♥காணாத வேளைகளில்
கண்கள் கலங்கிடுவாள்.
தேசம் கடந்த பிள்ளையை
தேடாமல் பார்க்காமல்
இருந்திடமாட்டாள்...!
♥எதிர்த்து பேசும் பிள்ளையிடம்
எதையும் எதிர்பாராமல் நிற்பாள்.
இறுதியாக சொல்ல அவளிடம்
இருப்பவை இவைதான்...!
♥மகளே! மகனே!
மட்டற்ற மகிழ்ச்சி உண்டாச்சி
வயிற்றில் உன்னை
வடிவம் காணாது சுமக்கையில்...!
♥எட்டி உதைக்கையிலும்
எட்டு வைத்து நீ நடக்கையிலும்
என்னுள்ளே உண்டான
எதிர்பார்ப்புக்கள் ஆயிரமாயிரம்...!
♥பக்கத்து வீட்டாரிடமும்
பகிரங்கமாய் சொல்லி வைத்தேன்
அகிலம் ஆள்வான்
அன்னை பெயர் காப்பான்
என் பிள்ளை என்று...!
♥உண்ணும் உணவு சிந்தினால்
உடனே வசைபாடும் மகளே!மகனே!
எத்தனைநாள் என் கைகளில்
எடுத்திருப்பாய் வாந்தி...!
♥தும்மினால் சேலை நனைகிறது - அதற்காக
துரத்தினாய் மகளே!மகனே!
அடிக்கடி வருகிறது வருத்தம்
அதை காரணம் காட்டி விரட்டினாய்
மகளே!மகனே!
♥இதையெல்லாம் வீட்டினுள்ளே
இருத்திவிட்டு இருமாப்புடன்
எல்லோரிடமும் சொன்னேன்...!
எஐமானியாக நடந்து கொள்கிறேன்
என் மகள்/மகன் வீட்டில் என்று...!
♥புடைவை வாங்கி தந்தாய்
புண்ணியவான் திருந்திவிட்டான் என
முதலிலே நினைத்தேன்
முகநூலிலே பதிவிடத்தான் இந்நாடகம்
பின்னாளிலே அறிந்து கொண்டேன்...!
♥ஆசையாய் ஓடிவரும் பேத்தியிடம்
அன்பாய் பேசுவதற்கும்
என் மகள் / மகன் நீ
என்னை அனுமதிக்கவில்லை...!
எனது துயர் அறியவில்லை...!
♥கட்டிலில் பொம்மையானேன்...!
காகிதத்தில் எழுத்தென ஆனேன்...!
பூட்டாத வீட்டினுள்ளே
பூட்டியே கிடந்தது
என் மனம்...!
♥மரணம் தொடும் வேளையிலே
மகளே! மகனே! ஒன்றை கூறுகின்றேன்
கேள்!
கேட்டுவிட்டு கண்கலங்காதே
தாங்கிடாது உன் அன்னை மனம்!
♥அன்பை கிள்ளிக்குடு உன் பிள்ளைக்கு!
அன்னையை மறந்துவிடாதே சொல்லிக்கொடு!
ஆண்டவன் அன்னை என கற்றுக்கொடு!
ஆதரவு அன்னை மட்டுமே என்றிடச்சொல்!
♥வயது போகும் காலத்தில்
வாந்தி வந்தால் உன் கைகள்
ஏந்திக் கொள்ள வேண்டும் என்று சொல்!
தள்ளாடும் வயதினிலே
தாங்கிக்கொள்ள எனது பிள்ளை
நீ வேண்டும் என்று சொல்!
♥நான் பட்ட கஷ்டங்கள்
உனக்கு வேண்டாம் மகளே!மகனே!
ஊருக்கும் தெரிய வேண்டாம்
உள்ளுக்குள் நடந்த கொடுமைகள்...!
♥அடுத்த ஜென்மத்தில் - உன்
அன்னையாகவே பிறக்க எண்ணி
விடைபெறுகின்றேன் மகளே/மகனே...!
♥அஷ்வினி வையந்தி- இலங்கை
கங்குவேலி.
0 Comments
Thank you