டதால் சந்துருவின் முகம்வாடிவிட்டது. அதனை சமையல் அறைக்குள் இருந்து கவனித்த காயத்ரிக்கு சுருக்கென்று கோபம் வந்தது. ஆனாலும் கட்டுப்படுத்திக்கொண்டு ‘ஏன் குழந்தையை காரணம் இல்லாமல் இப்படி திட்டுகிறார்’ என்று வருந்தியபடி வேலையை தொடர்ந்தாள்.
♥அரை மணி நேரம் கடந்த நிலையில் தன்னை நோக்கி ஓடி வந்த மகள் சுஷ்மிதாவிடமும் அதேபோல்தான் மூர்த்தி நடந்து கொண்டார். ஆனாலும் அவள் முகம் வாடவில்லை. தந்தையிடம் இருந்து விலகி, பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாட்டை தொடர்ந்தாள். அவ்வப்போது சமையல் செய்து கொண்டிருந்த காயத்ரியிடமும் செல்ல சேட்டைகள் செய்தபடி விளையாடிக்கொண்டிருந்தாள்.
♥தந்தை தள்ளிவிட்டதால் உம்மென்று இருந்த தம்பி சந்துருவையும் இழுத்துவந்து இயல்பாக்கி விளையாடவைத்துக்கொண்டிருந்தாள். குழந்தைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சப்தமிட்டபடி குதூகலிக்க மீண்டும் மூர்த்தி உக்கிரமானார்.
♥‘‘டேய் சந்துரு, சுஷ்மிதா.. எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டீங்களா.. இப்படித்தான் கட்டுப்பாடு இல்லாமல் கத்துறதா.. யாராவது தவறி விழுந்தால் என்ன வாகும்?’’ என்று கத்தினார்.
♥அவர் அதட்டியதும் சந்துரு, சுஷ்மிதா, அக்கம் பக்கத்து குழந்தைகள் என அனைவருடைய கண்களும் கலங்கின.
♥கணவர் கத்தியதை கேட்டதும் பதறிப்போய் ஓடிவந்த காயத்ரி, ‘‘ஏங்க இப்படி கோவிச்சுக்கிறீங்க. குழந்தைங்க விளையாடினால் சத்தம் கேட்கத்தான் செய்யும். அதுவும் லீவு நாளில் விளையாடாமல் எப்போ விளையாடப்போறாங்க. விடுமுறை விட்டதாலத்தான் பக்கத்து வீட்டு பிள்ளைங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து சந்தோஷமா இருக்குதுங்க. காரணமில்லாமல் ஏன் அவங்களை திட்டுறீங்க’’ என்றாள்.
♥‘‘நான் காரணமில்லாமல் திட்டுறேனா. ஒருநாள் வீட்லே நிம்மதியா இருக்கலாம்னா ஒரே இரைச்சல். நீ முதல்ல உள்ளே போய் சமையல் வேலையை பாரு’’ என்றபடி உள் அறைக்குள் சென்றுவிட்டார்.
♥மூர்த்தியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கவே அவரது பின்னாலேயே காயத்ரி சென்றாள்.
♥‘‘என்னாச்சு.. ஏன் இப்படி நடந்துக்கிறீங்க?’’ என்றாள், கோபத்துடன்.
‘‘காரணத்தோடுதான் அப்படி கோபப்பட்டேன்’’
‘‘என்ன காரணம்?’’ என்றாள், கோபம் நீங்காமல்.
♥‘‘பக்கத்து வீட்டு பையன் சுரேஷின் அப்பா விபத்தில் இறந்து இரண்டு வருஷம் ஆச்சுது. அவன் அப்பா இல்லாத ஏக்கத்தில் இருக்கான். இந்த நேரத்துல நம்ம பையனும், பொண்ணும் அடிக்கடி என் மடியில் வந்து உட்கார்றதையும், கன்னத்தை பிடிச்சு கிள்ளுறதையும் அவன் கூர்ந்து பார்க்கிறான். அதை எல்லாம் பார்த்து, தமக்கு அப்பா இல்லையே என்ற ஏக்கம் அவனுக்கு அதிகரிச்சிடும்.
♥அவனாவது பரவாயில்லை. 10 வயதை கடந்தவன். எதிர்வீட்டு சுரேகாவோட அப்பா வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து மூன்று வருஷம் ஆயிடுச்சு. அந்த பெண்ணோட அம்மாவுக்கு இன்னமும் டிரான்ஸ்பர் கிடைக்கலை. வெளியூரிலேயே வேலைபார்த்து அல்லாடிக்கிட்டு இருக்காங்க. இப்படி இருக்கும்போது இங்கே நம்ம பிள்ளைங்க நம்ம கிட்டே கொஞ்சுறதையும், ஆசையா பேசுறதையும் பார்த்தா அவங்க மனசு பெத்தவங்களை பத்தி நினைக்க ஆரம்பிச்சிடும். இந்த விடுமுறை அவங்களுக்கு ஏக்கத்தை கொடுத்திடும். அதனாலேதான் கோபப்படுற மாதிரியும், அவங்களை திட்டுற மாதிரியும் நடந்துக்கிட்டேன்’’ என்றார்.
♥அவர் சொன்னதை கேட்டதும் காயத்ரியிடம் தாய்மை உணர்வு வெளிப்பட்டது.
♥‘‘உண்மைதாங்க. நானும் சின்ன வயசுலேயே அப்பாவை இழந்துட்டேன். பக்கத்து வீட்டு குழந்தைங்க அவங்க அப்பாக்கிட்டே பாசமா பழகுறதை பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். நீங்க செஞ்சது சரிதான்’’ என்றாள்.
♥“சரி.. சரி.. இறைச்சி குழம்பு மணம் இங்கே வரை வீசுது. முதலில் எல்லா குழந்தைகளையும் உட்காரவைத்து சாப்பாடு கொடு. குழந்தைங்க திருப்தியா சாப்பிடட்டும். நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என்றார், மூர்த்தி.
♥- கணேஷ்ராஜ்
0 Comments
Thank you