HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வெளிரிய வர்ணங்கள்.. சிறுகதை

♥வெளிரிய வர்ணங்கள்..
    சிறுகதை

♥வந்துட்டியா வாயாடி. ஏம்மா இவ்ளோ நேரம். பஸ் ஸ்லோவா.

♥ஆமாம்மா உன் ஊரு பஸ் ஆடி அசஞ்சு வரதுக்குள்ள இவ்ளோ நேரம் ஆயிடுச்சு.

♥சரி போய் குளிச்சுட்டு வா காபி போட்டுத்தரேன்.

♥போம்மா நானே டையர்டா வந்துருக்கேன். காபி குடிச்சிட்டு, டிபன் சாப்பிட்டு அப்புறம் குளிக்கிறேன்.

♥சோம்பேறிக் கழுத சொல்றதவே கேட்காத. எத்தனை தடவை சொல்லிருக்கேன் ஊருக்கு வரப்போ இப்படி பசங்க போடுற மாதிரி டிரஸ் போடாதனு.

அம்மா தினமும் ஆபிசுக்கு இத போட்டே பழகிடுச்சு. இரண்டு நாளுக்காக எல்லாம் மாத்திக்க முடியாது.

♥உனக்குத் தெரியும்ல உன் தாத்தாக்கு இப்படிலாம் உடுத்துனா பிடிக்காதுனு.

♥அட போம்மா உன் மாமனாரு அப்டேட்டே ஆகாம இருக்காரு. எப்போப் பாரு பொண்ணுங்க டிரஸ்ஸ குறை சொல்றதே இங்க எல்லாருக்கும் வேலையாப் போச்சு. நான் என்ன அசிங்கமாவா டிரஸ் பண்றேன்.

♥எதைத்தான் கேட்கப் போற. வாயாடாம போய் குளிடி. குளிச்சுட்டு சுடிதாராவது போடு என அம்மா கத்த ஒரு வழியாக குளிக்கப்போனாள் அனு.

♥அவள் எடுத்து வந்த டிராவல் பையில் இரண்டு ஜீன்ஸூம் இரண்டு டீ சர்ட் மட்டுமே இருந்தது.

♥அச்சச்சோ சுடிய எடுத்து ரூம்லயே வச்சிட்டு வந்துட்டனா. வீட்ல இருக்குறதுவும் செட் ஆகாதே. மர மண்ட மர மண்ட  என தன்னைத்தானே திட்டிக்கொண்டு வேறு வழி இல்லாமல் அவள் கொண்டுவந்த உடையையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.

♥அந்தப் பழைய காலத்து வீட்டில், முற்றத்தை ஒட்டிய அழகிய அறையில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் தாத்தா. புதிதாய் அந்த அறைக்கு வருபவர்களுக்கு இது வீட்டின் அறையா இல்லை நூலகமா எனத் தோன்றும்.

♥தாத்தாவின் நாற்காலியைச் சுற்றி நால்புறமும் புத்தகப் புதையலே இருக்கும் எனச் சொல்வதை விட  புத்தகக் குவியலுக்கு நடுவில் தாத்தா சிறிய இடத்தில் இருக்கிறார் என்பது சரியாக இருக்கும்.

♥அனு தாத்தாவின் அறைக்குள் நுழைந்ததும் அவள் வரும் நிழலைக் கொண்டு யார் என்று பார்க்க மேசையில் இருந்த கண்ணாடியை மெதுவாய்த் தன் விழிகளிற்குக் கொடுத்தார்..

யாரது....

நான் தான் தாத்தா என்றாள் அனு.

♥தாத்தாவா எனக்கு பேத்தி மட்டுந்தானே பேண்ட் சட்ட போட்ட பேரன்லாம் இல்லயே. நீ யாரு என்ன தாத்தானு கூப்பிடுற...

தாத்தா என்னை கிண்டல் பண்றீங்களா.

ஆமாம்மா என் பேத்தியத்தே என்னால கேலி பேச முடியும்.. எப்போமா வந்தே..

♥கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தாத்தா வந்தேன்..

சரி தாயி.. வேலை நல்லபடியாத்தான போகுது..

♥அதெல்லாம் நல்லா போகுது தாத்தா. அது சரி தாத்தா இது என்ன இவ்ளோ தேசியக் கொடி என்று மேசையை காண்பித்து அங்கே கிடந்த கொடிகளைப் பார்த்துக் கேட்டாள்.

♥இன்னும் பத்து நாள் சென்டு சுதந்திர தினம் வருதுள தாயி. அதுக்கு நம்ம வூட்டுக்கு சமீபமா இருக்குற பள்ளிக்கூட புள்ளைகளுக்குக் குடுக்கலாம்னு உங்க அப்பன வாங்கிட்டு வர சொன்னேன்.

♥ஓ சூப்பர் தாத்தா... சுதந்திர போராட்ட தியாகியோட மகன்னு நிருபிச்சிட்டீங்க என சிரிப்புடன் சொன்னாள் அனு.

♥ஒரு வெற்றுப் புன்னைகையைய் உதிர்த்தவராய் ஆமா தாயி சுதந்திரப் போராட்ட தியாகினு பேர்தே இருக்கு. வாங்குன சுதந்திரம் எங்கிட்டு கிடக்குனுதான் விளங்கள.

ஏன் தாத்தா அப்படி சொல்றீங்க..

♥ஆமா தாயீ நம்ம நாட்ட வெள்ளக்காரன்ட்ட இருந்து வாங்க எம் அப்பாரு தாத்தாவெல்லாம் எம்புட்டு கஷ்டப்பட்டாக தெரியுமா.

எத்தன மக்க போராடிச் செத்தாக தெரியுமா.

♥இம்புட்டு ஏன் நம்ம வூட்லயே அப்பிடித்தான எங்க ஆத்தா போய்ட்டா என சொல்லும் போதே அவர் நாக்கு தலுதலுத்தது..

கொள்ளுப் பாட்டியா தாத்தா என அனு கேட்க;

ஆமா தாயி,  வள்ளுவனுக்கு வாசுகி மாதிரி எங்கப்பனுக்கு எங்காத்தா இருந்தா.

புள்ளைகனா உசிரு அவளுக்கு..

♥கைத்தறில நெஞ்ச சேலை தான் உடுத்துவா. அந்த அம்மனே நேர்ல வந்தமாதிரி இருக்கும் அவளப் பாத்தா.

♥எனக்கு அப்ப எட்டு இல்ல ஒம்பது வயசு இருக்கும். ஒருநா ஆத்தாவோட சந்தைக்கு போனே..

அப்போலாம் எங்க போனாலும் வெள்ளக்கார பயலுவ தான் நிப்பானுவ.

♥அன்னைக்கு காய்கறிலாம் வாங்கினப்பொறவு பக்கத்துல போட்டுருந்த துணி வண்டிக்கு புடவை வாங்கப் போனோம்.

♥துணியப் பாத்துக்கிட்டு இருக்கைல ஒசரமா ஒரு வெள்ளக்காரேன் வந்தான். வந்தவேன் இங்கெல்லாம் துணி வாங்கப் படாது. நாங்க எங்க நாட்ல இருந்து கொண்டாந்த துணியதான் வாங்கனும்னான் அவனுக்கு தெரிஞ்ச தமிழ்ல.

♥புலிய முறத்தால அடிச்சு தொரத்துன கத கேட்ருக்கியா. என் ஆத்தா அந்த பரம்பரைல இருந்து வந்த மாதிரி வீரமா இருப்பா. அந்த வெள்ளக்காரன கண்டுக்கிடாம அவ பாட்டுக்கு ஒரு துணிய எடுத்து விலை பேசிக்கிட்டு இருந்தா.

♥இன்னோரு முறை அவன் அதையே திரும்பச் சொல்ல, எங்காத்தா "இது தான் நாங்க உடுத்துர உடை. உன்னுத உம்மட நாட்டுல போய் கூவி கூவி விய்னு" சொல்லிப்புட்டா.

♥இதக் கேட்ட அந்த வெள்ளக்காரன் நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ கேட்க மாட்டியா, திமிறா வேற பேசுறனு சொல்லிக்கிட்டே என் ஆத்தா சேலைய இழுத்துப்புட்டான்.

♥உடனே சுதாரிச்ச ஆத்தா ஒரு கைல சேலையும் மறு கைல என்னையும் புடிச்சுக்கிட்டு கத்த ஆரம்பிச்சா.

♥நம்ம மக்க நாலு பேரு ஓடி வர அவுகள எட்டித் தள்ளி பூட்ஸ் காலால மிதிச்சுப்புட்டான் அந்த வெறி புடிச்சவேன்.

♥எங்க ஆத்தா சேலைய விடாம பிடிக்க வேகமா அவ தல முடிய புடிச்சு தர தரனு இழுத்துக்கிட்டுப் போனான்..

♥ஆத்தாவும் அவளுக்கு ஆனவர போராடூனா. ஒரு கட்டத்துல தாங்க முடியாம கீழ விழ அவள இரண்டு மிதி மிதிச்சுட்டு புடிக்க ஓடுன என்னையும் உதச்சு தள்ளிப்புட்டான்.

♥அப்பொறம் கூட்டமா நம்ம மக்க ஓடியாரவும் ஆத்தாவ விட்டுட்டு இரண்டு பேரையும் பூட்ஸால எத்திப்புட்டு நடந்து போய்ட்டான்.

♥மனசுலாம் வேதனையாப் போச்சு. வீட்டுக்கு வந்தப் பொறவு என் அப்பாரு அம்புட்டு சமாதானம் சொல்லியும் ஆத்தா கேட்கல..

♥அவனுக அழிவு காலம் தொடங்கிப்புடுச்சு. நாங்க பாத்துக்குறோம் நீ விடு புள்ளனு அப்பாரு சொன்னதும் ஒரு வழியா ஆத்தா அமைதியாய்ட்டா. ஆனா, அவ நிசத்துல சமாதானம் ஆகலேனு அப்புறம் தான் தெரிய வந்துச்சு.

♥நடந்த இந்த கொடூரத்தப் பத்தி பேச எங்கப்பாரு போராளிகள பாக்க போவ, எப்ப போவாருனு காத்திக்கிட்டுக் கிடந்த ஆத்தா சீமெண்ணெய் கேன தூக்கிட்டு வேகமா வெளில ஓடுனா.

♥நானும், என் அண்ணெ தம்பி அக்காளெல்லாம் பின்னுக்க ஓட அங்க விக்கிறதுக்கு அடுக்கி வச்சுருந்த வெள்ளக்கார துணி மேல சீமெண்ணைய ஊத்தி தான் மேலையும் ஊத்தி கண் இமைக்குற நொடில பத்த வச்சுட்டா பாவி..

நாங்க ஏழு புள்ளைக கண்ணு முன்னாடியே அவ துடி துடிச்சு செத்துப்போய்ட்டா...

♥இதக் கேட்ட எங்க அப்பாரு வெறிபுடிச்சாப்ல வெள்ளக்காரனுகள அடிக்கப் போக ஒரே நிமிசத்துல அவரையும் சுட்டுக் கொண்டுபுட்டானுவ என சொல்லும் போதே தாத்தாவின் கண்களில் நீர் அருவியாய்க் கொட்டியது.

♥தாத்தா என அனு அவர் கையைப் பிடிக்க.. கண்ணீரைத் துடைத்தவர் இது நம்ம குடும்பத்துல நடந்த கொடூரம் தாயி.இது போல எம்புட்டு மக்க கொடூரமா செத்துருக்காக.

♥பட்டினி போட்டு, இருட்டு அறையில பூட்டி வச்சு, பிரம்படி பட்டு, தோட்டாவால துளைச்சு நம்ம மக்கள துடிக்கத் துடிக்க கூட்டம் கூட்டமா கொன்னுப்புட்டான் அந்த வெள்ளக்காரன்.

♥அன்னைக்கு அவனுகள நாட்டவுட்டு தொரத்தின ராத்திரி எம்புட்டு நிம்மதியா இருந்துச்சு தெரியுமா தாயி. ஆத்தா அப்பாரு சாவுக்கும் கையளவு நீதி கிடச்சாமாதிரி இருந்துச்சு.

♥அவனுகள தொரத்த பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்ல. ஆனா இன்னைக்கு அதே வெள்ளக்காரன் எத்தன ரூபத்துல நம்ம நாட்ட அடிமப்படுத்தி வச்சுருக்கியான் பாத்தியா.

♥அதிக வருவாய்க்கு ஆசப் பட்டு நம்ம மக்க வெளிநாட்டுல போய் வேலை பாக்குறாவ. துட்டுக்காக எம் மண்ண பூரா சுரண்டி விஷத்த ஊத்த வெள்ளக்காரன் கம்பெனிக்கு ஆதரவு கொடுக்குறானுவ நம்ம சனங்க.

♥நூத்துல ஒரு சதவீகிதம் கூட கைத்தறி நெசவு இல்லாம போச்சே தாயி. உடலுழைப்ப நம்பி பொழப்பு செஞ்ச என் சனமெல்லாம் ஒரு வயிறு சோத்துக்கே போராடுது.

♥வெள்ளக்காரன் அவன் நாட்டு இயந்திரத்தலாம் இறக்கி எம் மக்கள அழிக்க ஆரம்பிச்சுப்புட்டான். அதுக்கு நம்ம மக்க துணை போகுதே. தான் சுயநலத்துக்காக நம்ம மக்கள்ள ஒரு பகுதிய, நாமலே அழிக்குறோம்னு இங்க பல சனங்களுக்கு புரியலயே தாயி.

உள்ளூர்ல இப்படி அடிமைப்பட்டுக் கிடக்கத் தானா அத்தன மக்க இரத்தம் சிந்தினாக.

♥இதெல்லாம் பாக்குறப்ப மனசு துடிக்குது தாயி. இந்த பாவி மண்ணுல இன்னும் என் உசிரப் போட்டு வச்சுருக்கானேனு படச்சவன ஏசிக்கிட்டு கிடக்கேன்.

♥தாத்தா நீ உடுத்துர ஆடைய குறை சொல்லுரதா உம்மட அம்மாகிட்ட பேசினத கேட்டேன் தாயி.

♥நீ உடுத்துர விதத்துல குத்தம் சொல்லல ராசாத்தி. எம் பேத்திய எனக்குத் தெரியாதா. ஆனா இந்த அன்னிய துணிக்காகத் தான எம் ஆத்தாவும் அப்பனும் உசிரவிட்டாகன்ற வலி மனசுல பரவிக்கிடக்க நம்ம புள்ள மவளே அத உடுத்துறாளேன்டு தாத்தாவுக்கு சின்னதா மனச் சோர்வு.

♥ஒரு உதாரணம் சொல்லட்ட தாயி இல்ல என் ராசாத்திக்கு எங்கையும் போனுமா என தாத்தா கேட்க இல்ல தாத்தா நீங்க சொல்லுங்க என்றாள் அனு.

♥என் பேரப் புள்ளைக நீங்க எல்லாம் சேர்ந்து நம்மட மண்ணோட விளையாட்டக் காப்பத்த ராப்பகலா போராடினீக.
தொடர்ச்சியா போராடி வெற்றியும் சூடிட்டிக.. அப்ப இந்த தாத்தனுக்கு மனசு குளிர்ந்துபோச்சு.

♥ஒரு உதாரணத்துக்கு, நாளைக்கே நம்ம விளையாட்ட எதித்து நின்னவேன் திரும்பவும் உரண்ட இழுத்து விளையாட்ட நிறுத்திப்புட்டான்னா உங்களுக்கு மனசு பதறும்ல தாயி. நாங்க கஷ்டப்பட்டு போராடி தடியடி பட்டதெல்லாம் வீணா போச்சேனு பொலம்புவீகல்ல என தாத்தா கேட்க ஆமாம் தாத்தா என்றாள் அனு.

♥ம்ம், அப்பிடித்தான் தாயி எனக்கு இருக்கு. எதுக்காக போராடி என் மக்க செத்தாகளோ அதுக்கு அர்த்தம் இல்லாம போய்டுச்சே.  இன்னும் வேத்துவனுக்கு அடிமப்பட்டு நம்ம மண்ண நாமலே அழிக்குறோமே. அதக்காட்டிலும் ஒரே நாட்டுக்குள்ள ஒரு பகுதி மக்க மறு பகுதி மக்கட்ட அடிமப்பட்டு சீரழிஞ்சு கிடக்குறது மனசு பூரா வேதனைய தெளிக்குது தாயி.

♥தாத்தனுக்கு வயசாயிப்புடிச்சு கேட்டியா. என் தாயி மனசு நோவுர மாதிரி இந்தக் கிழவன் பேசிருந்தா மனசுல போட்டுக்காத தாயி என அவர் கெஞ்சலாய் கேட்க அனுவிற்கு அனைத்தும் புரிந்து மனம் கணத்தது.

♥ஏன் தாத்தா இப்படிலாம் பேசுறீங்க என அவர் இரு கரங்களைப் பிடிக்க அவளின் சிநேகிதி நிக்கிதா அங்கு வந்திருந்தாள்.

♥தாத்தாவிடம் இரு வார்த்தை பேசிவிட்டு அனுவை வெளியே ஊர் சுற்ற அழைக்க, தாத்தாவை விட்டுப் பிரிய மனமில்லாமல் அப்புறம் போகலாம் நிக்கி என்றாள்.

♥தாத்தா தான் வம்படியாக அனுப்பிவைத்தார். பின்னர் இரண்டு நாட்களில் தாத்தாவின் ஆசியைப் பெற்று சென்னைக்குக் கிளம்பினாள் அனு.

♥அடுத்து எப்போ வருவ தாயி என தாத்தா கேட்க சுதந்திர தினத்தை ஒட்டி சனி ஞாயிறு லீவு வருது தாத்தா அப்போ வரேன். எனக்கு நம்ம நாட்டுல அப்போ நடந்த விடயங்கள் எல்லாம் சொல்லனும் என புன்னகைத்துக் கொண்டே கிளம்பினாள்.

♥சென்னையில் தோழியுடன் ஒரு கைத்தறி துணிகள் விற்கும் கடைக்குச் சென்று நல்ல புடவை வாங்க எண்ணிணாள் அனு. பல புடவைகளினிடையே சுதந்திர தின ஸ்பெஷலாக மூவர்ணத்தில் கைத்தறியில் நெய்யப்பட்ட அழகிய புடவை அங்கு இருந்தது.

♥இதைக் கட்டிக் கொண்டு தாத்தா முன்பு நின்றால் எவ்வளவு சந்தோசப் படுவார். அவர் பட்ட பல காயங்களுக்கு இது சிறு மருந்தாக இருக்கும் என எண்ணினாள்.

♥அன்று சுதந்திர தினம் காலையே குளித்து முடித்து அந்த மூவர்ணப்புடவையை உடுத்தி நீண்ட ஜடை பிண்ணி அதில் கொஞ்சம் பூவைச் சுற்றினாள்.

♥அவளைப் பார்த்த அம்மா, என் கண்ணே பட்டுடும் போல இருக்குமா எனக் கூறி நெட்டி முறித்து இந்தா இந்த டீயைத் தாத்தாகிட்ட கொண்டுபோய்க் குடு. தாத்தா ரொம்ப சந்தோசப்படுவாரு எனக் கூறினாள்.

♥தாத்தா இன்னைக்கு செம ஹாப்பி ஆகப் போகிறார் என மகிழ்வுடன் தாத்தாவின் அறைக்குள் நுழைய தாத்தாவின் அறை இருளாக இருந்தது. விடியற்காலையிலே எழுந்துவிடும் தாத்தா இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தார்.

♥தாத்தா இன்னும் எந்திரிக்கலயா! என அருகில் சென்றவள் 'தாத்தா' என மெதுவாய் அவரின் தோளைத் தொட, நேற்று  நள்ளிரவிலேயே இந்த நாட்டிலிருந்து  சுதந்திரம் கிடைத்துச் சென்றுவிட்டிருந்தார் தாத்தா. ஆம், தாத்தாவின் மூச்சு நின்று போயிருந்தது. தாத்தா எனக் கத்திக் கொண்ட அனு அவர் மீது விழ அவளின் மூவர்ணப் புடவை தேசியக் கொடி போர்த்தியதைப் போல் அவரை அலங்கரித்தது.

♥செவ்வந்தி..

Post a Comment

0 Comments