♥சொந்த பந்தம்
♥''ஏங்க... எத்தனை நாளா சொல்றேன்... பெருசுக ரெண்டையும், வீட்டை காலி செய்ய சொல்லுங்கன்னு...'' என்று மனைவி சாரதா சொன்னதும், ''அவுக பாட்டுக்கு இருக்காங்க; நமக்கு என்ன தொந்தரவா கொடுக்கிறாங்க... சும்மா இதையே சொல்றே...'' என்றான் பரமசிவம்.
''உங்களுக்கென்ன... வேலை, வெட்டின்னு போயிடுவீங்க... வீட்டுல இருக்கிற எனக்குல தெரியும்... தினம் ஏதாவது, சீனி, சீரகம்ன்னு கேட்டுட்டே இருக்குது அந்த பாட்டி.''
''பெரியவர் குப்புசாமி பென்ஷன் வாங்கியதும் மளிகை சாமான் எல்லாம் வாங்கிப் போடுறாரே... அப்புறம் என்னவாம்...''
♥''அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சிக்கனம்... காலையில பேப்பர் வந்ததும் மொத ஆளா அவரு படிச்சிட்டு, அப்புறம் தான் நாம படிக்கணும். சொந்தமா ஒரு பேப்பர் வாங்கிக்க வேண்டியது தானே... ஓ.சி.,பேப்பர்; ஓ.சி., 'டிவி' இப்படியே காலத்த ஓட்டுதுக,'' என்றாள் எரிச்சலுடன்!
''விடு; அவர் படிக்கிறதால, பேப்பர்ல எழுத்தா குறைஞ்சிடுது; இல்ல, 'டிவி' கேபிள்காரன் தான் கூட பணம் கேட்கிறானா... நாம காலையில வேலை, வெட்டியா இருக்கோம்; அவர் ஓய்வா வீட்ல இருக்கிறவர்; அவருக்கும் நேரம் போகணுமில்ல...''
'
♥'அது சரி... ராசி பலன் பாக்கலாம்ன்னா கூட, பெரியவர் ஒரு எழுத்து விடாம, படிச்சப்புறம் தான் பாக்க வேண்டியிருக்கு...''
''பேப்பர் பாக்கணும்ன்னு சொன்னா, கொடுத்துட போறார். இதெல்லாம் மனசுல வச்சுகிட்டா, பெரியவர வீட்டை காலி செய்ய சொல்றே...''
''அதெல்லாம் ஒண்ணுமில்ல; அவரு ராத்திரியெல்லாம், 'லொக்கு லொக்கு'ன்னு இருமுறதுடன், கண்ட இடத்துல காறி துப்புறாரு. நம்ம பய, தாத்தா தாத்தான்னு அங்க போறான்; அவருக்கு என்ன எழவு இருமலோ... பிள்ளைக்கு ஒட்டிகிடுச்சுன்னா, நாம தானே அவதிப்படணும்.''
♥''வயசானாலே அப்படித்தான்... மூட்டு வலி; இடுப்பு வலி; இருமல்ன்னு இப்படி ஏதாவது வரத் தான் செய்யும். தாத்தா இருமினா ஓடியாந்துடுன்னு, பிள்ளைகிட்ட சொல்லி வை,''என்றான் பரமசிவம்.
''நான் அவங்கள காலி செய்ய சொல்றதுக்கு, வேற காரணமும் இருக்குங்க,'' என்று பீடிகை போட்டாள், சாரதா.
''என்ன காரணம்?''
''இவங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு குடி வந்து, மூணு வருஷமாச்சு; ஊருல, மகன் குடும்பத்தோட இருக்கான்னு சொல்றாங்க... ஆனா, மகன், மருமகள், பேரன், பேத்தி, சொந்த பந்தம்ன்னு இதுவரை யாரும் இவங்கள வந்து பாக்கல; ஒரு கடுதாசியோ, போனோ வந்ததில்ல...''
♥''ஆமா... நீ சொல்றத பாத்தா, இவங்களுக்கு யாருமே இல்லாதது போல தான் தெரியுது.''
''அதுதான் சொல்றேன்... ரெண்டு பேரும் வயசானவங்க; திடீர்ன்னு மண்டைய போட்டுட்டா... யாருக்கு சொல்லி விடுறது... என்ன செய்றதுன்னு யோசிச்சு பாத்தீங்களா... இதெல்லாம் மனசுல வெச்சு தான், அவங்கள வீட்டை காலி செய்ய சொல்லுங்கன்னு சொல்றேன்,'' என்றாள்.
''நீ இப்ப சொன்ன விஷயம், யோசிக்க வேண்டியது தான்; ஒண்ணு செய்வோம்... வீட்டை காலி செய்யுங்கன்னு சொல்றத விட, அவங்களா காலி செய்து போறாப்புல, வீட்டு வாடகைய உசத்தி கேட்போம்.''
''நல்ல யோசனை தான்; கூடுதலா எவ்வளவு வாடகை கேப்பீங்க?''
♥''இப்ப, மூவாயிரம் ரூபா கொடுக்கிறாங்க; கூட ஒரு ஐநூறு சேத்துக் கேப்போம்.''
''கேட்டா கொடுத்துட்டு, 'டேரா' போடுவாங்க; ரெண்டாயிரம் அதிகமா கேளுங்க; அப்பத்தான் காலி செய்துட்டுட்டு போவாங்க,'' என்றாள்.
தலையசைத்தான் பரமசிவம்.
மறுநாள் காலை, வழக்கம் போல பத்திரிகை படிக்க வந்த குப்புசாமியிடம் பேச்சை துவக்கினான், பரமசிவம்...
''ஐயா... உங்ககிட்ட ஒண்ணு சொல்லணுமுங்க...''
''என்ன தம்பி... சொல்லுங்க?''
♥''இப்ப பாருங்க... விலைவாசி எல்லாம் கூடிப்போச்சு; 'செப்டிக் டாங்க்' சுத்தம் செய்றவன் கூட, எவ்வளவு கேட்டான்னு அன்னிக்கு நீங்களே பாத்தீங்களே... அதோட, வீட்டு வரியையும் பஞ்சாயத்துல எக்கச்சக்கமா உசத்திட்டாங்க. வீட்டை பராமரிப்பதே, பெரிய காரியமா இருக்கு; அதனால நீங்க வீட்டு வாடகைய, கூடுதலா கொடுத்தீங்கன்னா, உதவியா இருக்கும்.''
''எவ்வளவு கூடுதலா கேக்குறீங்க?''
''இப்ப மூவாயிரம் ரூபா தர்றீங்க; இந்த மூணு வருஷமா, உங்ககிட்ட வாடகைய உயர்த்தி கேக்கல. அதனால, கூட ரெண்டாயிரம் சேர்த்து, மாசம் ஐயாயிரம் ரூபாய கொடுத்திடுங்க,'' என்றான்.
♥''ஐயாயிரமா...'' என்று அதிர்ச்சியுடன் குப்புசாமி கேட்க, ''அவ்வளவு பணம் கொடுக்க முடியாதுன்னா, உங்களுக்கு கட்டுபடியாகிறது போல, வேற வீடு பாத்துக்குங்களேன்...'' என்றான், பரமசிவம்.
''வேற வீடு பாத்துக்கவா சொல்றீங்க.''
''உடனே இல்ல... மூணு மாச டயம் கொடுக்கிறேன். அந்த மூணு மாசமும், பழைய வாடகைய தந்தா போதும். அதையும் கூட, 'அட்வான்ஸ்' பணம், 15 ஆயிரத்துல இருந்து கழிச்சுக்கிறேன். இல்ல இதே வீட்டுல இருக்கிறதுனா, மாசம், ஐயாயிரம் ரூபாய் வாடகையோடு, அட்வான்சில, 10 ஆயிரம் ரூபா உசத்தி கொடுக்கணும். எப்படியோ, உங்க சவுகரியப்படி நடந்துக்குங்க,'' என்றான்.
♥பெரியவர் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை, பரமசிவம் கவனிக்காமல் இல்லை. எப்படியும் அவர்களை காலி செய்ய வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், பேச்சில், சற்று கடுமை காட்டி, தன் வீட்டிற்குள் சென்று விட்டான், பரமசிவம்.
பத்திரிகையை, கையில் பிடித்தபடி, பிரமை பிடித்தவர் போல நின்றிருந்தார், குப்புசாமி. வீட்டின் கதவின் பின்புறம் நின்று இதையெல்லாம் கவனித்த சாரதா, கணவன் வீட்டிற்குள் வந்ததும், புன்னகையுடன், ''சூப்பர்,'' என பாராட்டினாள்.
♥படிக்கும் மனநிலை போய் விட்டதால், பத்திரிகையை மடித்து வைத்து விட்டு, தன் போர்ஷனுக்கு சென்றார், குப்புசாமி.
கணவரின் முக வாட்டத்தைக் கண்டு, ''வீட்டுக்கார தம்பி, என்ன சொன்னார்; ஏன் வருத்தமா இருக்கீங்க?'' என்று கேட்டாள், மனைவி காமாட்சி.
''வீட்டு வாடகை, ரெண்டாயிரம் ரூபா சேர்த்து, மாசம் ஐயாயிரம் ரூபாயா கொடுக்கணுமாம்...''
''திடீர்ன்னு இவுகளுக்கு என்ன வந்துச்சு; ஏன் இப்படி அடாவடியா கேட்குறாங்க?''
''அதோட மட்டுமில்ல... அட்வான்ஸ்லயும், 10 ஆயிரம் ரூபா அதிகம் கேக்குறாங்க.''
''கொடுக்காட்டி...''
♥''மூணு மாசத்துக்குள்ள நம்ம சக்திக்கு தக்க வேற வீடு பாத்துக்க சொல்றார்.''
''வேற எங்கே போறது... வாடகையும், அட்வான்சும் கூடுதலாக கேக்க என்ன காரணமாம்...''
''ஏதோ, வீட்டு பராமரிப்பு செலவு, வீட்டு வரி எல்லாம் கூடுதலாயிடுச்சுன்னு சொல்றாங்க....''
''அதுக்காக, இப்படி ஒரேடியாவா ரெண்டாயிரம் ரூபா கூடக் கேக்கிறது...''
''இதிலிருந்து என்ன தெரியுதுன்னா, நம்மள வீட்டை காலி செய்ய வைக்குறதுல தான் குறியா இருக்காங்க.''
♥''இப்ப என்ன செய்றது... வேற வீட்டை பாருங்க; உங்க கூட, 'வாக்கிங்' வர்றவங்க கிட்ட சொல்லுங்க... வாடகை ஐயாயிரம் ரூபாய கொடுத்துட்டு, வயித்துல ஈரத்துணியையா போட்டுக்கிறது; காபி ஆறிப் போச்சு; சுட வச்சு எடுத்து தாரேன்,'' என்று சமையலறைக்குள் சென்றாள்.
காபியை எடுத்து வந்த போது, கணவர், படுக்கையில் படுத்திருப்பதை பார்த்தவள், ''எந்திரிங்க... என்ன காலையில படுக்கை... காபியை குடிங்க. கட்டுனவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு பல வீடும்பாங்க... பகவான், நமக்கு நல்ல வழி காட்டுவான்,'' என்று தேறுதல் சொன்னாள், காமாட்சி.
♥''நாம பெத்த புள்ள, நம்மள கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு நம்பி, வீட்டை அவன் பேருக்கு எழுதிக் கொடுத்தோம்; வீடு கைமாறிய கொஞ்ச நாள்லயே, 'வீடு புழக்கத்துக்கு போதல; நீங்க எங்காவது வாடகைக்கு வீடு பாத்துக்கங்க'ன்னு சொல்லிட்டான்; மருமக பேச்சும் சரியில்ல.
''அதனால, கோவிச்சுட்டு, எல்லாத்தையும் போட்டுட்டு பென்ஷனை நம்பி, இந்த ஊருக்கு குடி வந்தோம்; பிள்ளையா அவன்... கல்யாணத்துக்கு முன்னே, நம்ம மேலே எப்படி பாசமா இருந்தான்; இப்படி மாறிட்டானே...''
♥''இப்படி மாறுவான்னு தெரிஞ்சா, அவனுக்கு கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்,'' என்றார், குப்புசாமி.
''நாம அவனுக்கு கல்யாணம் கட்டி வைக்கல; அவனை நாம கட்டி கொடுத்துட்டோம். அவன் பேச்சு எதுக்கு இப்போ...'நீ எங்க புள்ள இல்ல; நாங்க செத்தாலும், எங்க பொணத்துல முழிக்காதே'ன்னு சொல்லிட்டுத் தானே வந்தோம்,'' என்றாள், காமாட்சி.
''சரி, அவன் பேச்சை விடு... இப்ப நாம எங்கே குடிபோறதுன்னு யோசி.''
''இதுல யோசனை என்ன இருக்கு... உங்க, 'வாக்கிங்' நண்பர்கள்கிட்ட சொல்லிப் பாருங்கன்னு ஏற்கனவே சொன்னேன்ல...''
''ஆமாமா... அப்படித் தான் செய்யணும்.''
நாட்கள் நகர்ந்தன; ஆனால், வீடு தான் அமைந்தபாடில்லை.
வாக்கிங் சென்று வீடு திரும்பி வந்த குப்புசாமி, சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்தார்.
♥''என்னங்க... உங்க நண்பர்கள் வீடு பத்தி ஏதாவது தகவல் சொன்னாங்களா?''
''இந்தா, அந்தான்னு ரெண்டு மாசமா பாக்குறேன் பாக்குறேன்னு சொல்றாங்க; ஒருத்தரும் பாத்து சொன்ன பாடில்ல. மூணு மாச, 'டயம்' முடிய போகுதுன்னு, இன்னிக்கு கெஞ்சலா கூட கேட்டுட்டேன். வாடகை ஆறாயிரம் ரூபாய்க்கு குறைஞ்சு வீடு இல்லயாம்; பள்ளிக்கூட பசங்கள படிக்க வைக்க, பக்கத்து ஊர்கள்ல இருந்து குடும்பத்தார்கள் வந்ததால, வீட்டுக்கு கிராக்கி அதிகமாயிடுச்சாம்.''
''அப்படீன்னா, வேற வீடே கிடைக்காதா?''
''ஐயாயிரத்துக்கு குறைஞ்ச வாடகையினா, டவுனுக்கு வெளியே, புது குடியிருப்புகள்ல தான் கிடைக்குமாம்.''
♥''அப்படித்தான் பாருங்களேன்...''
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த பரமசிவம், ''மூணு மாச டயம் முடிய, இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு; வீடு ஏதும் பாத்தீங்களா...'' என்று கேட்டான்.
''பாக்குறேன்; தோதா கிடைக்கலயே...''
''எனக்கு தெரிஞ்ச புரோக்கர் ஒருத்தர வரச் சொல்லியிருக்கேன்... அவருகிட்டே சொன்னா, உங்களுக்கு தோதா வீடு பாத்து கொடுப்பார்; கவலைப்படாதீங்க,'' என்றான், பரமசிவம்.
''ரொம்ப சந்தோஷம் தம்பி... அவர் எப்போ வருவார்...''
''போன் செய்துருக்கேன்; வந்துட்டு இருக்கார்.''
♥சிறிது நேரத்தில், புரோக்கர் வந்ததும், அவரிடம் நிலைமையை கூறி, குப்புசாமிக்கு அறிமுகப்படுத்தி, ''ஐயா... இவர் தான் புரோக்கர்; நான் எல்லா விபரங்களையும் இவர்கிட்ட சொல்லிட்டேன்,'' என்றான் பரமசிவம்.
''ஒரு வீடு இருக்கு; அதுல ரெண்டு ரூம். ஒரு ரூம்ல வீட்டுக்காரங்க சாமான்கள போட்டுப் பூட்டி வச்சிருக்காங்க. மத்த ஒரு ரூம், ஹால், கிச்சன், அட்டாச்ட் பாத்ரூம், டாய்லெட் எல்லாம் நீங்க புழங்கிக்கலாம். வாடகை மூவாயிரம் தான். வீட்டு ஓனர் மும்பையில இருக்கிறார்; வீடு என் பொறுப்பில் தான் இருக்கு. வாங்க... வீட்டை பாருங்க; புடிச்சா, அட்வான்ஸ், 15 ஆயிரம் கொடுங்க. என்ன சொல்றீங்க?''
♥''வாங்க வீட்டை பாக்க போகலாம்,'' என்று சொல்லி, சட்டையை மாட்டி, புறப்பட்டார் குப்புசாமி.
''உங்க வீட்டம்மாவையும் கூட்டிட்டு வாங்க; அவங்களுக்கும் வீடு புடிக்கணும்ல...'' என்றதும், சிறிது நேரத்தில், தன் கணவர் மற்றும் புரோக்கருடன் வீடு பார்க்க புறப்பட்டாள், காமாட்சி. ஒருவித நிம்மதியுடன் இருந்தனர், பரமசிவம் தம்பதியினர்.
வீட்டை பார்த்து திரும்பி வந்த குப்புசாமியும், காமாட்சியும் தங்கள் போர்ஷனுக்கு செல்ல, புரோக்கர், பரமசிவம் வீட்டிற்குள் சென்றார்.
''வீடு எனக்கு பிடிச்சிருக்கு; அக்கம்பக்கம் வீடுகள் இருந்தாலும், இனிமேல் தான், பழக்கம் ஏற்படுத்திக்கணும். அவர்கள் எப்படி இருப்பாங்களோ... பேங்க், கடைகளுக்கு போகணும்ன்னா, கொஞ்ச தூரம் தான். நீ என்ன நினைக்குற காமாட்சி?''
'
♥'பரவாயில்ல... தண்ணி, காத்து எல்லாம் நல்லா தான் இருக்குது. இங்கே ஒரே வீட்டில், ஒரு போர்ஷன்ல இருக்கோம். எதுவானாலும், வீட்டுக்கார தம்பியையும், அவர் மனைவி சாரதாவையும் அவசரத்துக்கு கூப்பிட்டுக்கலாம்; அதோட இந்த வீட்டு குட்டிப் பையனோட பேச்சும், சிரிப்பும் நம்ம கவலைய மறக்கடிச்சிருச்சு; இது இருக்காது அங்கே...'' என்றாள்.
''நீ சொல்றது வாஸ்தவம் தான்; இந்த வீட்டில ஏதோ நம்ம உறவுகளோட, பாதுகாப்பா இருக்கிற மாதிரி இருந்துச்சு; இது அங்கே கிடைக்காது,'' என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், பரமசிவத்திடம் புரோக்கர், ''அவங்களுக்கு வீடு புடிச்சு போச்சுன்னு நினைக்கிறேன்; ஆனா, தனி வீட்டுல இருக்கணுமேன்னு யோசிப் பாங்க போலிருக்கு. நீங்க ரெண்டு பேரும், இவங்கள எப்படியும் காலி செய்ய வச்சிடணும்ன்னு சொன்னதால தான், நான் வாடகையை வீட்டுக்காரங்க சொன்ன, நாலாயிரம் ரூபாயில இருந்து மூவாயிரமா குறைச்சேன்,'' என்றார்.
♥''ரெண்டு பேரும், ரொம்ப வயசானவங்க; ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துச்சுன்னா, நமக்குல்ல சுமையாயிடும். இந்த மூணு வருஷமா, இவங்கள யாரும் வந்து பாத்ததில்ல; இவங்களும் எங்கேயும் போனதில்ல. ஏதாவது ஆச்சுன்னா, நாம யாருக்கு சொல்றது, என்ன செய்றது... அதுக்கு தான் இந்த ஏற்பாடு. உனக்கு கமிஷன் நான் தாரேன்; அவங்ககிட்ட கேக்காத. சாமான்களை ஏத்திப்போற செலவையும், நானே ஏத்துக்குறேன்,'' என்றான் பரமசிவம்.
''அப்படீன்னா, இவங்க ரெண்டு பேரும் யாரோட ஆதரவும் இல்லாம இருக்காங்கன்னா சொல்றே?''
''அப்படித்தான் நினைக்கிறோம். இதுவரை இவங்களுக்கு ஒரு போனோ, கடுதாசியோ கூட வந்ததில்ல; இவங்களும் யாருக்கும் போன் செய்தது இல்ல...'' என்றான், பரமசிவம்.
♥அச்சமயம், ஏதோ சொல்ல வந்த குப்புசாமியின் காதில் புரோக்கரும், பரமசிவமும் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. சற்றுநேரம், அப்படியே அசைவற்று நின்றவர், பின், ஏதும் அறியாதவர் போல, அவர்களிடம் சென்றார்.
''வாங்க உக்காருங்க... பொருட்களை ஏத்திப் போக ஆட்களுக்கும், வண்டிக்கும் சொல்லிட்டேன்; நாளை நல்ல நாள்; போய் பால் காய்ச்சிடுங்க.''
பரமசிவத்தின் அவசரம், குப்புசாமிக்கு இப்போது நன்றாகவே புரிந்தது. அவன் பயப்படுவதிலும் நியாயம் இருக்கிறது என, உணர்ந்தார் குப்புசாமி. அட்வான்சில், மூன்று மாத வாடகையை கழித்து, மீதம் ஆறாயிரம் ரூபாய் கொடுத்தான், பரமசிவம். தன்னிடமிருந்த ஒன்பதாயிரத்தையும், அதனுடன் சேர்த்து, புரோக்கரிடம் அட்வான்ஸ் கொடுத்ததும், வீட்டு சாவியை கொடுத்தார், புரோக்கர்.
♥மறுநாள் காலை, பரமசிவம் ஏற்பாட்டின்படி, இரண்டு கூலி தொழிலாளிகளுடன், ஒரு வேன் வாசலில் வந்து நின்றது. இரவோடு இரவாக, பொருட்களை மூட்டை கட்டி வைத்திருந்தார் குப்புசாமி. பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, அவரிடம், 'டிவி - பிரிட்ஜ்' என, ஏதுவும் இல்லை. தட்டு முட்டு சாமான்கள், அடுப்பு, காஸ் சிலிண்டர், இரண்டு கட்டில்கள், இரண்டு சேர், ஒரு ஸ்டூல், துணிகள் உள்ள இரண்டு பெட்டிகள், கட்டை பையில் சில புத்தகங்கள்.
கூலி ஆட்கள், சாமான்களை வேனில் ஏற்றினர்.
♥பரமசிவம் குடும்பத்தாரிடம் இருந்து விடைபெற்று, வேனில் ஏறுமுன், பரமசிவம் கையை பிடித்து, சாவியை கொடுத்த குப்புசாமி, ''மறந்துடாதீங்க... வீட்டுக்குள்ளே போய் பாருங்க,'' என்று நா தழுதழுக்க கூறி, வேனில் ஏறினார்.
வேன் புறப்பட்டு சென்றதும், பொருட்கள் எதையும் மறந்து விட்டு சென்றிருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய, குப்புசாமி குடியிருந்த போர்ஷனுக்குள் சென்றனர், பரமசிவமும், சாரதாவும்!
கபோர்டில், 50 ஆயிரம் ரூபாய் பணமும், ஒரு கடிதமும் இருந்தது. கடிதத்தை எடுத்த பரமசிவம் வாய் விட்டு படிக்க, ஆர்வமுடன் கவனித்தாள், சாரதா.
♥மகன் பரமசிவத்துக்கும், மருமகள் சாரதாவுக்கும், பேரன் கோபிக்கும் ஆசிர்வாதங்கள். பெற்ற பிள்ளையால் துரத்தப்பட்டதால், அனாதையாக தான் உங்கள் வீட்டிற்கு குடி வந்தோம். உங்கள் எல்லாருடைய அன்பும், அரவணைப்பும், குறிப்பாக, பேரன் கோபியின் ஒட்டுதலும், நாங்கள் அனாதைகள் இல்லை என்ற மன ஆறுதலை அளித்தது. எங்களுக்கு மரணம் சம்பவித்தால், என்ன செய்வது என்ற உங்களின் தவிப்பும், கவலையும் எனக்கு புரிகிறது. இக்கடிதத்துடன், 50 ஆயிரம் ரூபாய் வைத்திருக்கிறேன். நீங்கள் நினைப்பது போல, ஒருவேளை எங்கள் முடிவு ஏற்படுமானால், பிள்ளை ஸ்தானத்திலிருந்து, எங்களை நல்லடக்கம் செய்ய வேண்டுகிறேன். இந்த உதவியை மறுக்காமல் செய்ய வேண்டுகிறோம். அனாதையாக வந்தோம்; ஆதரவுடன் இந்த மூன்று ஆண்டுகள் வாழ்ந்தோம்; அனாதையாக செல்கிறோம்.
♥நன்றியுடன் குப்புசாமி...
ஏதோ குற்ற உணர்வு மேலிட, கண்கலங்கியவாறு கணவரை பார்த்தாள், சாரதா. பணத்தையும், கடிதத்தையும் சாராதவிடம் கொடுத்து, தன் ஸ்கூட்டியை எடுத்து விரைந்தான், பரமசிவம்.
வேனில் இருந்து பொருட் களை இறக்கிய குப்புசாமி தம்பதி வீட்டை திறக்கவும், பரமசிவம் ஸ்கூட்டியில் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. பரமசிவத்தை கண்ட குப்புசாமியும், காமாட்சியும் முகம் மலர்ந்து, 'வாங்க... வாங்க...' என்று வரவேற்க, அவனோ திறந்த வீட்டை பூட்டி, சாவியை எடுத்து, ''ரெண்டு பேரும் வேனில் ஏறுங்க,'' என்றான்.
♥இருவரும் புரியாமல் பார்க்க, ''உங்க மகன், மருமகள், பேரனோடு வந்திருங்காங்க; புறப்படுங்க.''
''அவங்க எப்படி இங்கே வந்தாங்க... நாங்க எங்க விலாசத்தையே கொடுக்கலயே!''
''எப்படியோ விசாரிச்சுட்டு வந்திருங்காங்க.''
குப்புசாமி தம்பதியுடன் திரும்பியது வேன்.
வேகமாக வீட்டிற்குள் நுழைந்து, தங்கள் மகன், மருமகளை தேடினர், குப்புசாமி தம்பதி.
''என் மகன் குடும்பத்துடன் வந்திருப்பதாக சொன்னீங்களே... யாரையும் காணோமே...'' என்றார், குப்புசாமி.
'
♥'இதோ உங்க முன் நிற்கிறது யாரு... உங்க மகன் நான்; மருமகள் சாரதா; பேரன் கோபி.''
ஒன்றும் புரியாமல், வியப்புடன் நின்றனர், குப்புசாமியும், காமாட்சியும்!
''அப்பா... நீங்க ரெண்டு பேரும் உங்க ஆயுள் முழுவதும் இங்கேயே இருங்க. உங்க கடிதத்தை படிச்சதும், எங்க பெற்றோர் உயிரோடு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்தாங்க புடிங்க பணத்த... சாவியை கொடுத்து, புரோக்கரிடம் அட்வான்சையும் வாங்கித் தாரேன்,'' என்றான் பரமசிவம்.
♥''அப்படீன்னா, வாடகை பாக்கி ஒம்பதாயிரம் நான் தரணுமில்லயா... அதையும், அட்வான்சையும் வாங்கிடுங்க.''
''அப்பாகிட்டே, மகன் யாராவது வாடகை வாங்குவானா...''
குப்புசாமி, காமாட்சி கால்களில் விழுந்து ஆசிர்வதிக்க வேண்டினர், பரமசிவம் தம்பதி.
''ஹை... தாத்தா, பாட்டி வந்துட்டாங்க,'' என்று அவர்களை கட்டிக் கொண்டான், பேரன் கோபி.
சொந்தமென்று வந்ததெல்லாம் பந்தமும் இல்லை; ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை... என்ற பழைய திரைப்பட பாடல், எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்தது.
♥என்.ரிஷிகேசன்
0 Comments
Thank you