படித்ததில் பிடித்தது!!!
#திரௌபதி
ஐந்து கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி எப்படிப் பத்தினியள் ஒருவராக ஆனாள்?
5 கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
5 கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து
தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.
இன்றைக்கும் கணவனைப் பிரிந்த மனைவியரும் சரி, இல்வாழ்க்கை நன்கு அமைய வேண்டுபவரும் சரி. திரெளபதி அம்மன் கோவிலில் “தீ மிதி” என்னும் பூக்குழியில் இறங்கித் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்வதைப் பார்க்க முடியும்.
ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு ஏற்கெனவே சந்தேகம். இந்தப் பெண்மணி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். என்று. அதுவும் இப்போது கிருஷ்ணர் வேறு வந்திருக்கிறார்.
திரெளபதிக்கு அண்ணன் முறை. அவர் முன்னால். பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.
பீமனுக்குக் கோபம் வந்தது. என்றாலும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து, தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. ‘கிருஷ்ணா, உனக்கே இது நியாயமா? இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயானால் சிரிக்கிறாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!’ என்று கேட்டான்.
கிருஷ்ணர் சொன்னார்: ‘பீமா, நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்!
இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?” என்று கேட்டார். ‘ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரும்பி வருவாள்.’ என பீமன் சொல்ல, ‘அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?’ என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ, ‘புடம் போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.’ என்று சொல்கிறான்.
‘பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்.’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன்.
‘அங்கே பார்!’ என்கிறார். என்ன ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.
‘பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ,
அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள்.
உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்.’ என்கிறார்.
நன்றி....
0 Comments
Thank you