HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அம்பை

அம்பை!
♥ஆங்காங்கே கிழிந்த அழுக்கேறிய சேலையும், எண்ணெய் கண்டு பல மாதங்களான கூந்தலுமாக, ஆடுகள் முன்னால் செல்ல, ஒரு கையில் தூக்கு வாளியும், மறு கையில் ஆடு விரட்டும் கோலுமாக, ஆடுகளை ஒழுங்குபடுத்தியவாறு சென்று கொண்டிருந்தாள் அம்பை. காலம், அவள் வாழ்க்கையை மட்டுமல்ல, வனப்பையும் கொள்ளையடித்திருந்தது. அவள் செல்வதையே பார்த்தபடி நின்றிருந்த நான், ''அம்பை...'' என்றேன் உரத்த குரலில்!
அவள் காதில் விழுந்ததா, இல்லையா என்று தெரியவில்லை; திரும்பிப் பார்க்காமல், காலுக்கு பொருந்தாத தோல் செருப்பை இழுத்து இழுத்து, நடந்து சென்று கொண்டிருந்தாள்.
♥தெருவில் சென்ற ஒரு பெண், ''ஏம்மா... அந்த ஊமச்சியவா கூப்பிடுறீங்க... நீங்க பாட்டுக்கு அம்பைன்னு புரியாத பேர்ல கூப்பிட்டா, அது எப்படி திரும்பிப் பார்க்கும். ஊமச்சின்னு அதோட பேரச் சொல்லி கூப்பிடுங்க,'' என்று சொல்லி, என்னை கடந்து சென்றாள். சில அடி தூரத்தில், என் முன் சென்று கொண்டிருந்த அம்பையையே பார்த்தபடி நின்றிருந்தேன்.
♥என் நினைவுகள், கிட்டத்தட்ட, 45 ஆண்டுகள் காலவெளியை கடந்து சென்றது.
இப்போது போல் மக்கள் இரைச்சலும், வாகன நெரிசலும் இல்லாத அமைதியான ஊர், கோட்டூர். நானும், அம்பையும் ஒன்றாக பள்ளிக்கு சென்று, ஒரே வகுப்பில் படித்து, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். எதிரெதிர் வீடும் கூட! அந்தத் தெருவிலேயே பெரிய வீடு, அம்பையின் வீடு தான். பொதுவாக, கிராமத்தில் எல்லாருடைய வீட்டிலும் திண்ணை உண்டு என்றாலும், அம்பையின் வீட்டுத் திண்ணையில், பத்துப் பேர் தாராளமாக படுத்து உருளலாம். அவ்வளவு விசாலம். முக்கோண சைசில் சுற்றிலும் அறைகள் இருக்க, நடுவில், பெரிய முற்றம் இருக்கும். நிலவறையில் இருக்கும் தானியக் கிடங்கில், ஒளிந்து விளையாடுவோம்.
♥பின்புறம், ஏழெட்டு பால் மாடுகளும், நான்கைந்து ஜல்லிக்கட்டு மாடுகளும் கட்டப்பட்டிருக்கும். அம்பையின் அப்பாவிற்கு, ஜல்லிக்கட்டு விளையாட்டு மேல் ரொம்ப இஷ்டம். ஊர் ஊராக ஜல்லிக்கட்டு விழாவிற்கு மாடுகளை அழைத்துச் சென்று, பரிசுகளுடன் வருவார்.
உள்ளூர் துவக்கப் பள்ளியில், இருவரும் ஐந்தாம் வகுப்பு வரை இணைந்தே படித்தோம். அதற்குபின், இருவரின் வீட்டிலுமே, படித்தது போதும் என்று நிறுத்தி விட்டனர். இந்நிலையில், அம்பையின் அம்மா காலரா கண்டு இறக்க, பெரும்பாலான நேரங்களில் அம்பை என் வீட்டிலேயே இருப்பாள். எந்த கட்டுப்பாடும் இல்லாமல், வாய்க்கால், வரப்பு, காடு மேடு என, கவலையில்லாமல், பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தோம்.
♥ஒருநாள், வழக்கம் போல், நானும், அம்பையும் ஆற்றிற்கு குளிக்கப் போனோம். அப்போது, பருவ வயதின் துவக்கமான, 15 வயதுகளில் இருந்தோம். கொடி போன்ற உடலும், நீண்ட கூந்தலும், சந்தன நிறமுமாக, அம்மன் ஓவியம் ஒன்று, உயிர் பெற்று வந்ததைப் போல், அவ்வளவு அழகாக இருப்பாள் அம்பை. ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென வெள்ளம் வந்துவிட்டது.
தூரத்தில், மரம் மட்டைகளை அடித்தபடி ஆக்ரோஷமாக வரும் வெள்ளத்தை பார்த்ததும், 'டீ அம்பை... ஆத்துல வெள்ளம் வருதுடி; வெரசா ஓடியா...' என்றேன் பதற்றத்துடன்!
♥இருவரும் வேகமாக கரையேறிய தருணம், ஆற்று வெள்ளம், எங்கள் கால்களை இழுக்க, நான் அருகில் இருந்த நாணல் வேரை இறுகப்பற்றி கரையேறி விட்டேன். ஆனால், அம்பையை தண்ணீர் இழுத்துச் சென்றது. நான் கத்தி கூப்பாடு போடுவதைக் கேட்ட, எதிர் கரையில் நின்றிருந்த இளைஞன், ஆற்றில் குதித்தான். மரக்கிளையை பற்றியபடி வெள்ளத்தோடு சென்றவளை எப்படியோ காப்பாற்றி விட்டான்.
அச்சம்பவமே, அவர்களின் காதலுக்கும் காரணமாகி விட்டது. செல்வனும் வசதியான வீட்டுப் பிள்ளை தான். பக்கத்து ஊரான சீலையம்பட்டியைச் சேர்ந்த அவன், மதுரையில் ஒரு கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தான்.
♥என் அண்ணனை எப்படியோ நட்பாக்கி, விடுமுறையில் ஊருக்கு வரும் போதெல்லாம், எங்கள் வீட்டிற்கு வருவது போல், அம்பையை பார்க்க வருவான்.
இப்படி இவர்கள் காதல், ரகசியமாக வளர்ந்து வருகையில் தான், அம்பையின் வாழ்வை புரட்டிப் போடும் அந்த சம்பவம் நிகழ்ந்தேறியது.
பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாள்; பல ஊர்க்காரர்கள், மாடுகளுடன் ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கு வந்திருந்தனர். ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
♥ஊர் மந்தையில், ஜல்லிக்கட்டு மும்முரமாக நடைபெற, கூட்டத்தில், செல்வனும், அம்பையும் யாருக்கும் தெரியாமல், ஜாடையில் பேசி மகிழ்ந்த அந்த தருணத்தில், அம்பையின் அப்பா, ஒலிபெருக்கியில், 'என்னாங்கடா மாடு அடக்குறீங்க... கன்னுக்குட்டி வாலைப் புடிச்சு தொங்கிட்டு... இதுக்குப் போயி அண்டா, கொப்பரை பரிசு வேற... இப்போ சொல்றேன்டா... இங்க இருக்கிற, அத்தன ஊர்க்காரனும் கேட்டுக்கங்க... உங்கள்ல மீசை வச்ச உண்மையான ஆம்பள எவனாவது இருந்தா, என் செவலைக் காளைய அடக்கிருங்கடா பாப்போம்...' என்றார் குடி போதையில்!
'ஏய்... வார்த்தைய அளந்து பேசுப்பா... மாட்ட அடக்கிப்புட்டா... நீ என்ன உன் மகளையா கட்டிக் கொடுக்கப் போறே...' என்றார் ஊர் நாட்டாண்மை.
♥'அதென்ன நாட்டாமை அப்படி சொல்லிப்புட்டே... என் செவலைக் காளைய அடக்கிப்புட்டா, என் மாட்டையும் கொடுத்து, கூடவே என் மகளையே அவனுக்கு பரிசாக கொடுக்குறேன்னு சொல்லு! அப்படியாவது எவனாவது என் மாட்டை அடக்குறானான்னு பார்க்குறேன்...' என்றார்.
எத்தனையோ ஜல்லிக்கட்டுகளை கடந்து வந்த செவலைக் காளையை, இதுவரை, யாரும் அடக்கியது இல்லை. அவர் வீட்டில் இருக்கும் முக்கால்வாசி வெண்கலம் மற்றும் வெள்ளிப்பொருட்கள், ஜல்லிக்கட்டில் செவலைக் காளை சம்பாதித்துக் கொடுத்தது. அந்த தைரியத்திலும், குடிபோதையிலும் அம்பையின் அப்பா சவால் விட, அதைக் கேட்டதும், அப்படியே மயங்கி சரிந்தாள் அம்பை.
♥என்ன நடந்தது, அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை செல்வனுக்கு! மாட்டை அடக்கியும் அவனுக்கு பழக்கமில்லை.
அம்பையின் மயக்கத்தை தெளிவித்து, ஆசுவாசப்படுத்துவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. சின்னமனூரைச் சேர்ந்த, 46 வயதான வெள்ளையன் என்ற பீஷ்மன், மாட்டை லாவகமாக மடக்கி, அதன் திமிலை, தன் புஜத்திற்குள் அடக்கி, மைதானத்தை வலம் வந்தான்.
கரிய உருவத்தில், நெடுநெடுவென, கல் தூண் போன்றிருந்த பீஷ்மன், வெற்றி ஆராவாரத்துடன், ஒரு கையில் மாட்டை இழுத்தவாறு, அம்பையை நெருங்கினான்.
தர்மம், நியாயம் அறிந்த நல்லவர்கள் கூட, அம்பை என்ற உயிர் உள்ள மனுஷியின் உணர்வுகளை எண்ணிப் பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, பெண்ணை பெற்றவன், வாக்கு கொடுத்தான்; வென்றவன் பரிசை தட்டிப் போகிறான் என்பது போன்று சாதாரணமாக எடுத்துக் கொண்டனர்.
♥பெண்களின் உள்ளம் மட்டும், இந்த அநியாயத்தை நினைத்து, கண்ணீர் விட்டது.
'இது அநியாயம்... ஒரு பெண்ணை பரிசு பொருளாய் அறிவிப்பதும், அவள் விருப்பம் அறியாமல், மணமுடித்து கொடுக்க நினைப்பதும்...' என, ஒற்றைக் குரலில் ஈனஸ்வரமாய் ஒலித்தது செல்வனின் குரல்.
கண்களில் கண்ணீர் வழிய, பிரமை பிடித்தாற் போல் நின்றிருந்த அம்பையின் கையை பற்றினான், பீஷ்மன். உடனே, கையை உதறிய அம்பை, தன் அப்பாவிடம் ஓடி, 'ஏனப்பா இப்படி செய்தீங்க... நானும், மாடும் உங்களுக்கு ஒண்ணா...' என்று கதறி அழுதாள்.
'இப்ப என்ன நடந்துச்சுன்னு அழறே... யாராலும் அடக்க முடியாத நம்ம செவலைக் காளைய அடக்கிய பெரிய வீரனத் தான் நீ கட்டிக்கப் போறே... இதுக்கு நீ சந்தோஷப்படணும்...' என்றார் அம்பையின் அப்பா.
♥கூட்டத்தில் ஒருத்தி, 'ஆமா... பெரிய வீரன்... அப்பன்காரன் தான் புத்திகெட்டுப் போயி பந்தயம் கட்டுறான்னா, நாம பாதிக் கிழவனாகிட்டோமே... 16 வயசு பச்ச மண்ண பந்தயத்துல ஜெயிக்கிறோமே அத வச்சு எப்படி வாழுவோம்ன்னு நினைக்க வேணாம்...' என்றாள் உரத்த குரலில்!
உடனே பீஷ்மனின் ஊரைச் சேர்ந்த ஒருவர், 'யாரும்மா அது... என்ன பெரிய வயசு... 46 வயசெல்லாம் ஒரு வயசா... எங்க தாத்தா, 70 வயசுல, 18 வயசான என் பாட்டிய கல்யாணம் செய்து, எங்கப்பன பெத்தெடுத்தாரு... பெரிசா பேச வந்துட்டே. ஆம்பளைக்கு என்ன வயசு வேண்டிக் கிடக்கு... பந்தயம்ன்னா பந்தயம் தான், இதுல எல்லாம் நியாயம், தர்மம் பேசக்கூடாது...' என்று சவுண்ட் விட்டார்.
♥'அதெல்லாம் சரிப்பா... இந்த பீஷ்மன் துணிவெளுக்கிற கன்னியம்மாளை காதலிச்சான்னா அவங்க வீட்டுல கண்டிச்ச போது, 'கன்னியம்மாளைத் தான் கல்யாணம் செய்வேன்'ன்னு பிடிவாதம் பிடிச்சதும், இவன் வீட்டுக்காரங்க அந்தப் பொண்ணை அடிச்சே கொன்னு போட்டதும், அந்த கோபத்துல, 'கன்னியம்மாளை தவிர இன்னொரு பெண்ணை கனவுலயும் நினைக்க மாட்டேன்'னு சுடலை மாடன் மீது சத்தியம் செய்து, வைராக்கியமா பிரம்மசாரியாய் இருக்கிறதுனாலே தானே வெள்ளையன்ங்கிர இவனோட பேரு மறைஞ்சு, பீஷ்மன்ங்கிற பேரே வந்துச்சு. அப்படியிருக்கியில இப்ப எப்படி எங்க ஊருப் பொண்ண கல்யாணம் செய்வான்...' என்றார், எங்கள் ஊர்க்காரர் ஒருவர்.
கூட்டத்தை விலக்கி, முன்னால் வந்த பீஷ்மன், 'யோவ்... இந்த வெள்ளையன் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவன்; உயிரே போனாலும், அத மீற மாட்டேன். இவளை நான் எனக்காக வெல்லலே, என் தம்பிக்காகத்தான் ஜெயிச்சிருக்கேன்...' என்றான்.
♥அன்று மாலையே அம்பைக்கும், பீஷ்மனின் தம்பிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து, இரண்டு நாட்களில் சின்னமனூர், பூலாநந்தீஸ்வரர் கோவிலில் திருமணம் என முடிவானது.
மறுநாள் இரவு, யாருக்கும் தெரியாமல், சீலையம்பட்டிக்கு சென்ற அம்பை, செல்வனிடம், 'உன்னைத் தவிர என்னால் வேற யாரையும் கணவனாக நினைச்சுப் பாக்க முடியாது. என்னை எப்படியாவது கல்யாணம் செய்துக்க...' என்று அழுது கெஞ்சினாள்.
♥ஆனால் அவனோ, 'என்னால முடியாது; என் குடும்பத்துக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு. ஊரே கூடி நின்னு வேடிக்கை பாக்க, உங்க அப்பன் உன்னை பந்தயத்துல வச்சு தோத்துப் போனான். முறைப்படி பந்தயத்துல ஜெயிச்சவன், அத்தனை பேர் முன்னாடியும் உன் கையை பிடிச்சு இழுத்தப்ப, ஒரு பேடியைப் போல் பாத்துக்கிட்டு நின்னுருந்தேன். இப்ப, உன்னை ஏத்துக்கிட்டா, சுத்தி இருக்கற ஊர்க்காரங்க, என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தையும் ஏசுவாங்க. நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; என்னை மறந்து, பீஷ்மனோட தம்பிய கல்யாணம் செய்துக்க. அதுதான், உனக்கும், உன் குடும்பத்துக்கும் நல்லது...' என்று கூறி மறுத்து விட்டான்.
♥அன்று, பூலாநந்தீஸ்வரர் கோவிலில் அம்பைக்கு திருமணம். முகூர்த்த நேரம் நெருங்கியும் மாப்பிள்ளை வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இரு வீட்டு உறவினர்களும் பதற்றத்துடன் திருமண சத்திரத்திற்கு வர, எங்கிருந்தோ அவனை இழுத்து வந்தார் உறவினர் ஒருவர்.
அவனோ, 'என்னை என்ன சந்தையில சொத்த கத்திரிக்காய் வாங்கிறவன்னு நினைச்சீங்களா... நடு ராத்தியில அந்த சீலையம்பட்டிக்காரன தேடிப் போயிருக்கான்னா அவனுக்கும், இவளுக்கும் என்ன மாதிரி பழக்கம் இருந்திருக்கும்... எவனையோ மனசுல வச்சுக்கிட்டு, என்கிட்ட தாலி வாங்கி, என் புள்ளைக்கு அம்மாவாக, நான் என்ன கேணப்பயலா... அந்த கதை எங்கிட்ட நடக்காது...' என்று கூறி, அம்பையை மணக்க மறுத்து விட்டான்.
♥பீஷ்மனிடம் நியாயம் கேட்ட போது, 'நடுராத்திரியில ஒருத்தன தேடிப் போனவள, என் தம்பி எப்படி கல்யாணம் செய்வான்... ஒழுக்கங்கெட்டதுகள பந்தயப் பொருளா வச்சு, அடுத்தவன் தலையில கட்டுறது உங்க ஊர் வழக்கமோ...' என்றான், எகத்தாளமாக!
இதனால், இருதரப்புக்கும் ஏற்பட்ட கைகலப்பில், எங்கள் ஊர்க்காரர் ஒருவர் இறக்க, திருமண மேடை, இழவு மேடையானது.
♥அதன்பின், சில மாதங்கள் கடந்த நிலையில், செல்வனிடம் சென்ற அம்பையின் அப்பா, 'உன்னை காரணம் காட்டி, பீஷ்மனோட தம்பி, என் மகள கல்யாணம் செய்ய மறுத்துட்டான். நீ தான் அவளுக்கு வாழ்க்கை கொடுக்கணும்...' என்றார்.
'இன்னொருத்தனுக்கு நிச்சயமானவள, நான் கல்யாணம் செய்ய மாட்டேன்...' என்று நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டான், செல்வன்.
♥அவனிடம் எவ்வளவோ மன்றாடியும், அவன் கேட்பதாக இல்லை.
தன் வாழ்வில் ஏற்பட்ட திடீர் சூறாவளியால், நிலைகுலைந்து போன அம்பை, அதன்பின், வீட்டிற்குள் முடங்கிப் போனாள்.
மகளின் நிலைக்கு தன் குடிப்பழக்கமே காரணம் என நினைத்து, மேலும் குடித்து குடித்து இறந்து போனார், அவளது அப்பா. தனிமரமான அம்பை, அந்த பெரிய வீட்டின் இருட்டு அறையில், பிசாசை போல, சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருப்பாள்.
இச்சம்பவத்திற்கு பின், சில மாதங்களிலேயே திருமணமாகி, வெளியூர் சென்று விட்டேன். எப்பவாது ஊருக்கு வரும் போது, அம்பையை பார்க்கப் போவேன். தலையை, 'பரக்பரக்'கென சொறிந்தபடி, மலங்க மலங்க என்னை பார்ப்பாள். அவள் தம்பியிடம் இரண்டொரு வார்த்தை பேசி, கனத்த மனதுடன் திரும்புவேன்.
காலஓட்டத்தில் என் தந்தை இறக்க, வெளிமாநிலத்தில் வேலை செய்யும் என் அண்ணன் வீட்டில் அம்மா செட்டிலாகி விட, ஊருக்கும், எனக்குமான தொடர்பு நரம்பு அறுந்து போனது.
♥யாராவது ஊர்க்காரர்கள் என்னை தேடிவரும் போது, அம்பையை பற்றி விசாரிப்பேன். அப்படி விசாரித்த போது, சமீபத்தில் என் வீட்டிற்கு வந்திருந்த உறவுக்காரர் ஒருவர் கூறியது... 'அவ தம்பிக்கு கல்யாணம் ஆகிற வரை அம்பைய நல்லாத் தான் கவனிச்சுக்கிட்டான். கல்யாணமான பின், அவன் பொண்டாட்டி அம்பைய வீட்ட விட்டு துரத்தி, மாட்டுக் கொட்டையில தங்க வச்சுட்டா. அதோட, ஆடு மேய்ச்சுட்டு வந்தாத் தான் சோறு போடுவா... பாவம்... அவ தலையெழுத்து இந்த வயசான காலத்துல ஆடு மேய்க்கிறா...' என்றார்.
இதைக் கேட்டதும் என் மனம் கனத்துப் போனது. என்னால் அம்பைக்கு எப்படி உதவ முடியும் என்று தெரியவில்லை. நீண்ட யோசனைக்கு பின், கணவரிடம் என் எண்ணத்தை சொல்லி ஒப்புதல் பெற்று, அவளை அழைத்து செல்வதற்காக வந்துள்ளேன்.
♥அம்பைக்கு நேர்ந்த அநியாயத்தை நினைத்து, என் மனசு பொங்கும் போதெல்லாம், மகாபாரதத்து அம்பை தான் என் நினைவுக்கு வருவாள். ஆனால், அந்த அம்பை, இதிகாச தலைவி; போராட்ட குணம் உள்ளவள். அதனால், அவளால், சிவனிடம் வரம் பெற்று, மறுபிறவியில் சிகண்டியாக மாறி, பீஷ்மனை பலி வாங்க முடிந்தது. இவள், சாதாரண கிராமத்து விவசாயியின் மகள், இவளால் என்ன செய்ய முடியும் என, என் மனம் புலம்பித் தவிக்கும்.
♥ஆனால், தர்ம தேவதைக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று யாரும் இல்லையே... எந்த ஜல்லிக்கட்டின் மூலம் அம்பையின் வாழ்வு நிர்மூலமானதோ, அதேபோன்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இறந்தான் பீஷ்மன். செல்வன் சந்ததியிழந்தான். பீஷ்மனின் தம்பி, அவன் மனைவி, அவனுக்கு துரோகம் இழைத்ததை கண்ணால் கண்டு வெகுண்டு, அவளையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான் என, கேள்விப்பட்ட போது, மனம் குரூரமாக சிறிது ஆறுதல் அடைந்தாலும் அம்பை எதற்காக இன்னும் தண்டனை அனுபவித்து வருகிறாள் என்பது காலதேவனுக்கே வெளிச்சம்!
♥காலங்கள் மாறினாலும், காட்சிகள் வேறுபட்டாலும், யுகங்கள் தோறும் அம்பைகள் பிறப்பதும், சம்பந்தமே இல்லாமல் அவர்கள் தண்டிக்கப்படுவதும் தொடர் கதையாக நீள்வது, பெண்ணினத்திற்கு விதிக்கப்பட்ட சாபமோ!
வேகமாக நடந்து சென்று, அம்பையின் கையை பிடித்து நிறுத்தினேன்.
என்னை உற்றுப் பார்த்தவளின் கண்ணில் ஒரு மின்னல்! என் மனதில் சந்தோஷம். கிழித்துப் போடப்பட்ட நாராய் போன அவள் வாழ்வின் எஞ்சிய நாட்கள், இனி என்னுடன் அமைதியாக கழியட்டும்!
♥ப.லட்சுமி

Post a Comment

0 Comments